"வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே." அன்மைக்காலத்தில் இந்தப் பாடல் இளையவர்களிடத்தில் பிரபலமாகியிருக்கிறது.
குமரக்கடவுளின் அம்சமான வேலை வழிபட்டாலே கவலைகள் நீங்கும்/ பயம் அகலும்/ வெற்றிகள் கிட்டும் என்பது உறுதி .
வேலை மட்டுமே பிரதிஷ்டை செய்து வழிபடும் கோயில்கள் உண்டு. அக்கோவில்கள் அபாரமான அருட் சக்தி வாய்ந்தவையாகவும் இருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவில், தொண்டமானாறு செல்வச் சந்நிதி கோவில்,, கிழக்கு மாகாணத்தில் வெருகல் சித்திரவேலாயுதர், தெற்கில் கதிர்காமம், எனப் பல கோவில்களைச் சொல்லலாம். ஸ்ரீ முருகப்பெருமானின் அம்சமாகவே திகழ்வது அவரது திருகரத்தில் திகழும் வேல் எனும் சக்தியாயுதம். அது சதாரணமான ஆயுதம் அல்ல. ம் எண்ணிய பலன்களை தரவல்லது, நம்மை காப்பது, நம் அறிவைப் பெருக்குவது இந்த ஞானவேல்.
"அந்தமில் ஒளியின் சீரால் அறுமுகம் படைத்த பண்பால்,
எந்தைகண் நின்றும் வந்த இயற்கயால் சத்தியாம்பேர்,
தந்திடும் பனுவல் பெற்ற தன்மையால் தனிவேல் பெம்மான்,
கந்தனே என்ன நின்னைக் கண்டுளக் கவலை நீத்தோம். "
கந்தபுராணத்தில் முருகனது திருக்கைவேலை போற்றி பல பாடல்களை பாடியுள்ளார் ஶ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியர் . அதில் வீரவாகுதேவர் வேற்கடவுளை போற்றும் இப்பாடல் தனித்துவமானது.
அழிவில்லாத ஒளியுடைய சிறப்பாலும், ஆறுமுகங்களை பெற்றிருக்கும் தன்மையாலும், எம் சிவபரம்பொருளிடம் இருந்து வந்த தன்மையாலும், சக்தியாயுதம் என்ற திருநாமம் பெற்ற தன்மையாலும், ஒப்பில்லாத வேற்கடவுளே, உம்மையே கந்தனாக உள்ளத்தில் போற்றி எம் துன்பத்தை போக்கிகொண்டோம் என வீரவாகுதேவர் போற்றுகின்றார்.
கந்தசஷ்டி விரத முதலாம் நாளில், முருகப்பெருமானின் ஞானக்குறியீடான வேற்பெருமானை, எங்கள் குலதெய்வங்களின் பிரார்த்தனைகளோடு பணிந்து போற்றி, பயன் பெறுவோம்.