போர்களச் செய்தியாளராக இருப்பது என்பது இலகுவான காரியமல்ல.தெறிக்கும் துப்பாக்கிக் குண்டுகளுக்கும், வெடிக்கும் எறிகணைகளுக்கும் மத்தியிலிருந்து, மக்கள் நலனுக்காக ஆற்றும் பணி அது. காஸாவில் அல்ஜசீராவின் ஐந்து பத்திரிகையாளர்கள் இஸ்ரேலின் இலக்கு வைத்த தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
காசா நகரத்தில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு வெளியே ஒரு பத்திரிகையாளர் கூடாரத்தின் மீது ஞாயிற்றுக்கிழமை, இஸ்ரேலிய இராணுவத்தின், இலக்கு வைக்கப்பட்ட வான்வழித் தாக்குதலில், 'காசாவின் குரல்' என அழைக்கடும், அல் ஜசீரா நிருபர் அனஸ் அல்-ஷெரிஃப் மற்றும் அவரது பல சகாக்களைக் கொன்றது. இந்த தாக்குதல் காசா நகரத்தில் உள்ள அல் ஜசீராவின் முழு ஊழியர்களையும், ஒரு குழந்தை மற்றும் அல் ஜசீரா நிருபர் முஹம்மது கிரீகா உட்பட ஆறு பத்திரிகையாளர்களின் உயிரைப் பறித்தது.
இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை தொடங்கியதிலிருந்து இதுவரை 238 பத்திரிகையாளர்களைக் கொன்றுள்ளதாக காசா அரசாங்க ஊடக அலுவலகம் திங்கட்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. "பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களை குறிவைப்பது என்பது முழு அளவிலான போர்க்குற்றமாகும், இது உண்மையை மௌனமாக்குவதையும் இனப்படுகொலையின் ஆதாரங்களை அழிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடக அலுவலகம் மேலும் தெரிவிக்கையின், "காசாவின் குரலாக இருந்த அல்-ஷெரீப்பின் சமீபத்திய படுகொலை, காசா நகரில் படுகொலைகளை நடத்தும், இஸ்ரேலிய திட்டத்திற்கு ஒரு முன்னோடி" எனவும் வலியுறுத்தியுள்ளது.செய்தியாளர்கள் எனத் தெரிந்தும், அவர்கள் மீது வன்முறைத்தாக்குதல் மேற்கொண்டிருப்பது அராஜகமானது, கண்டனத்துக்குரியது!
இத்தகைய வன்முறைகளுக்கு எதிரான சட்டரீதியான நடவடிக்கைககு வேண்டிய மனிதாபிமானச் செயற்பாடுகள் உலகெங்கிலும் எடுக்கப்படவேண்டியது அவசியமாகிறது.
மனிதாபிமானம் அற்றுப் போனால் மற்றதெல்லாம் மறைந்து போகும் என்பதில் வெகுவான நம்பிக்கை எமக்குண்டு.'மனித உரிமையும மண்ணாங்கட்டியும்,' என்று பேசியவர்கள் வீதிகளில் நின்று மனிதாபிமானம் கோரிப் போராடிய தைக் கண்டதுமுண்டு. காலம் எல்லாவற்றுக்குமான நியாயங்களைக் தன்னுள் ஒளித்து வைத்தபடியே நகர்கிறது.
லோகார்னோ திரைப்படவிழாவின் 2ம் நாள் இரவு, காஸா மனிதப் பேரவைத் துக்கு ஆதரவாக, பியாற்சா கிரான்டே பெருமுற்றத் திரையிடலுக்கு முன்னதாக ஒரு நிமிட மெளனமும் , ஒன்றுதலுக்கான அடையாளமாக உயர்த்திய கைகளில் செங்குருதி அடையாளத்தை வெளிப்படுத்தும் ஒரு சிறிய அட்டையும் இருந்து. பெரு முற்றத்துக்குள் நுழையும்போதே சேவையாளர்கள் அதனைத் தந்திருந்தார்கள். எனது ஆசனத்துக்கு அருகில் அதனை வைத்திருந்தேன்.
அடுத்த ஆசனத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி, எந்தவொரு அனுமதி கோரலுமின்றி அந்த அட்டையை எடுத்துப் பார்த்து விட்டு, ஜேர்மன் மொழியில் ஏதேதோ பேசினார். 9.30 மணிக்கு 'பியாற்சா கிரான்டே' எழுந்து நின்று அமைதி காத்தது. ஆயினும் அவர் இருந்தபடியே இரைந்தவாறுமிருந்தார். அந்த நிகழ்வினை நான் படமாக்கத் தொடங்கிய போது, என் செய்தியாளர் அட்டையைக் கண்டிருக்க வேண்டும், திடீரென அமைதியாகி அவ்விடத்திலிருந்து அகன்றுவிட்டார்.
குரலற்றவர்களின் குரலாக, நடத்தப்படும், இத்தகைய அடையாளப் போராட்டங்கள் அரசியல் நடைமுறைகளில் பெரிய மாற்றங்களைத் தந்துவிடும் என்பது, நடைமுறை அனுபவங்களில் வழி, பெரிய நம்பிக்கை தருவாக இல்லையாயினும், நம் அருகிலேயே வாழக்கூடிய இத்தகைய மனிதாபிமான விருப்புக்கள் அற்ற மாந்தர்களிடத்தே சிறு மாற்றங்களை காண்பதற்காவது இத்தகைய செயற்பாடுகள் அவசியமாகிறது.மானுட நேசிப்புக்கான கவனயீர்ப்பு என்பது எல்லா தளங்களிலும், தேவைப்படுகிறது என்பது மட்டும் உண்மையிலும் உண்மை.