பூம் பூம் மாடு ஒன்றை வைத்துக்கொண்டு தெருத்தெருவாக நாதஸ்வரம் வாசித்து வீடுதோறும் இரந்து வாழ்ந்து வரும் எளிய இசைக் கலைஞர் ஒருவரின் காணொளியை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் நெட்டிசன் ஒருவர்.
அந்த எளிய கலைஞனின் வாசிப்பையும் அதில் இருக்கும் வாசிப்பின் நுட்பங்களையும் கவனித்த நெட்டிசன் ‘நல்லதோர் வீணை செய்தே ..’ உருகிப் பதிவிட்டிருந்தார். அந்தக் காணொளியைக் கண்ட இசையமைப்பாளர் நடிகர் ஜி.வி.பிரகாஷ், ‘இந்த கலைஞர் எந்த ஊர், என்ன பேர், அவரிடம் மொபைல் உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தால், நாம் அவரை பாடல் பதிவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவரது வாசிப்பு உண்மையிலேயே மிக திறமையாகவும், துல்லியமாகவும் இருக்கிறது” என்றும் வியந்து எதிர்வினையாற்றி அதை ரீ-ட்வீட்டும் செய்திருந்தார்.
அந்த நாதஸ்வர தெருப்பாடகர் வைத்திருந்த காளைமாடு கர்நாடகத்தில் பிரசித்தி பெற்றுள்ள ஒன்று என்பதையும் அவர் நின்று வாசிக்கும் தெரு பெங்களூர் புறநகர் என்பதையும் கண்டுபிடித்தார் ஒரு கன்னடத் திரைப்பட இயக்குநர். அவர், ‘டாட்டர் ஆஃப் பர்வதம்மா’ என்ற கன்னடப் படத்தை இயக்கியவர். நாதஸ்வர கலைஞரின் பெயர் நாராயணன் என்பதைக் கண்டுபிடித்து அவரது தொலைபேசி எண்ணையும் ஜி.வி.பிரகாஷுக்கு சமூக வலைதளம் வழியாகவே பதிவிட.. ‘விரைவில் அவரை எனது பாடல் பதிவில் வாசிக்க வைக்கிறேன்’ என இயக்குநர் சங்கருக்கு நன்றி கூறியிருக்கிறார் ஜீ.வி. பிரகாஷ்.
If we could find this person . We could use him for recordings . So talented and good precision on the notes ... talented https://t.co/79LcQrrZpj
— G.V.Prakash Kumar (@gvprakash) May 22, 2021