"முருங்கையை நட்டான் வெறுங்கையோடு வர மாட்டான்" என்ற முதுமொழிக்கு ஏற்ப முருங்கையின் அனைத்து பாகங்களும் மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்தது. அட அப்படி என்ன விசேஷம் இந்த முருங்கையில் என இன்று அறிந்து கொள்வோம்.
குடும்ப பெயர்- Moringaceae
ஆங்கிலப் பெயர்- Drum_stick tree
சிங்கள பெயர்- Murunga
சமஸ்கிருத பெயர்- Sigru, Janapriya
வேறு பெயர்கள்- சிக்குரு, கிரஞ்சனம், கிழவி, சோபாஞ்சனம்
பயன்படும் பகுதி-
எல்லா பாகங்களும்
சுவை- கைப்பு, துவர்ப்பு, இனிப்பு
வீரியம்- சீதம்
விபாகம்- காய்- இனிப்பு
பட்டை, வேர் - கார்ப்பு
வேதியியல் சத்துக்கள்-
Calcium, Iron, Phosphorus, Protein, Galactose, Moringine, moringinine, mucilage, inorganic acid, essential oil, acrid acid, ben oil, traganth, Spirochin
மருத்துவ செய்கைகள்-
Abortifacient- கருப்பை சிதைச்சி
Acrid- காறல் உண்டாக்கி Antispasmodic-இசிவகற்றி
Diuretic-சிறுநீர் பெருக்கி Emmenagogue- ருதுவுண்டாக்கி Expectorant-கோழையகற்றி
Stimulant-வெப்பமுண்டாக்கி
Tonic-உரமாக்கி
Vesicant-கொப்புளம் எழுப்பி
தீரும் நோய்கள்-
அக்னி மந்தம், உட்சூடு, பித்த நோய்கள், கண் நோய், அஸ்திசுரம், உணவில் விருப்பமின்மை, விந்து நஷ்டம், சந்நிபாத சுரம், வாத தோஷம், திரிதோஷம்
பயன்படுத்தும் முறைகள்-
இதன் இலை, இரண்டு பல்லுபூண்டு, ஒரு துண்டு மஞ்சள், உப்பு, மிளகு இவைகளை சேர்த்து அரைத்து கற்கம் செய்து, நாய்க்கடி விடத்தை முறிக்க, உள்ளுக்குக் கொடுத்து, அதே கற்கத்தை புண்ணின் மீதும் பற்றிட புண் ஆறி விடமும் நீங்கும்.
இலை சாற்றை கண்ணில் விட வலிகள் நீங்கும். தேனுடன் சேர்த்து அஞ்சனமாக கண்ணிமைகளில் தேய்க்கலாம்.
இலையும் மிளகும் சேர்த்து நசுக்கி சாறெடுத்து தலைவலிக்கு நெற்றியில் தடவலாம்.
இலைச்சாற்றை 2 ml கொடுக்க நன்றாக வாந்தியாகும்.
இலையை அரைத்து வீக்கங்களின் மீது பற்றிடலாம்.
இதன் ஈர்க்கு, கறிவேப்பிலை ஈர்க்கு இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து வயிற்றுவலி முதலிய நோய்களுக்கு கொடுக்கலாம். வயிற்று கிருமிகளை போக்கும்.
பூவிலிருந்து பிஞ்சு தோன்றியவுடன் எடுத்து தோலுடன் சாப்பிட்டு வர மிகுந்த வெப்பத்தை தணித்து தாது புஷ்டியையும் உண்டுபண்ணும்.
விதையில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இவ் எண்ணெய் வாத வலியை நீக்கும்.
இதன் விதை, கடுகு, சணல் விதை, பார்லி ஆகிய இவை சம அளவு எடுத்து தயிர் விட்டு அரைத்து கண்டமாலையின் மீது பூசிவர நன்மை தரும்.
அனேக தாதுபுஷ்டி லேகியங்களில் துணை சரக்காக உபயோகிக்கப்படுகின்றது. மிகவும் நீர்த்துப் போன தாதுவை கெட்டிப்படுத்தும்.
பட்டையை சிதைத்து வீக்கங்களின் மீது வைத்துக் கட்டுவதுண்டு.
பட்டைசாறு, குப்பைமேனி சாறு இவ்விரண்டையும் சேர்த்து எண்ணெய் விட்டு காய்ச்சி கரப்பான், சொறி, சிரங்கு மீது தடவி வர அவை நீங்கும்.
பிசினை எண்ணெயில் கரைத்து காதில் விட காது நோய் ஆறும். பாலில் கரைத்து கன்ன பகுதியில் பூச தலைவலி நீங்கும். இதை நெற்றிக்கட்டிக்குப் பூசலாம்.
வேரின் சாற்றுடன் பால் சேர்த்து தக்க அளவாக சாப்பிட விக்கல், சுவாசகாசம், கீல்வாதம், உள்ளுறுப்புகளின் வீக்கம், முதுகு வலி முதலியவை நீங்கும்
வேரை அரைத்து கடுகு தூள் சேர்த்து பற்றிட வேரின் வீரியம் அதிகப்படும்.
~சூர்யநிலா