மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு தீர்வில்லை என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, நெல்லையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது, "மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் சட்டரீதியாக உச்ச நீதிமன்றத்தை நாடுவதுதான் நமக்காக எப்போதும் இருக்கும் ஒரே அணுகுமுறை. ஆனால், கர்நாடகத்தில் நமக்கு (தமிழ்நாடு) தண்ணீர் தரக் கூடாது என 100, 200 ஆண்டுகளாக ஒருமனதாக இருக்கின்றனர்.
1974-ல் திமுக ஆட்சியில் இருந்த 50 ஆண்டு வலுவான ஒப்பந்தத்தை நாம் தொலைத்து விட்டோம். நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு உச்ச நீதிமன்றம் மட்டும்தான். அதனைத் தவிர இருக்கும் வேறு வாய்ப்புகளை முதல்வர் ஆராய்ந்து, பின்னர் அறிவிப்பார்.
மேலும், மத்திய அரசுக்கும் அழுத்தங்கள் தரப்படும். இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சகத்துக்கே தெளிவில்லை. அவர்களே கர்நாடகத்துக்கு ஆதரவாகத்தான் பேசுகின்றனர். தமிழகத்துக்கு எதிராகவும் விரோதிபோலவும் பேசுகின்றனர்.
இதில் மாநில அரசுகள் எதுவும் செய்ய முடியாது; எதுவாயினும் மத்திய அரசுதான் செய்ய முடியும்.
நதிநீர் விவகாரத்தில் உத்தரவை மதிக்காமல் இருக்கும் மாநில அணைகளின் நிர்வாகத்தை மத்திய அரசே எடுத்து நடத்த வேண்டும்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் இருந்தாலும், பாஜக இருந்தாலும் அவர்களின் ஒரே முடிவு, தமிழகத்துக்கு தண்ணீர் தரக் கூடாது என்பதுதான்" என்று தெரிவித்துள்ளார்.
