78வது லோகார்னோ திரைப்பட விழா, எதிர்வரும் 06.08.2025 புதன்கிழமை ஆரம்பமாகிறது. உலகெங்கிலும் உள்ள சுயாதீன சினிமாவிற்கான ஒரு பரந்த திரைவெளியாகவும், உலகின் பிரமாண்டத் திறந்தவெளித் திரையரங்கினைக் கொண்டதும், உலகின் முக்கியமான திரைப்பட விழாக்களில் ஒன்றாகக் கவனம் பெறும் இத்திரைப்படவிழா, ஆகஸ்ட் 6-ந் திகதி முதல் 16 வரை, சுவிற்சர்லாந்தின் தென்பகுதியிலுள்ள லோகார்னோ நகரத்தில் நடைபெறவுள்ளது.
திரைப்படவிழா நடைபெறும் நாட்களில், லோகார்னோ நகரமே ஒரு திரைப்பட நகரமாகக் காணப்படுவது தனிச்சிறப்பு . பார்க்கும் இடம் எங்கினும் பலநாடுகளைச் சேர்ந்த சினிமா ஆர்வலர்களின் பிரசன்னம், நகரிலுள்ள பத்துக்கும் மேற்பட்ட திரை அரங்குகளிலும், சிறப்புக் காட்சி அரங்குகளிலும், பியாற்சா கிரான்டே எனும் பெருமுற்றத் திறந்தவெளித் திரையிலும் என, பலநூறு திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும்.
திரையிடல்கள் மட்டுமன்றி, உலகத் திரைப்படங்கள் தொடர்பான பயிற்சிப்பட்டறைகள், உரையாடல்கள், கலைஞர்கள் சந்திப்புக்கள், கௌரவிப்புக்கள் எனப் பல்வேறு பகுப்புக்களுடன் நடைபெறும், இத்திரைத் திருவிழாவின் 78வது பதிப்பான இந்த ஆண்டில், உலகின் முதற்திரையிடல்களான ( world premieres ) 99 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.
பியாஸ்ஸா கிராண்டே எனும் பெருமுற்றத் திறந்தவெளிப் பெருந்திரையில், 4 புதிய உலகத் திரையிடல்கள்,2 சர்வதேச திரையிடல்கள் உட்பட, 14 படங்கள், திரையிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத் திரைப்படவிழாவின் மற்றுமொரு சிறப்பம்சமான திறந்த கதவுத் திரையிடல்கள் (Open Doors Screenings ) எனும் பிரிவில், ஆப்பிரிக்க கண்டத்தின் 42 நாடுகளுக்கு வழங்கப்பட்ட நான்கு ஆண்டு சுழற்சியின் முதல் ஆண்டான இந்த ஆண்டில், 8 நீண்ட மற்றும் 5 குறுகிய நீள படங்கள் இடம்பெறும் எனத் தெரிய வருகிறது.