free website hit counter

அட்லீ இயக்கத்தில் ‘லயன்’ ஆகிறார் ஷாருக்கான் !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தளபதி விஜய்யின் அதிரடி நடிப்பில் வெளியான ‘பிகில்’ படத்தைத் தொடர்ந்து தமிழ்ப் படங்கள் எதையும் இயக்காமல் இருந்து வருகிறார் இயக்குநர் அட்லீ. அதற்குக் காரணம், பாலிவுட்டில் அவர் ஷாருக்கானை வைத்து முதல் முறையாகப் படம் இயக்குகிறார்.

அதுவும் தன்னுடைய முதல் இந்திப் படத்திலேயே ஷாருக்கானை இயக்குவது உறுதியானதை அடுத்து, கோலிவுட்டில் பரபரப்பு கிளம்பியது. பலரது காதுகளில் புகை வெளியேறியது. வெகுசில படங்களின் மூலமே முன்னேறிய அட்லீ, ஷாருக்கானுக்கு இரட்டைக் வேடக் கதையைத் தாயர் செய்து சொல்லி ஓகே செய்துள்ளார். நடிக்கும் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாராவை கதாநாயகியாக்கி அவரை சம்மதிக்க வைத்துள்ளார்.

நயன்தாராவுடன் ‘தங்கல்’ புகழ் சான்யா மல்ஹோத்ரா மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். புனேவில் கடந்தவாரம் தொடங்கிய படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா, பிரியாமணி உள்ளிட்டோர் இணைந்தனர். நகைச்சுவை நடிகர் யோகி பாபு இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படம் தமிழிலும் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், இந்தப் படத்திற்கு ‘லயன்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சாண்ட் துக்காராம் மெட்ரோ ரயில் நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரி எழுதப்பட்ட கடிதத்தின் நகல் பொதுவெளியில் வெளியானது. அந்த கடிதத்தில் தான் திரைப்படத்தின் பெயர், தயாரிப்பு நிறுவனத்தின் பெயர், நடிகர்கள், இயக்குநர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. நயன்தாரா நடிப்பதும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளிவிடப்படவில்லை. இது ‘ஒர்க்கிங் டைட்டில்’ ஆக இருக்கலாம் என ஷாருக் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula