நவராத்திரி காலம் முப்பெரும் சக்திகளை வழிபடும் புண்ணிய நாட்களாகும். சக்தி வடிவங்களில் பிரதானமாக போற்றப்படுபவள் ஸ்ரீ துர்க்கை. பூலோக வாழ்வில் நமக்கு ஏற்படும் எவ்வித ஆபத்துக்களையும் தீர்க்கக் கூடிய மகாசக்தி துர்க்கை.
துர்க்கம் என்றால் அகழி. அகழி எவ்வாறு பகைகளை நெருங்கவிடாமல் நம்மை காக்கின்றதோ, அவ்வாறு நம்மை துன்பங்களில் இருந்து காப்பவள் துர்க்கையாகிய ஸ்ரீ துர்க்காதேவி. சிவபெருமானின் சக்திரூபம் நான்கு வடிவங்களில் அருள்புரிகின்றார்கள். அவை, "போகேச பவானி புருஷேச விஷ்ணு, கோபச காளீ ஸமரேச துர்கா, " என்பதாகும். அதாவது.சிவனின் அருள்சக்தியாக பவானியும், புருஷ சக்தியாக செயல்படும்பொழுது விஷ்ணுவாகவும், கோபசக்தியாக செயல்படும்பொழுது காளியாகவும், வீரசக்தியாக, வெற்றி சக்தியாக செயல்படும்பொழுதும் துர்க்கையாக செயல்படுகின்றாள். எனவே துர்க்கை வழிபட வெற்றி கிட்டும் என்பது உறுதி. அதனால்தான் " ஜெய ஜெய தேவி துர்காதேவி சரணம் " எனப் போற்றுகின்றார்கள்.
துர்கமன் என்ற அசுரனை அழித்ததால் துர்க்கை என்றும், நம் துக்கத்தை போக்குவதால் துர்க்கா என்றும் பெயர் பெற்றாள். தேவீ மஹாத்மியம், "ஸர்வ ஸ்வரூபே ஸர்வேசே ஸர்வசக்தி ஸமன்விதே, பயேப்பஸ் த்ராஹிநோ தேவி துர்கே தேவி நமோஸ்துதே " என்று புகழ்கின்றது. அதாவது அனைத்து வடிவமாகவும் விளங்குபவளே, அனைத்தையும் ஆள்பவளே, அனைத்து சக்தியும் பொருந்தியவளே, பயங்கரமான சூழ்நிலைகளில் இருந்து எங்களை காப்பாற்ற வரும் துர்கா தேவியே உனக்கு நமஸ்காரம். எனவே ஆபத்தில் இருந்து நம்மை காப்பவள் துர்க்கையே.
இவளை, துக்கஹந்தரீ -அதாவது துக்கத்தை போக்குபவள் என்று லலிதா சஹஸ்ரநாமம் புகழ்கின்றது. எனவே துர்கையை சரணடைபவன், எத்தகைய ஆபத்தில் இருந்தும் காக்கப்படுகின்றான். இதனை வேதம், "துர்க்காம் தேவீம் சரணமஹம் பிரபத்யே ஸுதரஸிதரஸே நமஹ " என்று கூறுகின்றது.
துர்க்கா தேவி பல ரூபங்களில் அருள்புரிகின்றாள்.
சூலினி துர்க்கா.,
ஜாதவேதோ துர்க்கா,
சாந்தி துர்கா,
சபரி துர்கா,
ஜ்வாலா துர்கா,
லவண துர்கா,
தீப துர்கா,
ஆஸுரி துர்கா,
ஜெய துர்கா,
திருஷ்டி துர்கா,
மூல துர்கா
என்று பல ரூபங்கள் உண்டு.
முற்காலத்தில் நம் மன்னர்கள் போர்களில் வெற்றிபெற துர்க்கையை வழிபட்டுவந்தனர். அரண்மனை கோட்டையை சுற்றி அகழி அருகே இருந்தவளுக்கு ஜலதுர்க்கா என்றும், நாட்டின் எல்லையில் உள்ள மலையில் இருந்தவளுக்கு கிரிதுர்க்கா என்றும்., கிராம எல்லையில் பாதுகாக்கும் அன்னையாக காட்டில் இருந்தவளுக்கு வனதுர்கா என்றும் பெயர்.
இன்றும் கிராமங்களில் வனதுர்கையை பலபெயர்களில் கிராமதேவதையாக வழிபட்டு வருகின்றார்கள். இவளே கிராமத்தை காக்கும் தாய் ஆவாள். சோழர்களின் பழையாறை அரண்மனையில் இருந்து அருள்புரிந்த கோட்டை துர்க்கையே, இன்று பட்டீஸ்வரம் கோயிலில் மஹா துர்க்கையாக அருள்புரிகின்றாள்.
கோயில் நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது தாராசுரம். சோழர் நகரமாக இருந்த தாரசுரத்தில் உள்ள பட்டீஸ்வரம். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அற்புதத் திருத்தலம். சோழர் குல இளவல் ஆதித்த கரிகாலனுக்கு இஷ்ட தெய்வமாகவும், சோழர்களின் குலதெய்வமாகவும் திகழ்ந்தவள் பட்டீஸ்வரம் துர்க்கை என ஸ்தல வரலாறு கூறுகிறது.
உமையவள், சாப விமோசனம் பெறுவதற்காக, பூலோகம் வந்து இங்கே தவமிருந்து சிவபூஜை செய்தாள். பார்வதிதேவிக்கு உதவுவதற்காக காமதேனுவின் மகளான பட்டியும் வந்து பணிவிடைகள் செய்தாள். சிவனுக்கு அபிஷேகிக்க, பால் சுரந்து தந்தாள். மண்ணால் செய்யப்பட்ட சிவலிங்கத் திருமேனிக்கு பாலபிஷேகம் செய்து, பூஜித்து வந்தாள் பார்வதி. பார்வதியுடன் பட்டியும் வழிபட்ட தலம் என்பதால், இந்த ஊருக்கு பட்டீஸ்வரம் எனப்பெயர் அமைந்தது.
பட்டீஸ்வரம், பிரமாண்டமான சிவாலயம். எல்லா சிவாலயங்களிலும் கோஷ்டத்தில்தான் தரிசனம் தருவாள் துர்கை. மகாவிஷ்ணு ஆலயங்களிலும் கோஷ்டத்தில்தான் இருப்பாள். அங்கே அவளுக்கு விஷ்ணு துர்கை என திருநாமம் உண்டு. ஆனால் பட்டீஸ்வரத்தில் தனிச்சந்நிதியில், அற்புதமாகக் காட்சி தருகிறாள். நின்ற திருக்கோலத்தில் ஒய்யாரமாக அழகு ததும்ப மூன்று கண்களையும், எட்டு திருக்கரங்களுடனும், எருமை முகமுடைய மகிஷாசுரனைக் காலில் மிதித்தபடி நிமிர்ந்த, நின்றகோலத்தில், சாந்தமாக காட்சி தருகிறாள். அவளின் இதழோரம் ததும்பும் புன்னகையே அவளை சாந்த சொரூபினி எனச் சொல்கிறது.
இந்த நவராத்திரி நன்னாளில் சாந்தஸ்வரூபினியான பட்டீஸ்வரம் துர்க்கையை வழிபட்டு நம் துன்பங்களை போக்கிக்கொள்வோம்.