free website hit counter

80'களுக்கு அழைத்துச் செல்லும் 'செல்ல மகளே!'

சினிமா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஒரு பாடல் காணொளியாக மட்டும் இல்லாமல், பழைய தமிழ்த் திரையிசை உருவான விதத்தையே ஒரு சிறிய காட்சிக் கவிதையாக மீட்டுருவாக்க முயல்வதைக் காட்டுகிறது ‘மகளே’ காணொளி. ‘பத்தா’ படத்தின் முதல் பாடலாக வெளியாகியிருக்கும் ‘மகளே’, சாய் அபயங்கரின் வழக்கமான துள்ளல் இசைப் பாணியிலிருந்து மாறுபட்ட விலகலைக் காட்டுகிறது.

கார்த்திக் நேத்தாவின் வரிகளும், சாய் அபயங்கரின் மென்மையான இசையும்,குரலும் இணைந்து, தந்தை மகள் பாசத்தை மையப்படுத்துகின்றன. ஆனால் இந்தப் பாடலின் சுவாரஸ்யம் பாடலில் மட்டுமல்ல; அதை காட்சிப்படுத்தியிருக்கும் விதத்தில்தான்.

80-களின் இசை பதிவு அறைக்குள் பார்வையாளரை அழைத்துச் செல்வது காணொளியின் முக்கியமான பலம். பழைய ரெக்கார்டிங் ஸ்டுடியோ, அக்கால இசைக்கருவிகள், பதிவு செய்யும் முறைகள் போன்றவற்றை மீண்டும் உருவாக்கியிருப்பது வெறும் ‘ரெட்ரோ லுக்’ கொடுப்பதற்கான முயற்சியாகத் தெரியவில்லை. பாடல் எவ்வாறு உருவாகிறது என்பதைப் பார்வையாளருக்குக் காட்டுவதன் மூலம், ‘இசை என்பது கேட்கப்படுவது மட்டுமல்ல; அது உருவாகும் தருணமும் ஒரு அனுபவம்’ என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

இதில் சாய் அபயங்கர் இசையமைப்பாளராகவும் பாடகராகவும் தோன்றுவது இன்னொரு சுவாரஸ்யமான அடுக்கு. இளம் இசையமைப்பாளரின் தற்போதைய முகத்தையும், பழைய தலைமுறை இசை உருவாக்கத்தின் அழகியலையும் ஒரே காணொளிக்குள் சந்திக்க வைக்கும் உத்தியாக இதைப் பார்க்கலாம். ஆனால் அது முழுமையடைந்ததா என்பது கேள்விக்குரியது.

இந்த 80-களின் மீட்டுருவாக்கம் அழகாக இருந்தாலும், ‘ரெட்ரோ’ என்பது சில இடங்களில் காட்சியின் உள்ளார்ந்த உணர்வை விட முன்னணிக்கு வந்துவிடும் அபாயம் இருக்கிறது. அதாவது, பார்வையாளர் “எவ்வளவு அழகாக அந்தக் காலத்தை மீண்டும் உருவாக்கியிருக்கிறார்கள்!” என்று ரசிப்பதில் மூழ்கும்போது, ‘மகளே’ என்ற உறவின் உணர்வு சற்று பின்தள்ளப்படுகிறது. அதேபோல், பாடலின் மையமான தந்தை மகள் பாசத்தையும் இன்னும் ஆழமாகக் காட்சிகளால் சொல்லியிருக்கலாம் என்ற எண்ணமும் ஏற்படுகிறது. ஆனால் இந்தக்  காணொளி பெரும்பாலும் பாடல் உருவாகும் சூழல் மற்றும் காலப்பின்னணியை சுட்டுகிறது; ஆனால் படத்தில் தந்தை மகள் உறவின் தனிப்பட்ட நெருக்கம் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே வரும் என எதிர்பார்க்கலாம். அவ்வாறு வருமாயின்  பாடல் முடிந்த பிறகும் மனதில் நிற்கும் உணர்வுத் தாக்கம் கூடுதலாக இருக்கலாம்.

வெளியாகிய சில தினங்களுக்குள்ளேயே மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று வரும், ‘மகளே’ காணொளியின் மிகப்பெரிய வெற்றி, கடந்த கால நினைவுகளை (nostalgia ) வெறும் அலங்காரமாகப் பயன்படுத்தாமல், பாடல் உருவாகும் இசைச் சூழலின் ஒரு பகுதியாக மாற்றியிருப்பது.

சாய் அபயங்கர் தன்னுடைய பல அடுக்குகள் கொண்ட இசை அடையாளத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு, வேறொரு கோணத்தில் காட்டுகிறார். ஆனால் 80'களின் இசை மென்மையைத்  இசைஞானி, மெல்லிசை மன்னர் உட்பட்ட பல ஜாம்பவான்கள் தந்திருக்கையில், அவற்றோடு நிற்பது பெரும் சவாலான முயற்சியே.

கார்த்திக் நேத்தாவின் வரிகள் உறவின் மென்மையைத் தருகின்றன; 80-களின் recording-studio அழகியல் காணொளிக்கு தனித்துவத்தை அளிக்கிறது. இது “ஒரு பாடலுக்கான music video” என்பதைவிட, “ஒரு பாடல் பிறக்கும் காலத்தையும் கலாச்சாரத்தையும் நினைவுகூரும் visual piece” என்ற வகையில் சுவாரஸ்யமான முயற்சி எனலாம்.

- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula