தனுஷ் தற்போது நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பில் ‘தி கிரே மேன்’ என்ற ஆங்கிலப் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் ஜகமே தந்திரம் இன்று நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இதில் கேம் ஆப் த்ரோன்ஸ் புகழ் ஸ்காட்லாந்து நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் நடித்திருக்கும் நிலையில் இந்தப்படத்தை இன்று பார்த்து முடித்த ‘தி கிரே மேன்’ படத்தின் இயக்குனர்கள் ரூஸோ சகோதரர்கள் (Russo Brothers) தனுஷை மிகவும் வித்தியாசமாகவும் அதேநேரம் உணர்வுபூர்வமாகவும் வாழ்த்தி இருக்கிறார்கள்.
அவர்கள் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் 'சூப்பர் டா தம்பி' என தமிழ் சொற்களை ஆங்கிலத்தில் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்ததோடு தனுஷுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி எனவும் அவர்கள் தங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு நடிகர் தனுஷும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். ஹாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களான ரூஸோ புகழ்பெற்ற அவென்ஜர்ஸ் வரிசையின் இறுதி இரண்டு பாகங்களை இயக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவை ஒருபக்கம் இருக்க.. இன்று தமிழகத்தில் வெளியான தினசரி அனைத்திலும் ஜெகமே தந்திரம் படத்துக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் முழுப்பக்க விளம்பரம் கொடுத்திருந்தது. ஆனால், அதில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களின் பெயர் இருந்ததே தவிர தனுஷின் பெயர் இல்லை. இதற்கான காரணம் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் தனுஷுக்கும் முட்டிக்கொண்டதுதான்.
தனுஷ் இந்தப் படத்தை ஓடிடிக்கு விற்கவேண்டாம் என்றார். ஆனால், தயாரிப்பாளர்கள் எங்களால் வாங்கிய கடனுக்கு வட்டிகட்ட முடியாது என்று மறுத்து நெட்ஃபிளிக்ஸுக்கு படத்தை விற்றுவிட்டனர். இந்நிலையில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் படத்தை விளம்பரப்படுத்தும்படி கேட்டும், தனுஷ் தன்னுடைய ட்விட்டரில் ஒரு சிறிய புகைப்படத்தையும் பகிரவில்லை. இதனால், ரூஸோ சகோதரர்கள் தயாரித்து வரும் ஹாலிவுட் படமான தி கிரேமெனை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கு விற்கும் அவர்களுடைய ஒப்பந்தத்தில் சிக்கல் வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை