ஈழத்து வழிபாட்டு மரபில் பேசப்படும் ஒரு சொல்வழக்கு, "வீட்டுப்பூஜை". 'விஜயதசமி', 'ஆயுதபூஜை' என தாய்தமிழகம் கொண்டாடடிக் கொண்டிருந்த வழிபாட்டுமுறையை, ஈழத்துச் சைவர்கள் 'வீட்டுப்பூஜை'யாகப் போற்றினார்கள்.
குறிப்பாக யாழ்ப்பாணக் கலாச்சாரத்தில் தவிர்க்கப்படாத வழிபாட்டுமரபாக இருந்து வரும் விடயம். போர்ச் சூழல்களால் புலம்பெயர்ந்த பின்னரும் ஈழத்தமிழர்கள் மத்தியில் தொட்டுத் தொடரும் பாரம்பரியமாக இருக்கும் பழக்கங்களில் ஒன்று ' வீட்டுப்பூஜை'.
அன்மையில் கனடாக் கல்யாணம் ஒன்றில் புலம்பெயர் தமிழர்கள் பலரும் கதிகலங்கி கருத்துரைத்துக் கொண்டிருந்த சமகாலத்தில், நம் கவனத்தையும், கவலையையும் ஈர்த்திருந்த வேறு சில சம்பவங்களாக, புலம்பெயர் தமிழ் சமூகத்தில் நமக்கு அறியப்பட்ட வட்டத்திற்குள் நிகழ்ந்திருந்த இளவயதினரின் அகால மரணங்கள் சில. இதற்கும் வீட்டுப்பூஜைக்கும் என்ன தொடர்பு என இப்போது நீங்கள் எண்ணக் கூடும்.
மிக நெருக்கடிகளுக்கு மத்தியிலும், போரின் அழுத்தங்களிற்குள்ளும் வாழ்ந்து கடந்த சமூகத்தின் பிரதிநிதிகள் நாம். ஒவ்வொரு குடும்பத்திற்குள், ஒன்றுக்கு மேற்பட்ட சொல்லவொன்னாத் துயரங்களும், அவற்றின் அதி கூடிய மனஅழுத்தங்களும் இருக்கின்றன. ஆயினும் அவற்றினைக் கடந்து இன்னமும் வாழ்வின் மீதான நம்பிக்கைகளை, பலருக்கும் தந்து கொண்டிருப்பது அவர்கள் கொண்டிருக்கும் இறைநம்பிக்கை எனின் அதுமிகையில்லை. பேச்சுக்கும், பெருமிதத்திற்கும், வெளிப்படையாக மறுத்துரைக்கும் பலரும் கூட, அடிப்படையில் அந்த நம்பிக்கையின் வழியில் நடப்பதினைக் கண்டுணர்ந்திருக்கின்றோம். பாரம்பரியமான பண்பாட்டு விழுமியங்களின் விழுதுகளாக வரும் மக்களிடம் இவ்வாறு காணப்படுதல் இயல்பும் கூட.
தங்களது நம்பிக்கைகள், தளர்வுற்ற போதிலெல்லாம் இறைநம்பிக்கையூடாகவும், வேண்டுதல்களூடாகவும், சுயநம்பிக்கையை வளர்த்துக்கொண்டு இயல்பு வாழ்க்கையில் தடைகள் தாண்டிய முன்னேற்றமும், மாற்றமும் கண்டார்கள். அதற்கான முயற்சி அவர்களுடையேதாயினும், அதன் ஊக்குவிப்பாக உள்ளிருந்தது அவர்களது பிரார்த்தனைகள்.
இன்றைய புலம்பெயர் சூழலில், இளம் பராயத்தினர் மத்தியில் எழுந்திருக்கக் கூடிய அச்ச உணர்வுக்கான காரணிகள் பலவுண்டு. வணிகமயமான வாழ்க்கைமுறை, இயல்பாகவே போட்டிச் சூழலை உருவாக்கிறது. இவை தவிர, பல்வேறு கலாச்சாரச் சூழலுக்கும், சமூகப் பாரம்பரியக் கட்டுமானங்களும் இடையிலான முரண்கள். அவற்றினால் எழும் அழுத்தங்கள், மறுபுறம். இவற்றுக்கு மத்தியில் சுற்றிச் சுழலும் அவர்களுக்கு, ஆத்மார்த்தமான நம்பிக்கையை தரக் கூடிய பெற்றோர்களும், இவ்வகையான சுழலுக்குள் சிக்கித் தவிப்பதனால், ஆற்றுப்படுத்தும் வகையின்றி தனித்து விடப்படுகின்ற இளைய சமூகம், வகையறியாது தவித்துப் போகின்றது.
இறை நம்பிக்கையை வீடுகளில் தேக்கி வைத்திருந்த நம் முன்னோர், தம் ஆற்றாமையையெல்லாம், ஆண்டவனிடம் சமர்பித்துவிட்டு, ஆளுமையை வளர்த்துக் கொண்டார்கள். புலம் பெயர் சூழலில், இளையவர்களின் ஆற்றாமையைக் களைவதற்கு, அறிவியல் ஆலோசனை வளங்கள் பல இருந்தாலும், சிலருக்கு அவற்றின் வசதியோ அல்லது அவற்றின் மீதான நம்பிக்கையோ வசப்படுவதில்லை. அவ்வாறன இளைஞர்கள் தனித்துத் துவண்டு போகின்றார்கள். அழுத்தங்களின் உச்சத்தில், தவறான முடிவுகளால் மாண்டு போகின்றார்கள்.
இந்தத் துயரநிலையில் இருந்து தற்காத்துக்கொள்ளக் கூடிய அருஞ்சாதனம், அவர்களை அவர்கள் அறிந்து கொள்வது. அதற்கான ஆரம்பத்தினைத் தரக்கூடியது வீடுகளில் வழிபாடியற்றுவது. காலை, மாலை, வேளைகளில் ஒரு சில நிமிடங்களாவது, வீடுகளில் வழிபாடாற்றும் பழக்கத்தினை, இளையவர்களிடத்தில் பயிற்றுவிக்க, பெற்றோர்கள் அதனை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நன்றே செய், அதனை இன்றே செய் ! என்பது போல், புலம் பெயர் சூழலின் அழுத்தங்களினாலும், அறிவியல் சாதனங்களின் அணிவகுப்பினாலும், அருகிவரும் வீடுகளில் வழிபாடாற்றும் பண்பினை, சடங்காக, சம்பிரதாயமாகத் தொடராமல், ஆத்மார்த்தமான ஆன்மீகத் தேடலின் ஆரம்பப் புள்ளியாக, இளையவர்கள் தன்னுணர்ந்து கொள்வதின் துவக்கமாக, 'வீட்டுப்பூஜை' நாளான இன்றைய நாளில் இல்லங்களில் தொடங்குவது நன்மையும், நம்பிக்கையும் தரக்கூடும்.
அனைவர்க்கும், ஆயுதபூஜை, மற்றும் விஜயதசமி, வீட்டுப்பூஜை, வாழ்த்துக்கள் !
- 4தமிழ்மீடியாவுக்காக: மலைநாடான்