கோடையின் தாக்கம் தொடங்கியுள்ளதால் சுட்டெரிக்கும் அந்த சூரியனிடம் இருந்து, தற்காத்துக்கொள்ளும் வழிகளை எல்லா தரப்பினரும் அறிந்து கொள்ள வேண்டியது இப்போது அவசியமாகிறது.
சிலருக்கு எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காமலேயே இருக்கும். இதற்கு காரணம், உடலில் நீர்ச்சத்து குறைந்து போவதேயாகும். எனவே உடலில் நீர்ச்சத்தை சீரான அளவில் பராமரிக்க, தினசரி குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். நீர் சத்துள்ள ஒருசில உணவுப் பொருட்களை அதிகமாக சேர்த்துக் கொண்டால் உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பதோடு,அதிக தாகம் எடுப்பது தடைபடும்.
தண்ணீருக்கு அடுத்தபடியாக தாகத்தைத் தணிக்க உதவும் பானங்களில் ஒன்றுதான் இளநீர் ஆகும். இளநீர் உடலில் நீர்ச்சத்தை அதிகரிப்பதோடு, உடலுக்கு ஆற்றலையும் தந்து, உடல் வெப்பமடைவதைத் தடுக்கிறது. எனவே வெளியே செல்வோர் செயற்கை குளிர் பானங்களை பருகாமல் இளநீர் குடித்தால் உடல் நலன் காக்கப்படுவதோடு
விவசாயிகள் வாழ்வும் வளம் பெறும்.
கருப்பு திராட்சையை அதிகம் சாப்பிட்டால், நாக்கு வறட்சி தணிந்து, தாகம் அதிகம் எடுப்பது தடுக்கப்படும் எனவும் திராட்சை மாதவிடாய் காலத்தில் உடல் வெப்பமடைவதை தடுத்து, வறட்டு இருமல் வருவதையும் தடுக்கிறது என்றும் சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதேபோல் வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து 90 சதவீதம் உள்ளதால் வெள்ளரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலின் வெப்பநிலை குறைந்து, உடல் குளிர்ச்சியுடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். இதனால், தாக உணர்வு குறையும்.
விலை மலிவாக கிடைக்கும் பழங்களுள் ஒன்று வாழைப்பழம். வாழைப்பழத்தை தினசரி சாப்பிட்டு வந்தால், உடல் வறட்சி அடைவதையும், தாகம் எடுப்பதையும் தடுக்கும். கிவி பழம் புளிப்பு சுவை கொண்டிருந்தாலும், தாகத்தை தணிக்கும் தன்மை அதற்கு உண்டு. இதனால், உடல் வறட்சி அடையாமல் தடுக்கிறது. அதேபோல் எல்லா சீசன்களிலும் கிடைக்கும் பழ வகைகளில் ஒன்று ஆப்பிள். ஆப்பிளை அதிகம் சாப்பிடுவதால், அடிக்கடி தாகம் எடுப்பதைத் தடுக்கிறது.
தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால், இது உடல் வறட்சி, நா வறட்சியைப் போக்கி குளிர செய்கிறது. இதனால் உடல் வெப்பம் குறைந்து தாகத்தை தவிர்க்கிறது. உணவில் அடிக்கடி பசலைக்கீரையை சேர்த்துக் கொண்டால் தாகம் எடுக்காமல் பார்த்துக் கொள்ளலாம். இந்த கீரையை பைல்ஸ் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், உடலில்
நீர்ச்சத்து அதிகரித்து, மலச்சிக்கல் பிரச்னையில் இருந்தும் விடுபடலாம்.
அதேபோல் இருமுறை குளியல், காலையில் பழைய சோறு வெங்காயம், மதியம் வெள்ளரி பழம் தர்பூசணி பழங்களை எடுத்துக்கொள்ளுதல் ஆகியவையும் நமது உடலையும் உள்ளத்தையும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். குளிர் காலத்தில் உடலை நலனை காப்பதை விட, வெயில் காலத்தில் மிக கவனமாக உடல்
நலனை பேண வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
- 4தமிழ்மீடியாவிற்காக : வேதா