அம்மா சொல்லி இலக்சுமிய கும்பிட்டால் செல்வம் வந்துவிடுமா?. நடிகர் அரவிந்தசாமி பரிந்துரைத்த 'The Psychology of Money எனும் பணம்சார் உளவியல் புத்தகத்தைப் படித்தால் பணம் சேர்ந்து விடுமா ?
நிச்சயமாக இல்லை. அதற்கான உழைப்பு வேண்டும்.அது தேவை எனும் அறிதல் வேண்டும். அதனால்தான் நவராத்திரி நாட்களில் முதல் மூன்று திதிகளில், ஆரோக்கியத்தையும், தைரியத்தையும் தரும் சக்தியாக துர்க்கையையும்,
உழைப்பின் உயர்வை செல்வமெனத் தரும் சக்தியான இலக்சுமியை இடைநிலையாகவும், ஆரோக்கியத்தாலும், உழைப்பாலும் பெறும், நிதியத்தை அறிவார்ந்த செல்வமாக்கி நிறைவாக வாழ்ந்திட தேவையான நல்அறிவுக்கான சக்தியாக சரஸ்வதியை இறுதி மூன்று நாட்களில் வகுத்து, வழிபடச் சொன்னார்கள்.
இந்த வழிபாட்டு வரிசைக்குள்ளேயே நம் வாழ்க்கை ஒழுங்கு நிலை மறைந்திருக்கிறது. நவராத்திரி நாட்களில் நாம் உய்ந்துணர்வது, உணரவேண்டியது வாழ்வியல் அறிவு. அந்த வாழ்வியலின் சாரமே நாம் அழகாக , படிப்படியாக, அடுக்கி வைத்து அழகு பாரத்து வழிபடும் நவராத்திரிக் கொலு.
அந்த வாழ்வியலுக்கான அறிவு, தூயதாக இருக்க வேண்டியே அறிவின் சக்திக்கு வெள்ளை வண்ணத்தை கலையாக உடுத்தி வழிபட்டார்கள் நம் முன்னோர்கள். அதனையே
வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் – வெள்ளை
அரியா சனத்தில் அரசரோ(டு) என்னைச்
சரியா சனம்வைத்த தாய். எனப்பாடினார் கவி காளமேகம்.
ஆண்டவனின் சக்தியாகிய அம்மையைத் துதிப்பது போல், நம் இல்லங்கள் தோறும் இருக்கின்ற அம்மாக்களையும் போற்றுவோம். நம் அகம் சிறக்கும். நல்லகமும் சிறக்கும்.