றொட்டடாம் சர்வதேச திரைப்படவிழாவின் இலட்சினையான புலிவிருதினைப் பெறும், முக்கிய போட்டிப் பிரிவில் போட்டியிட்ட 14 திரைப்படங்களில், இந்தியத் திரைப்படமான Kiss Wagon இரு விருதுகளை வென்றுள்ளது.
இப் பிரிவில் சிறப்பு நடுவர் விருது, சர்வதேச திரைப்படப் பத்திரிகையாளர் விருது, என இரு விருதுகளை வென்றுள்ள Kiss Wagon ஒரு மலையாள மொழித் திரைப்படமாகும்.
இது ஒரு அரசியல் பேசும் அசைபடம் எனும் அறிமுகக் குறிப்பினைப் படித்துவிட்டு, ஒரு அசைபடத்தில் எவ்வாறு அரசியலைப் பேசுவார்கள் எனும் எதிர்பார்ப்புடனேயே, காட்சி அரங்கில் Kiss Wagon படத்தினைப் பார்க்கத் தொடங்கினோம். படம் தொடங்கிய சில நிமிடங்களுக்கு உள்ளாகவே இது ஒரு சராசரியான அசைபடம் அல்ல என்பது புரிந்தது. படம் பார்த்து முடிக்கையில் அது பேசும் அரசியல் மட்டுமல்ல, பேசும் வகையுமே சினிமாவின் எல்லைகள் தாண்டிய ஒரு பரீட்சார்த்தம் என்பதை உணர்ந்திருந்தோம். நிச்சயம் இந்தப் படம் தெரிவுக்குள் வரக் கூடிய படம் எனும் எதிர்பார்ப்பும் இருந்தது.
இன்று விருதுகள் அறிவிக்கும் போது இப்படத்திற்கான தொகுப்புரை வழங்கிய நடுவர்கள், "காவியமான சூப்பர் ஹீரோ கதைசொல்லல் மற்றும் சினிமா மரபுகளை தைரியமாக மீறியதன் மூலம் எங்களை வியப்பில் ஆழ்த்திய ஒரு திரைப்படம் என்பதால், ஒருமனதாக விருது வழங்க முடிவு செய்தோம். அதன் சிக்கலான பாணிகள், வகைகள் மற்றும் கருப்பொருள்கள் மற்றும் விரிவான, கைவினைத்திறன், தனிப்பட்ட கைவினைப்பொருட்கள் ஆகியவற்றின் மூலம், சினிமா என்பது நாடகம் மற்றும் கண்டுபிடிப்புக்கான வரம்பற்ற இடம் என்பதை நினைவூட்டியதுடன், தொடர்ந்து தன்னை புதுப்பித்துக் கொள்கிறது. சுதந்திரம் இல்லாமை மற்றும் பாலியல், பாலின அடக்குமுறை போன்ற கடுமையான பிரச்சினைகளை நகைச்சுவை, காட்சிகளுடனும், புதிய அனுகுமுறையுடனும் சொல்லும் இத்திரைப்படத்தைக் கொண்டாட விரும்புகின்றோம் " என்றார்கள்.
சினிமாவின் வரம்புகளைத் தைரியமாக உடைத்தெறிந்த ஒரு படைப்பாக வந்திருக்கும், Kiss Wagon குறித்தோ, அது பேசும் அரசியற் கருப்பொருள் குறித்தோ வார்த்தைகளில் விவரித்து விடமுடியாத ஒரு புதிய சினிமா அனுபவம். கண்டிப்பாக அதனைத் திரையில் காணவேண்டும். அதனைத் திரையில் காண்கையில் புரிந்து கொள்ளவே சற்றுக் கூடுதலான சினிமா ரசனை தேவை. நமது புரிதலின் விரிவாக்கத்திற்கு ஏற்ப அதன் அனுபவமும் விரிவடையும் எனத் திடமாகச் சொல்லலாம். அந்த வகையில் இரு விருதுகளை வென்றெடுத்த Kiss Wagon திரைப்பட இயக்குனர் மற்றும்கலைஞர்களுக்கு, 4தமிழ்மீடியா குழுமத்தின் சார்பிலும் வாசகர்கள் சார்பிலும், பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும், அப்படத்தின் உருவாக்கத்தில் பெரும் பங்காற்றியிருக்கும் இயக்குனர் மிதுன் முரளியிடம் நேரில் தெரிவித்தோம்.