free website hit counter

கடலில் மீட்பு… கரையில் அரசியல்..!

பார்வைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டதாகக் கூறப்படும் ஈரானிய கப்பல் தாக்குதல் சம்பவமும், அதன் பின்னரான மீட்பு நடவடிக்கைகளும்,  மற்றுமொரு கப்பலில் பயணித்தவர்களின் மனிதாபிமான நடவடிக்கை என்பன ஒரு நேரடியான விளக்கத்தைத் தாண்டி, இலங்கையின் அரசியல் மற்றும் ராஜதந்திர சூழலை தீவிரமாகத் தொடும் ஒரு விவகாரமாக மாறியுள்ளது.

கடலில் ஆபத்தில் இருந்தவர்களை காப்பாற்றிய செயல் மனிதநேயத்தின் அடிப்படை வெளிப்பாடாகவே பார்க்கப்பட வேண்டும். ஆனால் அந்தச் செயலைச் சுற்றி உருவாகியுள்ள அரசியல் வாதங்கள், தகவல் பற்றாக்குறை, மற்றும் எதிர்மறை சந்தேகங்கள் இன்றைய சூழலில் தவிர்க்க முடியாத கேள்விகளை எழுப்புவதாகச் சொன்னாலும், இதன் பின்னால் எழும் சலசலப்புக்களில் ஒரு வெட்டவெளிச்சமான ஒரு அரசியல் வங்குரோத்துதனமும் வெளிப்படுகிறது.

சர்வதேச கடல் சட்டங்களின் அடிப்படையில், கடலில் உயிர் ஆபத்தில் உள்ளவர்களை மீட்பது எந்த நாட்டின் கடற்படைக்கும் மறுக்க முடியாத கடமையாகும். அந்தக் கோணத்தில் பார்த்தால், இலங்கை மேற்கொண்ட நடவடிக்கை மனிதாபிமான பொறுப்பை நிறைவேற்றிய செயல் என்பதில் எந்த ஐயமும் இருக்க முடியாது. மனித உயிரைக் காப்பாற்றுவது அரசியல் எல்லைகளைத் தாண்டி நிற்கும் ஒரு உயர்ந்த கடமையாகும்.

ஆனால், ஒரு மீட்பு நடவடிக்கை அரசியல் விவாதமாக மாறுவதற்கான காரணம் பெரும்பாலும் தகவல் வெளிப்படைத்தன்மையின் குறைவாகும். கப்பலில் இருந்தவர்கள் யார்? அவர்கள் எந்த சூழ்நிலையில் இருந்தனர்? இந்தச் சம்பவம் எவ்வாறு உருவானது? மீட்பு நடவடிக்கைக்கு பின்னால் இருந்த உண்மை நிலை என்ன? போன்ற அடிப்படை கேள்விகளுக்கான தெளிவான விளக்கங்களை அரசிடம் கோருவது என்பது வேறு, அதனைச் சுடச்சுட அரசியலாக்கி குழப்பம் விழைவிப்பது வேறு.

இலங்கை போன்ற ஒரு சிறிய நாடு, உலக அரசியலின் நுணுக்கமான சமநிலைகளுக்குள் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஈரான் போன்ற நாடுகளுடனான உறவுகளையும், அதே நேரத்தில் மேற்கத்திய உலகுடனும் மற்றும் பிராந்திய சக்திகளுடனும் பேண வேண்டிய நிலை இலங்கைக்கு உள்ளது. இந்தச் சூழலில், ஒரு மனிதாபிமான நடவடிக்கையே கூட வெளிநாட்டு கொள்கையின் ஒரு நுணுக்கமான பரிமாணமாக மாறிவிடும். 

அதே நேரத்தில், எந்தச் சம்பவத்தையும் உடனடியாக அரசியல் குற்றச்சாட்டுகளின் மேடையாக மாற்றுவது அரசியல் பொறுப்புணர்வின் குறைவாகவும் பார்க்கப்படுகிறது. மனித உயிரைக் காப்பாற்றிய நடவடிக்கையை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்த முயல்வது எவ்வளவு நியாயமானது என்ற கேள்வியும் எழுகிறது. ஜனநாயகத்தில் விமர்சனம் அவசியமான ஒன்று தான்; ஆனால் அந்த விமர்சனம் உண்மைத் தகவல்களின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் மிக முக்கியமானது அரசின் பொறுப்பு. சம்பவம் தொடர்பான உண்மை நிலையை தெளிவாகவும் விரைவாகவும் வெளியிடுவது தான் தேவையற்ற சந்தேகங்களையும் அரசியல் குதர்க்கங்களையும் குறைக்கும் ஒரே வழி. தகவல் வெற்றிடம் நீடித்தால், அதனை அரசியல் வாதங்களும் ஊகங்களும் நிரப்புவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். அதனை அரசு சரியான காலக்கிரமத்தில் செய்தே இருக்கிறது. ஆனால் அதற்கும் முன்னதாகவே இலங்கையின் எதிர்கட்சிகள் அதனை சுயலாப அரசியலாக்கிப் பேசியதும், பேச முனைவதும் மிகக் கேவலமானது. சொந்த மக்களின் வாழ்வையே சூறையாடிய அரசியலாளர்களிடத்தில் இதைவிட வேறென்ன எதிர்பார்க்க முடியும் என்பது கேள்வியாக எழுவதும் தவிர்க்க முடியாததுதான்.

இந்து சமுத்திரத்தில் ஒரு குட்டித் தீவு நாடாக உள்ள  நாட்டின் அரசு, மிகச் சாதுரியமாகவும், ஜதந்திரரீதியாகவும், செயற்பட்டு,  கடலில்  தத்தளித்த உயிர்களைக் காப்பாற்றிய செயல் மனிதநேயத்தின் வெற்றியாக இருக்க வேண்டும்; அது கரையில் அரசியல் வாதங்களின் கருவியாக மாறக்கூடாது. மனிதாபிமானம், தேசிய பாதுகாப்பு, மற்றும் வெளிநாட்டு உறவுகள் ஆகியவற்றின் சமநிலையை பேணுவது அரசின் பொறுப்பு. அதே நேரத்தில், உண்மையை அறிந்து விமர்சிக்கும் பொறுப்பும் அரசியலுக்கும் சமூகத்திற்கும் உண்டு.

ஈரானிய கப்பல் சம்பவம் ஒரு மீட்பு நடவடிக்கை மட்டுமல்ல; அது மனிதாபிமானம், வெளிப்படைத்தன்மை, மற்றும் அரசியல் பொறுப்புணர்வு ஆகிய மூன்றின் சோதனையாகவும் அமைந்தது. இலங்கை அரசு அந்தச் சோதனையில் இப்போதைக்கு சித்திபெற்றுள்ளது என்றே சொல்லலாம்.  இது சோதனை முற்றுமுழுதான முடிவும் அல்ல. 

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula