முதல்வர் அறை மாற்ற டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவின் குற்றச்சாட்டுக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு பேசுகையில், முதல்வர் அறை மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? அறை மாற்ற டெண்டரில் முறைகேடு எனப் புகார் எழுந்துள்ளது. அறை மாற்றியப் பிறகு டெண்டர் கோரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக விளக்கம் வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:
”முன்னாள் அமைச்சர் பேசுகையில் பத்திரிகை செய்தியைக் குறிப்பிட்டு பேசினார். கடந்த 5 ஆண்டுகள் பத்திரிகை செய்திகளை எடுத்து வெளியிட்டால், இந்த துறை (பொதுப்பணித் துறை) ஊழல் மட்டும்தான் செய்திருக்கும் என்று எங்களாலும் சொல்ல முடியும்.
டெண்டரே இன்னும் முடியவில்லை. பொதுவாக கட்டுமான தொகைக்கு ஏற்ப டெண்டரின் மொத்த மதிப்பை வெளியிடுவார்கள். 3-லிருந்து 7 சதவிகிதம் வரை ஏற்றுவார்கள். ஆனால், நாங்கள் கடந்த ஆண்டு மதிப்பையே கொடுத்துள்ளோம்.
விரைவில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறைகளில் கடந்த 5 ஆண்டுகள் டெண்டரில் என்ன நடந்தது என்பதை வெள்ளை அறிக்கையை வெளியிடவுள்ளோம். கடந்த 60 நாள்களில் 20 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டது. சுமார் 25-லிருந்து 30 சதவிகிதம் வரை குறைவான தொகையில் டெண்டர் வந்துகொண்டுள்ளது.
புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என்று கருணாநிதியும் ஜெயலலிதாவும் நினைத்தார்கள். இதில் அனைவருக்கும் உடன்பாடு இருக்கிறது. காலையிலிருந்து மாலை வரை அரசு அதிகாரிகளையும், வெளிநாட்டுப் பிரதிநிதிகளையும் முதல்வர் சந்தித்து வருகிறார்கள். அனைவரையும் சந்திக்க வேண்டுமென்பதால்தான் அறையை மாற்றுகிறார்கள்.
முதல்வரின் தனிச் செயலர்கள் வெறும் 100 சதுர அடிகூட இல்லாத சிறிய அறையில் பணி செய்து கொண்டுள்ளார்கள். முறையான கழிப்பறை வசதிகூட கிடையாது. ஆகையால்தான் அவர்களுக்கும் அறை மாற்றப்படுகிறது.
பிரசாரத்தின் போது சாதாரணக் கடைகளில் கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டுவிட்டு, பிரசார வாகனத்திலேயே இரண்டு மணிநேரம் ஓய்வெடுக்கக் கூடிய எளிய முதல்வரைப் பற்றி தவறான தகவலை அவைக்கு தெரிவிக்க வேண்டாம்” எனத் தெரிவித்தார்.
