விலங்கினங்களில் மனிதனின் தனித்துவம் பேசும் ஆற்றல். மிக நீண்ட பரிணாம வளர்ச்சியின், உறவாடல் அல்லது தொடர்பாடலில் உருவான பேச்சு, சிறப்புற்று மொழியானது.
சமூகங்களிற்கான கலாச்சார விழுமியங்களின் அடிப்படையில் மொழி, இலக்கியமானது. சமூகங்களின் உறுதிநிலைக்கு, மொழியின் நிலைகுலையா இருப்பு அவசியம். ஒவ்வொரு மனிதனும் தாயின் கருவிற் குழந்தையாக வளர்கையில், உணர்வுகளைப் புரியத் துவங்குகையில், மொழியுடனான பரிச்சயம் பற்றிக் கொள்கிறது. அதுவே தாய்மொழியாகிறது. நம் தாய்மொழி தமிழ்.
பன்னாட்டு தாய்மொழி நாளாக பெப்ரவரி 21 ம் திகதியை யுனெஸ்கோ அமைப்பு 1999 ம் ஆண்டில் அறிவித்ததைத் தொடர்ந்து , 2000 ம் ஆண்டு முதல் பெப்ரவரி 21 ம் திகதி சர்வதேச தாய்மொழி நாளாக உலகம் முழுவதிலும் கடைபிடிக்கப்படுகிறது.
பெப்ரவரி 21ந்திகதியைப் சர்வதேச தாய்மொழி தினமாக அறிவிப்பதற்கு ஒரு வரலாற்றுத் தொடர்பு உண்டு. 1947 ம் ஆண்டில் தற்போது வங்காளதேசமாக இருக்கும் கிழக்கு பாக்கிஸ்தான் மக்கள், அவர்களது தாய் மொழியான வங்காள மொழியை தேசிய மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டுமென்று கோரினார்கள். இதற்காக, டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் பொது மக்களின் ஆதரவுடன், மாபெரும் பேரணிகளையும் கூட்டங்களையும் ஏற்பாடு செய்தனர். போராட்டத்தை முடக்குவதற்காக பாக்கிஸ்தான் அரசாங்கம் பொதுக் கூட்டத்தையும் பேரணிகளையும் தடை செய்தது. 1952 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதி நடைப்பெற்ற பேரணியில் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டில் சில மாணவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். தாய்மொழிக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த இந்த நிகழ்ச்சி வரலாற்றில் பதிவாகியது.
இதற்குப் பிறகு வங்காளத் தேச மக்கள் இந் நாளை ஓர் துயரம் தோய்ந்த நாளாகக் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். அவர்கள் தாய்மொழிக்காக உயிரீந்த மாணவ்ரின் நினைவிடமான சாகிது மினாரில், ஆண்டுதோறும், உயிர்த்தியாகம் செய்த மாணவர்களுக்கான, மதிப்பையும் நன்றிக் கடப்பாட்டையும் நினைவேந்தலூடாக வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போதும் வங்காளத் தேசத்தில் பன்னாட்டுத் தாய்மொழி நாள் ஒரு தேசிய நாளாகவே கடைபிடிக்கப்படுகிறது.
சர்வதேச தாய்மொழி தினம் தொடர்பில், வங்க தேச அரசு யுனெசுக்கோவுக்கு வைத்த முன்மொழிவை, யுனெசுக்கோ 20 ஆம் பொதுமன்றம் 1999 ஆண்டு நவம்சர் 17 ஆம் நாளன்று ஒருமனதாக ஏற்று, "ஒவ்வோராண்டும் பெப்ரவரி 21 ம் நாளை பன்னாட்டுத் தாய்மொழி நாளாக உலகமுழுதும் கடைபிடிக்கலாம்" எனத் தீர்மானித்தது.
உலகச் சுழற்சியின், வேகமும், சுருங்கலும், அனைத்து மொழிகளையும், குறுக்கி வருகிறது. தமிழ்மொழி மட்டும் இதற்கு விதிவிலக்கானதல்ல. ஆயினும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே, குறுகத் தறித்த குறளினுடாக, வள்ளுவன் தமிழில் வாழ்வியலைப் பாடியுள்ளான். தமிழ் மொழியின் சொல்வளம் அதற்கு முக்கிய காரணம். நம் தாய்மொழியின் வளம் குறையாதிருக்க வேண்டுமாயின், அதன் சொற்களும், சொல்லாடல்களும், மறவாதிருக்க வேண்டும். அதற்கு நாம் தமிழைத் தொடர்ந்து உச்சரிக்க வேண்டும்.