சென்றவாரத்தில் கேரள மற்றும் ஆங்கில ஊடகங்களை நிறைத்திருந்த ஒரு பெயர் அதிரா சுகதன். யார் இந்த அதிரா சுகதன் ? ஏன் ஊடகங்கள் கொண்டாடின.
கேரளாவின் கோழிக்கோட்டைச் சேர்ந்த 30 வயதான இளம் பெண் ஆதிரா சுகதன், தொழில் ரீதியாக ஒரு மருத்துவர். சுமுகமான அவரது வாழ்வினை, சில ஆண்டுகளுக்கு முன்னதாக, ஒரு அபாயகரமான சாலை விபத்து, ஆதிரா சுகதன் கொண்டிருந்த ஒவ்வொரு கனவையும் இலக்கையும் கிட்டத்தட்ட சிதைத்தது. அவரது வாழ்நாள் முழுவதும் சக்கர நாற்காலியுடன் இணைக்கப்பட்டது.
சென்ற வெள்ளிக்கிழமை, நாட்டின் மிகக் கடினமான ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் ஒன்றான UPSC CSE-ஐ நான்காவது தடவையாக முயற்சித்து தேர்ச்சி பெற்று, அகில இந்திய தரவரிசை (AIR) 483-ஐப் பெற்றிருந்தார். "சக்கர நாற்காலியில் அடைக்கப்பட்ட இந்த வாழ்க்கை என் கனவுகளுக்கு ஒருபோதும் தடையாக இருக்காது என்று நான் விழுந்த அந்தக் கணத்திலேயே முடிவு செய்தேன்," என்று ஊடகங்களிடம் கூறிய அதிரா குரலில் அதி உயர்ந்த தன்னம்பிக்கை வெளிப்பட்டது.
பிப்ரவரி 2016 இல், அதிரா சுகதன் தனது பல் அறுவை சிகிச்சை இளங்கலை (BDS) பட்டப்படிப்பைத் தொடர்ந்தபோது, ஒரு பயங்கரமான சாலை விபத்து அவரது வாழ்க்கையை முற்றிலுமாக தலைகீழாக மாற்றியது. இதனால் அவர் சக்கர நாற்காலியில் அமர்த்தப்பட்டார்
பல மாதங்களாக தீவிர சிகிச்சைக்குப் பிறகு, அதிரா தன் சொந்த ஊஊரான கோழிக்கோடு திரும்பினார். விபத்து காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைபாடுகள் தொடர்ந்து அதிகரித்து வந்தன. அவர் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் “நான் இரண்டு வருடங்களாக மறதி நோயுடன் போராடினேன்.பிடிஎஸ் பட்டம் படித்து வருவதை நான் முற்றிலும் மறந்துவிட்டேன். என் வாழ்க்கையின் அந்த பக்கங்கள் என் மனதில் இருந்து அழிக்கப்பட்டது போல் இருந்தது,” என்று அவர் நினைவு கூர்ந்தார்.
அந்த துணிச்சலான பெண் தன் முயற்சியைக் கைவிட மறுத்துவிட்டார். ஆயுர்வேத சிகிச்சையின் உதவியுடன் அவரது உடல்நிலை மேம்பட்ட பிறகு, தனது பிடிஎஸ் படிப்பை முடிக்க பெங்களூருவில் உள்ள கல்லூரிக்குச் சென்றார். முதல் மூன்று ஆண்டுகளில் படித்திருந்த எல்லாவற்றையும் மறந்துவிட்டாள். அதனால் முடிக்கப்படாத பட்டப்படிப்பை முடிக்க ஆரம்பத்தில் இருந்தே தொடங்க வேண்டியிருந்தது.

2020 ஆம் ஆண்டு கோவிட்-19 தொற்றுநோய்களின் போது, அவர் தனது சொந்த ஊரான கோழிக்கோட்டில் மாற்றுத் திறனாளிகளுடன் பணிபுரியும் ஒரு அரசு சாரா நிறுவனத்தில் தன்னார்வத் தொண்டு செய்தார்.
"என்ஜிஓவுடன் நான் பணியாற்றிய நேரம், என்னைப் போன்ற பல மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் கஷ்டங்களைப் பற்றிய ஆழமான புரிதலை எனக்கு அளித்தது. அந்த நேரத்தில்தான் ஒரு பெரிய அளவில் பணியாற்ற வேண்டும் என்ற கனவு எனக்குள் உருவானது. சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினேன், இந்த எண்ணம் என்னை சிவில் சர்வீஸ்களைத் தொடரத் தூண்டியது," எனச் சொல்லும் அதிரா சுகதன் அதற்கான முனைப்பில் ஈடுபட்டார்.
அதிரா திருவனந்தபுரத்தை தளமாகக் கொண்ட அப்சல்யூட் ஐஏஎஸ் அகாடமியில் சேர்ந்தார். இது மாற்றுத்திறனாளி யுபிஎஸ்சி ஆர்வலர்களுக்காக "பட்டர்ஃபிளை" என்ற சிறப்பு பயிற்சித் திட்டத்தை நடத்துகிறது. மலையாளத்தை தனது விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்து ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார்.
தனது முதல் மூன்று முயற்சிகளில் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறத் தவறிய போதிலும், தனது கனவுகளைத் தொடர கடினமாக உழைத்தார். இறுதியில், 2025 ஆம் ஆண்டில் தனது நான்காவது முயற்சியில் கடினமான தேர்வில் தேர்ச்சி பெற்று, 483 மதிப்பெண்களைப் பெற்றதன் மூலம், தன் எண்ணத்தில், இலக்கில் வெற்றி கண்டார். அதிராவின் விடாமுயற்சி பலனளித்தது.
தனது நீண்ட போராட்டத்திற்கு ஆதரவளிக்க ஒரு பாறையைப் போல அவரது தங்கை அனகா உதவினார். அனகா உளவியலில் BSc பட்டம் படித்து வந்தார், ஆனால் விபத்தில் சிக்கிய தனது சகோதரியைப் பராமரிக்க படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டார். பின்னர் தனது வாழ்க்கைப் பாதையை மாற்றி, ஆதிராவை சிறப்பாகக் கவனித்துக் கொள்ள கற்றுக்கொள்ளும் வகையில் நர்சிங்கில் BSc பட்டம் பெற்றார்.
“அவளுடைய தியாகமும் அர்ப்பணிப்பும் என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளன. UPSC நேர்காணலில் எனது சிறந்த தோழி யார் என்று என்னிடம் கேட்டபோது, நான் யோசிக்காமல் என் சகோதரியின் பெயரைச் சொன்னேன், ”என்று நன்றிப் பெருக்குடன் ஆதிரா கூறுகிறார்.
இனி ஆதிரா உயர்ந்த நிர்வாக சேவையில் இணைந்து, மக்களுக்கு தான் ஆற்ற நினைத்த சேவையினை ஆற்றத் தொடங்குவார். ஆதிராவின் தன்னம்பிக்கையும், முயற்சியும், வெற்றியும் கொண்டாட்டத்திற்குரியனவே.
