free website hit counter

சித்தாந்தங்கள் வெவ்வேறு… நலன் ஒன்று ?

பார்வைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கை அரசியலில் இடதுசாரி அரசியல் அடையாளத்துடன் உயர்ந்திருக்கும் ஜனாதிபதி  அநுர குமார திசநாயக்க (Anura Kumara Dissanayake) மற்றும் இந்தியாவில் வலதுசாரி தேசியவாத அரசியலை முன்னின்று நடத்தும் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi). இந்த இரு வேறு அரசியல் சித்தாந்தங்கள் கொண்ட இந்த இரு தலைவர்களின்  சந்திப்பு, மற்றும் இணக்கங்கள், வெறும் இருதரப்பு நட்புறவாக மட்டுமல்லாது, அது தமிழர் அரசியல் எதிர்காலத்தின் மீதும் தாக்கம் செலுத்தக்கூடிய ஒரு புவிசார் அரசியல் தருணமாக மாற்றம் பெறுமா? 

இந்த உறவு தமிழர் உரிமைகளை வலுப்படுத்துமா?. அல்லது மீண்டும் ஒரு “நிலைத்தன்மை” என்ற பெயரில் அரசியல் சமரசத்தை உருவாக்குமா? இது வெறும் நட்பா ? அல்லது நெருக்கடி மேலாண்மையா?

தென்னாசிய அரசியலில் இப்போது உருவாகியிருக்கும் சுவாரஸ்யமான எதிரொலி என்னவென்றால்  இலங்கையில் இடதுசாரி அரசியல் அடையாளத்துடன் அதிகாரத்தை ஏந்தியுள்ள  இலங்கை ஜனாதிபதி, இந்தியாவில் வலதுசாரி தேசியவாத அரசியலை வலுவாக நிறுவியுள்ள இந்தியப் பிரதமர். ஒருவர் சமூகநீதி, அரசியல் சீரமைப்பு, “நியோ-லிபரல்” பொருளாதாரத்தை விமர்சிக்கும் குரல். மற்றொருவர் சந்தைமய வளர்ச்சி, வலுவான மைய ஆட்சி, பாதுகாப்பு-முன்னுரிமை தேசிய அரசியல். இந்த இரு வேறு அரசியல் நிலைப்பாடுகளும், சந்திக்கும் இடமே இந்தியா–இலங்கை உறவு. இங்கு வலுவக எழும் கேள்வி, சித்தாந்தம் உறவை வடிவமைக்குமா? அல்லது நாட்டு நலன் அதை மீறுமா?


இந்திய – இலங்கை உறவினை வரலாறு, 13வது திருத்தம், அமைதி படை அனுபவம், அநுரா–மோடி காலத்தின் அரசியல் சோதனை எனும் வகையில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இலங்கை அரசியலில் இடதுசாரி அடையாளத்துடன் ஆட்சியை ஏற்றுள்ள ஜனாதிபதி  அநுர, மற்றும் இந்தியாவில் வலதுசாரி தேசியவாதத்தை உறுதிப்படுத்திய பிரதமர் மோடி எனும், இந்த இரு தலைமைகளின் கீழ் இந்தியா–இலங்கை உறவு ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது என்பது சமகாயதார்த்தம். ஆனால் இந்த உறவின் ஆழ்நிலையை அல்லது உண்மையினைப் புரிந்துகொள்ள, 1987க்கு திரும்பிப் பார்க்க வேண்டியது அவசியம்.

1987 ஒப்பந்தமும் அதன் நீண்ட நிழலும்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, இலங்கை முன்னாள் ஜனாதிபதி J. R. ஜெயவர்த்தனா ஆகியோரின் காலத்தில், 1987 ஆண்டு,  கையெழுத்தான இந்தியா – இலங்கை ஒப்பந்தம், இரு நாடுகளின் உறவை மட்டுமல்ல; இலங்கையின் அரசியல் அமைப்பை மாற்றியமைத்த ஒரு முக்கிய தருணம். அந்த ஒப்பந்தத்தின் பலனாக உருவானதே 13வது அரசியலமைப்பு திருத்தம் (Thirteenth Amendment to the Constitution of Sri Lanka)

13வது திருத்தம்:

மாகாண சபைகள் உருவாக்கம், காவல் மற்றும் நில அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் சட்ட அடித்தளம், வடக்கு–கிழக்கு இணைப்பு (பின்னர் பிரிக்கப்பட்டது). ஆனால் உண்மை என்ன? இது ஒரு முழுமையான அதிகாரப் பகிர்வு அல்ல; மத்திய அரசின் கட்டுப்பாட்டுடன் கூடிய வரையறுக்கப்பட்ட நிர்வாக மையச்சிதறல். அப்படியிருந்தும், காவல் அதிகாரமும் நில அதிகாரமும் முழுமையாக நடைமுறைக்கு வரவேயில்லை. வடக்கு – கிழக்கு இணைப்பு நிலைத்திருக்கவில்லை. இதனால் 13வது திருத்தம்  என்பது தீர்வா? அல்லது ஒரு இடைக்கால அரசியல் சமரசமா? — என்ற கேள்வி இன்னும் திறந்தே உள்ளது.

இந்திய அமைதி படை: பாதுகாப்பு தலையீட்டின் காயம் (Indian Peace Keeping Force)

1987–1990 காலகட்டத்தில் இந்திய அமைதி படை (IPKF) இலங்கையில் தலையீடு செய்தது. ஆரம்பத்தில் அமைதியை நிலைநிறுத்தும் முயற்சி என கூறப்பட்டது. ஆனால் விரைவில் அது போராட்டமாக மாறியது.இந்திய படையினர் மற்றும் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கிடையிலான மோதலாக மாறியது. இதனால், பொதுமக்கள் பாதிப்பு, இருதரப்பு நம்பிக்கை சரிவு, ஏற்பட்டது. இந்த அனுபவம் தமிழர் மனநிலையில் இந்தியா குறித்த இரட்டை உணர்வை உருவாக்கியது. இந்தியா  ஒரு பாதுகாப்பு சக்தி -இந்தியா  ஒரு தலையீட்டு சக்தி எனும்  வரலாறு இன்னும் தமிழ்மக்களின் அரசியல் குறித்த நினைவகத்தில் உயிருடன் உள்ளது.

13வது திருத்தம் இன்று எங்கே நிற்கிறது?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு, பல முறை 13வது திருத்தத்தின் “முழுமையான அமலாக்கம்” குறித்து வலியுறுத்தியுள்ளது.  “முழுமையான அமலாக்கம்” என்றால் என்ன? காவல் அதிகாரப் பகிர்வு, நில மேலாண்மை அதிகாரம், நிதி சுயாட்சி, இவை அனைத்தும் இலங்கை மத்திய அரசியல் கட்டமைப்பில் இன்னும் எதிர்ப்புக்கு உள்ளவை.

இந்நிலையில், அநுர தலைமையிலான அரசு, 13வது திருத்தத்தை முழுமையாக செயல்படுத்துமா? அல்லது “அமைப்புச் சீரமைப்பு” என்ற பெயரில் புதிய மாதிரியை முன்வைப்பதா? இடதுசாரி அரசியல் கோட்பாட்டில் அதிகார மையச்சிதறல் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், இலங்கை அரசியல் நடைமுறையில் “ஒற்றை தேசிய அரசு” சிந்தனையே  ஆழமாக பதிந்துள்ளது.

இந்தியா – இலங்கை உறவு - பாதுகாப்பு vs நீதி

இந்தியாவின் முக்கிய முன்னுரிமைகள், இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பு, சீனாவின் செல்வாக்கு கட்டுப்பாடு, பிராந்திய நிலைத்தன்மை என்றுள்ளது. இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகள், அதிகாரப் பகிர்வு, நில உரிமை, இராணுவமயமாதல் குறைப்பு அரசியல் சுயாட்சி என்பதாகும்.

இங்கே மோதல் உருவாகும் இடம் எதுவெனில், நிலைத்தன்மை முன்னுரிமை பெற்றால், நீதி பின்தள்ளப்படும் அபாயம் உள்ளது. இந்தியா, 1987 அனுபவத்திற்குப் பிறகு நேரடி தலையீட்டைத் தவிர்க்க விரும்புகிறது. ஆனால் முழுமையான மௌனமும் அதன் நெறிமுறை தாக்கத்தை பாதிக்கக்கூடும்.

அநுரா–மோடி காலத்தின் அரசியல் சோதனை

அநுராவின் இடதுசாரி அரசியல் சமூகநீதியை வலியுறுத்துகிறது. தமிழர் அரசியல் கேள்வியில் தைரியமான சீரமைப்பு இல்லாமல் அந்த அரசியல் சமூகநீதி அடையாளம் நிலைக்குமா?

மோடி அரசியலில், இந்தியா தென்னாசியாவில் “பொறுப்பான தலைமை”யை நிரூபிக்க விரும்பினால், 13வது திருத்தத்தை ஒரு குறைந்தபட்ச அடித்தளமாக மட்டுமல்ல, உண்மையான அதிகாரப் பகிர்வின் துவக்கமாகக் காண வேண்டிய கட்டாயம் உள்ளது. இது எவ்வாறு சாத்தியமாகலாம்? 

தீர்வுக்கான மூன்று அரசியல் பாதைகள்: 

(1) 13வது திருத்தம் – குறைந்தபட்ச ஒப்பந்தம்

முழுமையான அமலாக்கம், காவல் மற்றும் நில அதிகாரப் பகிர்வு — இது இருதரப்பு உறவை நம்பிக்கையூட்டும் திசைக்கு கொண்டு செல்லும்.

(2) மாற்று அரசியலமைப்பு மாதிரி

அநுரா அரசு புதிய அரசியலமைப்பு சீரமைப்பை முன்வைத்தால், அது 13வது திருத்தத்தை மீறும் ஒரு வாய்ப்பாக இருக்கலாம்  அல்லது அதை தளர்த்தும் அபாயமாகவும் இருக்கலாம்.

(3) நிலைத்தன்மை சமரசம்

பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு முன்னுரிமை பெற்று, தமிழர் அரசியல் கேள்வி குறைந்த அளவில் மட்டுமே பேசப்படும்.

வரலாறு மீண்டும் திரும்புமா ?

1987 ஒப்பந்தம் ஒரு அரசியல் சமரசமாக தொடங்கியது.IPKF அனுபவம் ஒரு காயமாக முடிந்தது. 13வது திருத்தம் ஒரு அரைநிலை தீர்வாகவே நிற்கிறது. இப்போது அநுரா–மோடி காலத்தில் இது ஒரு வாய்ப்பாக உருவாகலாம் அல்லது இன்னொரு ஒத்திவைப்பாகவும் மாறலாம். ஆனால் இதனைச் சாத்தியமாக்குவதற்கு இங்கு சித்தாந்த வேறுபாடு  முக்கியமல்ல. முக்கியமானது  அதிகாரப் பகிர்வில் தைரியம், பாதுகாப்பு அரசியலில் நுணுக்கம், நீதியை நிலைத்தன்மைக்கு மேலாக முன்னிறுத்தும் மனநிலை. ஆனால் தமிழர் அரசியல் கேள்வி தீர்க்கப்படாமல் இந்தியா – இலங்கை உறவு முழுமையான நம்பிக்கையை அடையாது.

வரலாறு காத்திருக்கிறது. இந்த தலைமுறை 13வது திருத்தத்தை உயிர்ப்பிக்குமா? அல்லது அதை வரலாற்றின் ஒரு குறிப்பு மட்டுமாக விட்டுவிடுமா?

 

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula