சூரியனும் சந்திரனும் ஒன்றாகச் சேரும் நாளை அமாவாசை தினம் என்கிறோம். அமாவாசை தினங்களில் பித்ரு வழிபாடு செய்ய வேண்டும் என்பது சாஸ்திர மரபு.
அதிலும் குறிப்பாக தை அமாவாசை, மஹாளய அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய அமாவாசை நாட்கள் பிதுர் வழிபாட்டிற்கு முக்கியத்துவம் பெறுகின்றன. இவற்றில் தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாளாகும்.
மாதந்தோறும் அமாவாசை நாட்களில், முன்னோர்களுக் பிதிர் தர்ப்பண கடனைச் செய்ய தவறியவர்கள், ஆடி அமாவாசை தினத்தில் பித்ரு தர்ப்பணம் செய்து வழிபடலாம் என்பது சிறப்பு.
நம்முடைய முன்னோர்களை நினைத்து நாம் செய்யக்கூடிய எளிமையான வழிபாடு தான் அமாவாசை வழிபாடு. அமாவாசை தினத்தன்று முடிகளை வெட்டுவதோ, நகங்களை வெட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.
தீர்த்தக்கரைகளில், சமுத்திரக்கரைகளில், இல்லையெனில் தமது இல்லங்களில், காசி (வாரணாசி), அயோத்தி, காஞ்சி, மதுரா, துவாரகை, கயா, ஹரித்வார்ஆகிய முக்தி தீர்த்தங்களில் முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்வதாகப் பிரார்த்தனை செய்து, எள்ளும் நீரும் கொண்டு பிதிர் தர்ப்பணம் செய்ய வேண்டும். பின்னர் பிதிர் பிண்டங்களுக்குப் படையல் செய்து பூஜித்து, தீர்த்தங்களில் கரைத்து, தான தருமங்கள் செய்து, காகங்களுக்கு உணவளித்த பின்னர் தாம் உண்ண வேண்டும்.
ஆலயங்களில் அந்தணர்கள் பூஜை நிறைவில் "சர்வே ஜனா சுகினோ பவந்து" என்று கூறி நாட்டு மக்கள் எல்லோரும் சுகமாக இருக்க வேண்டும். என்றே இறைவனிடம் வேண்டுகின்றனர். அதுபோலவே நமது வாழ்க்கைக்கா ஊனுடலை நமக்களித்து, இறந்துபோன நம் தாய் தந்தையர்களை ஆடி அமாவாசைக் காலத்தில் நினைந்து விரதம் அனுட்டித்து பிதுர்க்கடன் தீர்த்தல் அவசியம்
மிகவும் எளிமையான ஆடி அமாவாசை வழிபாட்டு முறையை மேற்கொண்டு தங்களுடைய முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பரிபூரணமாக பெற்று சிறப்புடன் வாழலாம்.