50 வருடங்களுக்கு முன் ஈழத்தமிழர்கள் ஒன்பது பேரை பலிகொண்ட துயரநாள் இன்றைய ஜனவரி 10.
ஈழம் எனும் வேட்கைக்கு முன்னதாக இலங்கை எனும் ஒற்றைச் சொல்லாட்சிக்குள் தமிழர்களின் தனித்துவத்தை வெளிப்படுத்திய போது, வெடித்த விபரீதம் அது. இன்றைய இளைய தலைமுறை அறிந்திராத ஒரு பெருந்துயரம் அது. கோவிலும், குடும்பமும், கல்வியும் என அமைதியாக வாழ்ந்த மக்களை ஆத்திரத்திற்கு உள்ளாக்கி, தனிநாடென்னும் எண்ணத்தை இளையவர்கள் மனத்தினிலே விதையெறிந்த நாள். 1983ன் பின்னரான ஆயதப் போராட்டத்திற்கு முன்னதான தமிழ்மக்களின் அறநிலை செயற்பாடுகளை அரச யந்திரம் அழிந்த அரை நூற்றாண்டின் நிறைவும், நினைவுமான நாள்.
1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ம் திகதி தொடக்கம் 10ம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் 4வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது. ஆனால் இந்தத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்த இலங்கை அரசாங்கம் விரும்பவில்லை. இதனைத் தடுப்பதற்காக, யாழ்ப்பாணத்திலுள்ள விழா அமைப்பாளர்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து இடையூறுகளை ஏற்படுத்தியது. மாநாட்டிற்கான திறந்தவெளி அரங்குகளை நிர்மாணிப்பதற்குரிய அனுமதியையும் இழுத்தடித்தது.
4வது உலகத் தமிழராய்ச்சி மகாநாட்டை யாழ்ப்பாணத்தில் பிரமாண்டமாகக் கொண்டாட வேண்டும் என்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் எடுத்த தீர்மானத்தை எப்படியாவது தடுத்துவிட வேண்டுமென்பதில் முனைப்பாக இருந்த இலங'கை அரசு, யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ள இந்த மகாநாட்டில் பங்குபற்றுவதற்காக, யாழ்ப்பாணத்திற்கு வருவதற்காக பயண அனுமதிக்கு விண்ணப்பித்த அந்நிய மொழிகளையும், நாடுகளையும் சேர்ந்த தமிழ் ஆராய்ச்சியாளர்கள் பலரதும் பயண அனுமதிக்கான விசாக்கள் மறுக்கப்பட்டன.
இந்தனை இடையூறுகளையம் தாண்டி, மாநாட்டு அமைப்பாளர்களும் தமிழ்மக்களும் தமிழாராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதில் திடமாக இருந்தார்கள். தமிழ்மக்களின் ஒன்றுபட்ட எழுச்சியை எந்த சக்தியாலும் கட்டுப்படுத்த அனுமதிக்கமுடியாது என்பதனை, மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் தலைமைப் பொறுப்பிலிருந்த பேராசிரியர்.சு.வித்தியானந்தன் துணிச்சலுடன் வெளிப்படுத்தி நின்றார். தமிழ்மக்களின் ஒன்றித்த பேராதரவைக் கண்ட அரசாங்கம் இறுதியில் குறைந்த எண்ணிக்கையிலான தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டும் விசாக்களை வழங்கியது.
இறுதியாக அரசின் நெருக்கடியான கட்டுப்பாடுகளின் மத்தியில் 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1974ம் ஆண்டு ஜனவரி 3 ம் திகதி மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகியது.இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நாட்டின் பிறபகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்து குவிந்தனர். யாழ்ப்பாண நகர் முழுவதும் தமிழ் கோலமும், கொண்டாட்டமும் நிறைந்தது.
ஜனவரி மாதம் 10ம் திகதி மாநாட்டின் இறுதி நாள் மிகவும் சிறப்பான முறையில் நிகழ்ச்சிகளும் பண்பாட்டு ஊர்வலங்கள் என்பன ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. பல்வேறு அலங்கார ஊர்திகளின் பண்பாட்டுப்பவனி இடம்பெற்ற பொழுது, பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வு பூர்வமாகக் கலந்து கொண்டிருந்தனர். ஊர்வலத்தின் பொழுது, புகைக்கூண்டுகள், பொம்மலாட்டம், நடன நிகழ்ச்சிகள், சிலம்படி மற்றும் கண்ணைப் பறிக்கும் வாண வேடிக்கைகள் என்பனவும் இடம்பெற்றன. உலகத் தமிழர்கள் ஒன்றுகூடி, உணர்வு பூர்வமாகக் கொண்டாடிய அந்தத் தருணத்தைக் கலைக்கவேண்டும் என்பதில் முரண்பாடானவர்களின் எண்ணம் முனைப்பாக இருந்தது.
பயணவிசா மறுக்கப்பட்ட நிலையிலும், தமிழகத்திலிருந்து படகுகள் மூலமாக வந்து கலந்து கொண்ட தமிழ்த் தலைவர்களை கைது செய்வேண்டும் என்பதில் அரச காவலர்கள் குறியாக இருந்தனர். இதற்காக தலைநகரில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்புக் காவலர்கள் அதற்கான தருணத்திற்காக காத்திருந்தனர். அந்தத் தருணமும் வந்தது. இரவு 10.30 மணிவரைக்குமான அனுமதியைத் தாண்டி, விழா நடப்பதைக் காரணங்காட்டி, காவலர்கள் உட்புகுந்து, நிகழ்ச்சியை நிறுத்த முற்பட்டனர். பார்வையாளர்களாக இருந்த இளைஞர்களும் மக்களும், நிகழ்ச்சி நடைபெறட்டும் என ஆர்பரித்தார்கள். குழப்பம் ஆரம்பமாகியது. சூழல் மாறியது.
மாநாட்டு மைதானம் கலவர பூமியானது. காவலர்கள் துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டனர். மாநாட்டு மேடைகளும், அலங்காரப் பந்தல்களும் உடைத்தெறியப்பட்டன. தமிழறிஞர்கள் பலரும் தாக்கப்பட்டனர். எதிர்பாரத இந்தத் தாக்குதலால் அலங்காரமாக இருந்த யாழ்ப்பாண முற்றவெளி மைதானம் அலங்கோலமாகியது. மக்கள் நாலா பக்கமும் சிதறி ஓடினார்கள். அரச காலர்களின் கண்மூடித் தனமான தாக்குதலிலும், ஏற்பட்ட குழப்பத்திலும் ஒன்பது தமிழர்கள் பலியானார்கள். 50க்கு மேற்பட்டோர் படுகாயங்களுக்கும் உள்ளாக்கப்பட்டனர். மகிழ்ச்சியும், உற்சாகமும் பீறிட கொண்டாட்டத்தின் களமாக இருந்த முற்றவெளி மைதானம், மயான பூமியாகக் காட்சி அளித்தது.
இந்தத் துயரத்தில் தங்கள் இன்னுயிர்களை இழந்த ஒன்பது பேரின் நினைவினை மீட்டி, முற்றவெளி மைதானத்தில் எழுப்பப்ட்ட நினைவுத் தூபிகளும் பின்னர் பலதடவை அரச படைகளால் அழிக்கப்பட்டன. அவை மீண்டும் மீண்டும் உயிரிழந்வர்கள் நினைவு சொல்லி எழுந்தும் நிற்கின்றன.