ஐரோப்பாவின் சர்வதேசத் திரைப்படவிழாக்களில் முக்கியமான பெருந்திரைப்பட விழாவான ( IFFR)ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்படவிழாவின் 53வது பதிப்பு, 25.01.2024 வியாழக்கிழமை ஆரம்பமாகி, வரும் பெப்ரவரி 4ந்திகதி வரை நடைபெறவுள்ளது.
உலகின் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2,000 திரைப்பட வல்லுநர்களும், 2,75,000க்கு மேற்பட்ட பார்வையாளர்களும் கலந்து கொள்ளும், ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா (IFFR) உலகின் மிகப்பெரிய பார்வையாளர்கள் மற்றும் தொழில்துறை சார்ந்த திரைப்பட விழாக்களில் ஒன்றாகும். இவ்விழாவில் இந்த ஆண்டு பல ஆசிய திரைப்படங்கள் பங்கேற்பதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியத் திரைப்படங்கள் 15, மலேசியத் திரைப்படங்கள் 2, மற்றும் ஒரு நேபாளத் திரைப்படமும், பல்வேறு போட்டிப் பிரிவுகளில் போட்டியிடுகிறது. இவை தவிர, சீனா, இந்தோனேசியா, தாய்லாந்து, ஜப்பான், ஆகிய ஆசிய நாடுகளின் திரைப்படங்களும், குறும்படங்களும், போட்டிகளில் பங்கேற்கின்றன.
மலேசியாவில் இருந்து கலந்து கொள்ளும் படங்களில் ஒன்றான "நீர் மேல் நெருப்பு" (Fire on Water) மலேசியத் திரையுலகம் பற்றி பேசுகின்ற படைப்பாக இருக்கும் என அதன் இயக்குனரான, சன் ஜே. பெருமாள் (Sun-J Perumal) குறிப்பிட்டுள்ளார். தனது 20 ஆண்டுகால தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் துறையில் கசப்பான பிரதிபலிப்புத்தான் இத் திரைப்படம் எனக் கூறும் அவர், " பத்தாண்டுகளுக்கு முன்பு தொழில்துறையில் நுழைந்த பல இளைய இயக்குனர்கள் இன்னும் நிதி நெருக்கடி, அங்கீகாரமின்மை மற்றும் வரையறுக்கப்பட்ட படைப்பு சுதந்திரத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்களின் போராட்டங்களைப் பார்த்தும், எனது முந்தைய அனுபவங்களைப் பிரதிபலித்தும் உருவாகியதே இந்தத் திரைக்கதை " என்றார்.