உலகம் மீண்டும் ஒரு ஆபத்தான சமநிலைக்குள் நுழைகிறதா? உலக அரசியல் வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ள ஒன்று உண்டு.பெரும் போர்கள் பெரும்பாலும் “தடுக்கலாம்” என்று கருதப்பட்ட தருணங்களில்தான் வெடிக்கின்றன.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்போதைய பதற்றமும் அத்தகைய ஆபத்தான கட்டத்திலேயே பயணிக்கிறது.இது இரு நாடுகளுக்கிடையிலான பகை மட்டும் அல்ல.மத்திய கிழக்கின் எதிர்காலம், ஐரோப்பாவின் பாதுகாப்பு, உலக பொருளாதார நிலைத்தன்மை — இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் அலைக்கழிக்கும் உலகளாவிய அரசியல் நெருக்கடி இது.
ஒரு நீண்ட பகையின் அரசியல் பின்னணி
1979-ஆம் ஆண்டு ஈரானில் நடந்த இஸ்லாமியப் புரட்சி, அமெரிக்கா – ஈரான் உறவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. மேற்கத்திய ஆதிக்கத்திற்கு எதிரான அரசியல் அடையாளமே ஈரானின் புதிய ஆட்சியின் அடிப்படையாக மாறியது. அதற்கு நேர்மாறாக, மத்திய கிழக்கில் தனது செல்வாக்கைத் தக்கவைக்க அமெரிக்கா முயன்றது. அந்த நாளிலிருந்து, ஈரான், அமெரிக்காவை ஆக்கிரமிப்பு சக்தி எனக் காண்கிறது. அமெரிக்கா, ஈரானை பிராந்திய அசாதாரணத்தின் மையம் எனக் கருதுகிறது . இந்த பரஸ்பர அவநம்பிக்கையே, இன்று வரை தீராத அரசியல் முடிச்சாக உள்ளது.
அணு திட்டம்: மோதலின் மையக் கேள்வி
ஈரானின் அணு திட்டம் குறித்த விவகாரம், இந்த பதற்றத்தின் இதயத்தில் இருக்கிறது. ஈரான் “அமைதிக்கான அணு ஆற்றல்” என வாதிடும் போது, அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் “அணு ஆயுத பாதை” என்ற அச்சத்தை முன்வைக்கின்றனர். 2015-இல் செய்யப்பட்ட அணு ஒப்பந்தம் (JCPOA), போர் அச்சத்தை தற்காலிகமாக அடக்கியது.ஆனால் அந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதன் மூலம், அரசியல் நம்பிக்கையின் கடைசி பாலமும் இடிந்து விழுந்தது.இன்று, இரு தரப்பும் மீண்டும் முரண்பட்டு நிற்கின்றன. இராணுவ எச்சரிக்கைகள், பொருளாதார தடைகள், அரசியல் மிரட்டல்கள், என பழைய பாதையிலேயே நகர்கின்றன.
நேரடி போர் இல்லாத போர்,Proxy War யதார்த்தம்
அமெரிக்கா மற்றும் ஈரான், நேரடியாக மோதவில்லை. ஆனால் ஈராக், சிரியா, லெபனான், யேமன் போன்ற நாடுகள், இந்த மோதலின் போர்க்களங்களாக மாறியுள்ளன. இது; பிராந்திய நாடுகளின் அரசியல் சுயாதீனத்தை குறைக்கிறது. தீவிரவாத அமைப்புகளுக்கு இடம் அளிக்கிறது. மத்திய கிழக்கை நிரந்தர அசாதாரண நிலைக்குள் தள்ளுகிறது .இந்த Proxy War அமைப்பே, எப்போது வேண்டுமானாலும் நேரடி போராக மாறக்கூடிய எரியும் நெருப்புக் குவியல் ஆக உள்ளது.
மத்திய கிழக்கின் சூழ்நிலை மாறிப்போவதற்கு, ஒரு சிறிய தீப்பொறியும் போதுமானது. மத்திய கிழக்கு ஏற்கனவே, உள்நாட்டு போர்கள், மத அடிப்படையிலான மோதல்கள், அரசியல் நிலையற்ற தன்மை, என பல அடுக்குச் சிக்கல்களில் உள்ளது.
இந்தச் சூழலில், அமெரிக்கா – ஈரான் போர் ஏற்பட்டால்; Hormuz Strait போன்ற கடற்பாதைகள் பாதிக்கப்படும். உலக எண்ணெய் விநியோகம் தடுமாறும், உலக பொருளாதாரம் அதிர்வை சந்திக்கும், இதன் தாக்கம், மத்திய கிழக்கைத் தாண்டி உலகம் முழுவதும் பரவும்.
ஐரோப்பா தொலைவில் இருக்கும் போர், அருகிலுள்ள விளைவுகள்.
ரஷ்யா – உக்ரைன் போருக்குப் பிறகு, ஐரோப்பா ஏற்கனவே ஆற்றல் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த நிலையில், மத்திய கிழக்கில் புதிய போர் அபயம். எண்ணெய், எரிவாயு விலை உயர்வு, பணவீக்கம், தொழிற்துறை சுருக்கம், என ஐரோப்பாவின் பொருளாதாரத்தை மேலும் அழுத்தும்.
இதனால்; அகதி நெருக்கடி, சமூக பதற்றம், வலதுசாரி அரசியல் எழுச்சி, என ஐரோப்பாவின் உள்நாட்டு அரசியலையே மாற்றக்கூடிய சக்தியாக உள்ளது.
உலக ஒழுங்கு ஒரு புதிய கட்டத்திற்குள்?
இந்த மோதல், இன்னொரு பெரிய மாற்றத்தையும் வெளிப்படுத்துகிறது. அமெரிக்க ஆதிக்க உலக ஒழுங்கு மெதுவாக சவால் சந்தித்து வருகிறது.
ஈரான்: சீனாவுடன் பொருளாதார அணுக்கம், ரஷ்யாவுடன் அரசியல், இராணுவ நெருக்கம், என புதிய கூட்டணிகளை உருவாக்குகிறது. இது, உலகம் பன்முக அரசியல் அமைப்புக்குள் நகர்வதற்கான இன்னொரு அறிகுறி.
இந்நிலையில் போர் தவிர்க்கப்படுமா? என்பது ஒர் கடினமான கேள்வி. முழுமையான, நேரடி போர் உடனடியாக ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருக்கலாம். ஆனால்; கட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்கள் Proxy War தீவிரம், பொருளாதார தடைகள், சைபர் தாக்குதல்கள், என்ற “போர் இல்லாத போர்” நீடிக்கும் வாய்ப்பே அதிகம்.
முடிவாக; இவற்றிலிருந்து உலகம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். அமெரிக்கா – ஈரான் பதற்றம், உலக அரசியல் இன்னும் எவ்வளவு அசாதாரண சமநிலையில் இயங்குகிறது என்பதற்கான எச்சரிக்கை. போர் தவிர்க்கப்பட வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். ஆனால் விருப்பங்கள் மட்டும் போதாது. அரசியல் தூரநோக்கு, தூதரக துணிச்சல், மற்றும் உலகளாவிய பொறுப்பு இவை இல்லையெனில், வரலாறு மீண்டும் ஒரு முறை தன்னைத் திரும்ப எழுதிக் கொள்ளும்.
