2026 உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் நகரங்கள், மற்றும் போட்டி விபரங்களின் முழுப் பட்டியல் வெளியாகியுள்ளது. 2026 ஃபிஃபா உலகக் கோப்பைப் போட்டி, கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளால் கூட்டாக நடத்தப்படவுள்ளன.
இந் நிலையில், அப் போட்டிகள் தொடர்பான ஆரவாரங்களும் அறிவிப்புக்களும் வெளியாகத் தொடங்கியுள்ளன. மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் முதல் உலகக் கோப்பை போட்டி இதுவாகும், மேலும் 48 அணிகள் பங்கேற்கும் முதல் போட்டியும் இதுவேயாகும்.
2026 ஜூன் 11 முதல் ஜூலை 19, வரை 16 நகரங்களில் நடைபெறும் இப் போட்டிகளில்,48 அணிகள் பங்கேற்கும். சம்பிரதாயபூர்வமான தொடக்கப் போட்டி, ஜூன் 11, 2026, மெக்சிகோ சிட்டி ஸ்டேடியத்திலும், இறுதிப் போட்டி ஜூலை 19, 2026, நியூயார்க் நியூ ஜெர்சி ஸ்டேடியத்திலும், இடம்பெறவுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட 16 மைதானங்களிலும் மொத்தம் 104 போட்டிகள் நடைபெறும்.
போட்டிகளை நடத்தும் நகரங்கள், மற்றும் 16 மைதானங்களின் விபரங்கள் வருமாறு.
கனடா: டொராண்டோ (டொராண்டோ ஸ்டேடியம்) மற்றும் வான்கூவர் (பிசி பிளேஸ்).
மெக்சிகோ: குவாடலஹாரா (குவாடலஹாரா ஸ்டேடியம்), மெக்சிகோ சிட்டி (மெக்சிகோ சிட்டி ஸ்டேடியம்) மற்றும் மான்டேரி (மான்டேரி ஸ்டேடியம்).
அமெரிக்கா: அட்லாண்டா, பாஸ்டன், டல்லாஸ், ஹூஸ்டன், கேன்சஸ் சிட்டி, லாஸ் ஏஞ்சல்ஸ், மியாமி, நியூயார்க் நியூ ஜெர்சி, பிலடெல்பியா, சான் பிரான்சிஸ்கோ பே ஏரியா மற்றும் சியாட்டில்.
போட்டிகள், குழு நிலை, 32 அணிகள் சுற்று, 16 அணிகள் சுற்று, காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி உட்பட மொத்தம் 104 போட்டிகள் நடைபெறும். 2026-ல் கனடா தனது முதல் ஆண்கள் உலகக் கோப்பைப் போட்டிகளை நடத்தவுள்ளது. இதன் முதல் போட்டி ஜூன் 12 அன்று டொராண்டோவில் நடைபெறும் என அறியத்தரப்பட்டுள்ளது.
2026 பிஃபா உலகக் கோப்பைக்கான பாடலாக, பிரபல பாடகி சஹிராவி (Shakira) னால் பாடப்பெற்ற," One World One Fire " பாடல் இணையத்தில் வெளியாகி, பல்லாயிரம் பார்வைகள் பெற்று வருகிறது.
