ஆடி மாதம் சுப காரியங்கள் தொடங்குவதற்கு உகந்தது அல்ல என்பது தமிழ் மக்களிடத்தில் தொடரும் மரபு. அப்படியானால் ஆடி மாதம் தோஷம் நிரம்பியதா எனும் சந்தேகங்களும், கேள்விகளும் எழுவதும் இயல்பு. இதன் உண்மை நிலைதான் என்ன?
ஜோதிட சாஸ்திரத்தின் படி, குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாதத் தொடக்கமாகும். இதனால் ஆடிமாதத்தை ‘கர்கடக மாதம்’ என அழைப்பதும் உண்டு. அயனக் கணிப்பில் ஆடி மாதம் முதலாக, மார்கழி வரையில் தட்சணாயனம் ஆகும். இதனை இலகுவாகச் சொல்வதாயின் சூரியன் தெற்குச் சார்ந்து நகர்வதாகும்.
தெட்சனாயன காலம், ஆன்மீகத்திலும் இறை வழிபாட்டிலும் மக்களுக்கான தொடர்பினையும்,ஈடுபாட்டினையும் ஏற்படுத்தும் காலமாகும். இதன் தொடக்கமாக இறைவனை துதிப்பதற்கும், ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்வதற்கும் இடையூறாக மற்ற விழாக்கள், நிகழ்ச்சிகள் இருந்துவிடாதிருக்கும் வகையில் ஆடிமாதம் சுப விஷேசங்களுக்குத் தவிர்க்கப்படுகிறது.
தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் அதிக அளவு அம்மன் கோவில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. கிராமப்புறங்களில் காவல் தெய்வமாக விளங்கும் கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் சிறப்பாக நடைபெறும். ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காமாட்சியை வணங்கிட திருமண தடைகள் விலகும் என்பதும், ஆடி மாதம் முழுவதும் மீனாட்சியை வழிபட குடும்ப அமைதி ஏற்படும் என்பதும், முத்து மாரியம்மனை வழிபட்டால் திருஷ்டிகள் விலகும் என்பதும் மரபார்ந்த நம்பிக்கை.
இந்த புண்ணிய காலத்தில் மக்கள் புனித நதிகளில் நீராடுவது விசேஷம். அதேபோன்று இக்காலத்தில் பெரும்போக விதைப்புக் காலமும் ஆரம்பமாகும். இவற்றின் பொருட்டு நதிகளில் நீர் வரத்து அதிகமாகும். நதிகளைக் கொண்டாடுவது தமிழர்களின் நீண்ட காலமரபு. ஆடிமாதத்தில் வரும் அமாவாசை, முன்னோர்களுக்கான நீர்கடன் வழிபாடுகளை ஆற்றுவதற்கான பிதுர் தர்ப்பணநாளாகும்.
ஆண்டாள் பிறந்தாள் என்றும், அம்பாளின் ருதுசோபன நாள் என்பதாகவும் சொல்லப்படும் ஆடிப்பூரத்தில் அம்மனுக்கு வளையல்கள் சாற்றி வழிபாடியற்றுவதும், அம்மனுக்குச் சாற்றிய வளையல்களைப் பிரசாதமாகப் பெற்று, பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், முதலான சகல நன்மைகளையும் பெறலாம் என்பது ஐதீகம்.
இத்தகைய சிறப்புக்கள் மிக்க ஆடிப்பிறப்பினை ஈழத்தின் சிறப்புக்குரிய நவாலியூர் சோமசுந்தரப்புலவர்
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்க வாயூறிடுமே
குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே
வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே! எனக் குழந்தைப் பாடலாகப் பாடிக் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
குழந்தைகள் போலே கொண்டாடி மகிழலாம் !