"அன்பே சிவம் " சைவசமயத்தின் தாரகமந்திரம். இதனையே தமது அறக்கட்டளையின் நோக்கமாகவும், செயலாகவும் கொண்டியங்கும் சூரிச் சைவத்தமிழ்சங்கத்தின் அறப்பணிகளின் தொடர்ச்சியும், நீட்சியும், 25 ஆண்டுகளுக்கும் மேலானாது.
சுவிற்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் அருள்மிகு சிவன் கோவிலாக வேர்விட்டெழுந்துள்ள இத் தலவிருட்சத்தின் விழுதுகள் தாயகம் நோக்கி விரிந்திருப்பதின் பலன்கள் பலவாகும்.
தாயகத்தில் முகமாலைக்கு எனும் தனிச்சிறப்புக்களும் வரலாற்று நினைவுகளும் பலவுண்டு. சமகாலத்தில் அங்கே சூரிச் சிவனின்அருளாட்சியிலும், அன்பேசிவம் அறக்கட்டளையின் செயல்வடிவிலும் எழுந்திருப்பதுதான் 'சிவபுர வளாகம்'. சிவன் ஆலயம், மூதாளர் இல்லம், மூலிகைத் தோட்டம், தொழிற்கூடம், உணவகம், எனும் கூட்டுவடிவமாக எழுந்துள்ள சிவபுரம் வளாகத்தின் பணிகள் வடபகுதியையும் தாண்டி, கிழக்கிலும், மலையகத்திலும் மெல்ல மெல்ல விரியத் தொடங்கியுள்ள காலமிது.
அன்பே சிவம் அறக்கட்டளையால் வருடந்தோறும் நடாத்தபெறும் ' அற்றார் அழிபசி தீர்த்தல் ' எனும் தாயக உணவும் கண்காட்சியும், கலைநிகழ்வுகளும் 07.05.2023 ஞாயிறு காலை முதல் சூரிச் மாநிலத்தில் சூரிச் schilieren பகுதியில் உள்ளரங்க விளையாட்டு மைதான மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இளையவர் பெரியவர் என 200க்கும் மேற்பட்ட தொண்டர்களின் அயராத அர்ப்பணிப்பான கூட்டுழைப்பு, தலைமைத்துவத்துடன் ஒருங்கிணைந்து செயற்படும் கட்டமைப்பு, பொறுப்புணர்வுடன் கூடிய வேலைப்பகிர்வுகள், அருமையான திட்டமிடல்கள், ஒரு மாதகாலத்திற்கும் மேலான ஆயத்தப்பணிகள், என்பவற்றில் சிறந்திருந்திருந்தது அன்றையபொழுது.
பல்வேறு உணவுவகைகள் ருசிப்பதற்கும், பலவகையான கலைநிகழ்வுகள், ரசிப்பதற்குமாக இருந்த பொழுதில், நீண்டநாட்களின் பின்னதான சந்திப்புக்களும், கருத்துப் பகிர்வுகளுக்குமான சாத்தியங்களும் நிறைந்திருந்தன.
தாயகத்தில் இருந்து சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருந்த அன்பேசிவம் அமைப்பின் தாயகப் பிரதிநிதிகளது சிறப்புரைகள், நடன நிகழ்வுகள் என்பவற்றுடன், சுவிற்சர்லாந்திலுள்ள எமது கலைஞர்களுடன், கனடாவில் இருந்து வருகை தந்திருந்த 'சூப்பர் சிங்கர்' புகழ் சின்மயி சிவகுமார் கலந்து கொண்ட அருமையான தாயக இசைச் சங்கமம் நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றது.
இந்த நிகழ்வுகளில் பெருமளவிலான தமிழ் மக்களும், வெளிநாட்டவர்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ருசித்தும் ரசித்தும் மகிழ்ந்திருந்தார்கள். ஆலயங்களின் பணியானது ஆன்ம ஈடேற்றத்திற்கும் அப்பால் சமூக முன்னேற்றத்துக்குமானது என்பதனை உளள்ளுணர்ந்து செயற்படும் சூரிச் சைவத் தமிழ் சங்கத்தின் செயற்திறனால் இனி, அன்பேசிவம் எனில் அற்றார்பழி தீர்த்தல் என்பதும் தாண்டிய அதன் அறப்பணிகள் நினைவில் வரும்.