free website hit counter

சைவ மரபும் நவீன ஆன்மிகமும் !

பார்வைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்றைய உலகில் “ஆன்மிகம்” என்பது கோவிலின் சுவற்றுக்குள் மட்டுமே இல்லாமல், உலக அரங்கில் பேசப்படும் கருத்தாக மாறியுள்ளது. யோகா, தியானம், உள்நிலை மாற்றம் போன்ற சொற்கள் உலகளாவிய வாழ்வியல் மொழியின் பகுதியாகிவிட்டன.

இந்த மாற்றத்தின் மையத்தில் நிற்கும் முக்கிய ஆளுமைகளில் ஒருவர் சற்குரு ஜக்கி வாசுதேவ். அவரின் ஈஷா அமைப்பு, ஆன்மிகத்தையும் சமூகச் செயற்பாட்டையும் இணைத்துப் பேசும் இயக்கமாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஒரு அடிப்படை கேள்வி எழுகிறது. இது பாரம்பரிய சைவ சமயத்தின் தொடர்ச்சியா? அல்லது சைவச் சின்னங்களை உட்கொண்ட நவீன ஆன்மிக வடிவமா? . சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சைவ சித்தாந்தத்தின் தத்துவச் சாரம்

தமிழகத்தில் வேரூன்றிய சைவ சித்தாந்தம் “பதி–பசு–பாசம்” என்ற முப்பொருள் அடிப்படையில் ஆன்மீகத்தை விளக்குகிறது. சிவன் பரம்பொருள்; ஆன்மா அவனின் அருளால் மட்டுமே விடுதலை பெறும். “அருள்” என்பது சைவ மரபின் மையச் சொல். பக்தி, ஆகம வழிபாடு, தீட்சை, குருபரம்பரை  இவை அனைத்தும் சிவஅருளை நோக்கிச் செல்கின்ற வழிகள். ஆன்மிகம் இங்கு தனிப்பட்ட மனநிலையோ உடற்பயிற்சியோ அல்ல; அது இறையருளுடன் சம்பந்தப்பட்ட உறவு. இதனை இன்னும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சைவ சித்தாந்தத்தின் தத்துவ அடித்தளம்

சைவ சித்தாந்தம் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் வலுவாக வளர்ந்த தத்துவ மரபாகும். இதன் அடிப்படை மூன்று தத்துவக் கோட்பாடுகள்:

பதி – பரம்பொருளான சிவன்

பசு – ஆன்மா

பாசம் – ஆன்மாவை கட்டிப்போடும் மூன்று மலம் (ஆணவம், கன்மம், மாயை)

ஆகம மற்றும் சாஸ்திர அடிப்படை

சைவ சித்தாந்தம் 28 ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டது. இவை கோவில் வழிபாடு, மூர்த்தி தத்துவம், தீட்சை முறை, யாகம், யோகம் போன்றவற்றை முறையாக அமைத்துள்ளன. மேலும்; தேவாரம், திருவாசகம், திருமந்திரம், இந்நூல்கள் பக்தி மற்றும் தத்துவத்தை ஒருங்கிணைக்கின்றன.

குரு-பரம்பரை

சைவ மரபில் குரு மிக முக்கியமானவர். ஆனால் குரு “சிவஞானம் அளிக்கும் கருவி” என்றே கருதப்படுகிறார்; அவர் இறைவனின் பிரதிநிதி. குரு தன்னையே இறுதி இலக்காகக் காட்டமாட்டார். சைவ சித்தாந்தத்தில்; இறைவன் அருளால் மட்டுமே மலம் நீங்கி சிவசாயுஜ்யம் பெற முடியும்.

அனுபவம் மையமா? அருள் மையமா?

ஜக்கி வாசுதேவின் போதனைகளில் “நம்பிக்கை அல்ல, அனுபவம் முக்கியம்” என்ற வாதம் அடிக்கடி ஒலிக்கிறது. இது நவீன அறிவியல் மனப்பான்மையுடன் ஒத்துப் போகிறது. ஆன்மிகத்தை ஒரு பரிசோதிக்கத்தக்க உளவியல் அனுபவமாக அவர் வடிவமைக்கிறார். இதுவே சமகாலத்தில் இளைய தலைமுறையினர் பலர் அவரைத் தொடரவும் காரணமாகிறது.

சைவ சித்தாந்தம் அனுபவத்தை ஏற்றுக்கொண்டாலும், அதைத் தெய்வீக அருளின் விளைவாகவே கருதுகிறது. மனித முயற்சி அவசியம்; ஆனால் அது இறுதி காரணம் அல்ல. இந்த இடத்தில் ஜக்கி வாசுதேவின் கூற்றோடு, ஒரு கருத்தியல் வேறுபாடு தென்படுகிறது. ஈஷா முறை “சுயமுனைவு” என்பதைக் கவனத்தில் கொள்கிறது; சைவ மரபு “சிவமுனைவு” என்பதைக் கவனத்தில் கொள்கிறது.

சிவன் பரம்பொருளா?, ஆதியோகியா?

ஈஷா வளாகத்தில் எழுந்துள்ள ஆதியோகி சிலை சிவனை “முதல் யோகி” என அடையாளப்படுத்துகிறது. சிவனை ஒரு யோக மரபின் மூலாதாரமாக வெளிப்படுத்தும், ஜக்கி வாசுதேவ் அவர்களின் சிந்தனை இது. 

சைவ சித்தாந்தத்தில், சிவன் ஒரு தத்துவச் சின்னம் அல்ல; அது பரம்பொருள். அவர் பக்தருடன் உறவு கொண்ட அருளாளர்.

இரண்டு அணுகுமுறைகளும் ஒரே உருவத்தை வேறு வேறு பாவனைகளில், சிந்தனை மொழிகளில் விளக்குகின்றன. ஆனால் தத்துவ ரீதியாகப் பார்க்கும்போது, ஈஷாவில் “இறைவன்” என்ற உறவு மங்கிவிட்டு “மெய்ஞ்ஞானச் சின்னம்” என்ற கருத்து மேலோங்குகிறது என்ற விமர்சனமும் எழுகிறது.

குரு-மையப்படுத்தலின் கேள்வி

சைவ மரபில் குரு அவசியமானவர். ஆனால் அவர் இறுதி இலக்கு அல்ல; அவர் ஒரு வழிகாட்டி மட்டுமே. ஆனால் ஈஷா அமைப்பில், சத்குருவின் ஆளுமை மையமாகிறது. அவரது சொற்பொழிவுகள், அவரது விளக்கங்கள், அவரது அனுபவங்கள் அமைப்பின் அடித்தளமாக அமைகின்றன. இது ஒரு நபர் மைய ஆன்மிக இயக்கமா? அல்லது குருபரம்பரையின் நவீன வடிவமா? என்பது திறந்த கேள்வி.

ஆன்மிகமும் நிர்வாகமும்

பெரிய அளவில் நிகழ்ச்சிகள், சர்வதேச முகாம்கள், கட்டண அடிப்படையிலான பயிற்சிகள் என்பன ஈஷாவின் அமைப்புசார் வலிமையை காட்டுகின்றன. விமர்சகர்கள் இதை “ஆன்மிகத்தின் வணிகமயமாக்கல்” எனக் காண்கின்றனர். ஆனால் ஆதரவாளர்கள் இதை “சமூகப் பணிக்குத் தேவையான நிர்வாகத் தளம்” என விளக்குகின்றனர்.

பாரம்பரிய சைவ மரபில் ஆன்மிகம் பெரும்பாலும் கோவில் மற்றும் மட அமைப்புகளின் மூலம் பரவியது; நவீன உலகில் அதுவும் நிறுவன வடிவம் எடுத்துள்ளது. இந்த மாற்றம் தவிர்க்க முடியாததா? என்பது சிந்திக்க வேண்டிய அம்சம்.

சமய அடையாளத்தின் மங்கலா?

ஈஷா தன்னை “மதமற்ற ஆன்மிக இயக்கம்” என முன்வைக்கிறது. இது உலகளாவிய ஏற்றுக்கொள்ளுதலை அதிகரிக்கிறது. ஆனால் சைவ மரபின் தெளிவான அடையாளம்  ஆகம வழிபாடு, சிவபக்தி, சாஸ்திர அதிகாரம்  இவை பொதுமயமாக்கப்பட்டு மங்குகின்றனவா? என்ற கேள்வியும் எழுகிறது.

சைவ சித்தாந்தத்தில் குருவின் பங்கு அவசியமானது. ஆனால் அவர் சிவபாதம் காட்டுபவர். அதுவே ஈஷாவில் எவ்வாறு மாறுபடுகிறதெனில், சத்குருவின் தனிப்பட்ட கவர்ச்சி, அவரது உரைகள், வீடியோக்கள், நூல்கள், அவரது அனுமதி இல்லாமல் சில பயிற்சிகள் செய்ய முடியாத அமைப்பு, இவை ஒரு நபர்-மைய ஆன்மிக வடிவத்தை உருவாக்குகின்றன. இது சில அறிஞர்களால் “ஆளுமை சார்ந்த ஆன்மிக அமைப்பு” என்று விமர்சிக்கப்படுகிறது.

வணிகமயமாக்கல் மற்றும் ஆன்மிகம்

பாரம்பரிய சைவ மரபில், தீட்சை, உபதேசம், ஆன்மிக வழிகாட்டுதல், இவை பெரும்பாலும் குருவின் அருளால் வழங்கப்படுகின்றன; வணிக அடிப்படையில் அல்ல. ஆனால் ஈஷா அமைப்பில், கட்டண அடிப்படையிலான நிகழ்ச்சிகள், சர்வதேச பிரச்சாரம், ஆன்மிகப் பயிற்சிகளின் அமைப்பு, இவை “ஆன்மிகம் ஒரு நிர்வாக-அமைப்பு வடிவம்” பெறுகிறது என்ற கருத்தை உருவாக்குகின்றன. ஆனால், இதனை ஆதரிப்பவர்கள் , பெரிய அளவிலான சமூகப் பணிகளை மேற்கொள்ள நிதி தேவைப்படுகிறது என்கிறார்கள். இந்த நிலையை ஏறக்குறைய சைவ ஆலயங்களும் எட்டிவிட்டனவே என்னும் வாதமும் மறுப்பதற்கில்லை. அதேபோல் அறவிடப்படும் கட்டணங்களுக்கான சேவையினை, ஆலய அமைப்புக்களைவிட, ஈஷா திருப்தியாகவே வழங்குகிறது என்பதை மறுப்பதற்குமில்லை.

சமய அடையாளம் மற்றும் பொதுமயமாக்கல் என்பதைப் பார்க்கும் போது, சைவ சித்தாந்தம் தெளிவான சமய அடையாளத்துடன் இயங்குகிறது.ஆனால் ஈஷாவில் அது மிகக் கவனமாகவும், நுட்பமாகவும் மாற்றம் பெறுகிறது. உதாரணமாகச் சொல்ல வேண்டுமாயின், சைவத்தின் முக்கிய அடையாளமான திரிபுண்டரீக விபூதி, ஆதியோகி சிலையிலிருந்து, பின்பற்றுவோர் அனைவரது நெற்றியிலும், ஞானத்தின் சுட்டுதல் எனும் வகையில் நீள் நாமம் போன்றே இடப்படுகிறது. 

இவையெல்லாவற்றையும் விரிவாக நோக்கினால், ஜக்கி வாசுதேவ் மற்றும் ஈஷா அமைப்பு, சைவ சித்தாந்தத்தின் பாரம்பரிய வடிவத்தை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூற முடியாது. அதேவேளை, சைவ மரபின் சில கூறுகளை, குறிப்பாக யோக மரபை , உலகளாவிய மேடைக்கு கொண்டு சென்றுள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை. சற்குருவின் புதிய வடிவிலான அல்லது எளிமைப்படுத்திய யோகம், தியானம், என்பவை அதிக அளவிலான இளையவர்களை உள்வாங்கிக் கொள்கிறது. இன்றைய சமகால உலகில் தடுமாறிடக் கூடிய ஒரு பரந்த இளைய சமூகத்தை தன்பால் ஈர்த்து வைத்து நெறிப்படுத்துகிறது. ஆகவே இதை “சைவத்தின் எதிர் இயக்கம்” என்று முழுமையாகப் பார்க்க முடியாவிட்டாலும், “சைவச் சின்னங்களைக் கொண்டு உருவான நவீன ஆன்மிக மறுவடிவு” என்று பார்க்கலாம்.

பாரம்பரியத்தையும் நவீனத்தையும் மோதலாக அல்லாது, உரையாடலாகக் காணும் மனப்பான்மையே இந்த விவாதத்திற்கு தேவையான முதிர்ச்சி. சைவ மரபின் ஆழத்தையும், நவீன ஆன்மிகத்தின் பரவலையும் சமநிலையாகப் புரிந்துகொள்ளும் போது தான் இந்தக் கேள்விக்கு தெளிவான பதில் கிடைக்கும்.

 

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula