தல அஜித்தின் வசூல் வலிமையைக் காட்டுவதற்கு காத்திருக்கும் அவருடைய 60-வது படம் 'வலிமை'. தற்போது எடுத்தவரை இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.
ஹைதராபாத்தில் ராமோஜி ராவ் திரைப்பட நகரில் படப்பிடிப்பின் நடந்தபோது தல அஜித்குமார், தான் தங்கியிருந்த இடத்திலிருந்து படப்பிடிப்பு தளத்துக்கு தனது பைக் அல்லது சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்து சென்றதை அவருடைய ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை.
இதை நினைவு கூர்ந்து வலிமை படத்தின் வில்லனாக நடித்துள்ள கார்த்திகேயா கும்மகொண்டா தனது சமூக வலைதளத்தில் அஜித்தைப் பாராட்டி பதிவு ஒன்றை இட்டுள்ளார். இவர், தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற 'ஆர்.எக்ஸ்.100' படத்தின் கதாநாயகன். அஜித்தின் தீவிர ரசிகரான இவர் 'வலிமை'யில் சிக்ஸ்பேக் உடலுடன் அஜித்துடன் மோதி சண்டை செய்துள்ளார். அஜித்தும் கார்த்திகேயாவும் மோதும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி ஸ்பெயினில் படமாக்கப்பட இருக்கிறது.
குடும்ப உணர்வுகளுடன் ஆக்ஷனை கச்சிதமான கலவையில் இயக்குநர் கொடுத்துள்ளதாக இயக்குநர் வினோத் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'வலிமை' படத்துக்காக சண்டை இயக்குநர் திலீப் சுப்பராயன் இதுவரை ஐந்து சண்டைக்காட்சிகளை படம்பிடித்துள்ளார். அவற்றில் மூன்று சண்டைக்காட்சி மற்றும் பைக் சேஸிங் காட்சிகளை ஹைதராபாத்திலும், மீதமுள்ள இரண்டு ஆக்ஷன் பிளாக்குகளை சென்னையிலும் எடுத்திருக்கிறார்களாம். சென்னையில் எடுக்கப்பட்டது பாதுகாப்பு காரணங்களுக்காக எடுக்கப்பட்ட க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி என தெரியவருகிறது. இதைதான் ஸ்பெயினில் ரீஷூட் செய்ய வேண்டும் என வினோத் கூற அதை அஜித்தும் தயாரிப்பாளர் போனி கபூரும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால், செப்டம்பருக்குள் ஸ்பெயினில் படப்பிடிப்பு நடத்த விசா கிடைக்காவிட்டால், சென்னையில் எடுத்த கிளைமாக்ஸ் காட்சியையே பயன்படுத்திவிடலாம் என்ற முடிவுக்கு படக்குழுவினர் வந்துவிட்டார்களாம். இதனால் இந்தச் சண்டைக்காட்சியில் கிராபிக்ஸ் வேலைகளை வேகமாக முடிக்க முனைந்து வருகின்றனர்.