அடிப்படை சுகாதார வசதிகளை பெற்றுக்கொள்வதில் சவால்களை எதிர்நோக்கும் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார நாப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்குவதற்கு இலங்கையின் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடினமான, மிகவும் கடினமான மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் மற்றும் அடையாளம் காணப்பட்ட வறுமை உள்ள பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.
ஒரு வவுச்சர் அட்டையின் மதிப்பு சுமார் ரூ.1200 ஆக மொத்தம் ரூ.ஒரு பில்லியன் செலவில் இந்த வவுச்சர்கள் அரசாங்கத்தால் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களின் சுகாதாரம் மற்றும் சுகாதாரப் பழக்கவழக்கங்களை வலுப்படுத்துவதன் மூலம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளுக்கு ஆதரவை வழங்குவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என அமைச்சர் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.