சுவிற்சர்லாந்தின் தெற்குப் பகுதியில், டிசினோ (Ticino) மாகாணத்தில் அமைந்துள்ள அழகிய ஏரிக்கரை நகரமான லோகார்னோ ஆண்டுதோறும் உலகத் திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முக்கியமான பண்பாட்டு மையமாக மாறுகிறது. அங்கு நடைபெறும் லோகார்னோ சர்வதேச திரைப்பட விழா (Locarno Film Festival), உலகின் மிகப் பழமையானதும், மிகுந்த மதிப்பும் பெற்ற திரைப்பட விழாக்களில் ஒன்றாகும். புதிய கலைஞர்களை உலக அரங்கிற்கு அறிமுகப்படுத்துவதிலும், மாற்றுச் சினிமாவை ஊக்குவிப்பதிலும் இவ்விழா தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.
லோகார்னோ சர்வதேச திரைப்பட விழா 1946 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலக நாடுகளுக்கிடையே கலாச்சார ஒற்றுமையையும், கலைப் பரிமாற்றத்தையும் வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட முக்கிய திரைப்பட விழாக்களில் இதுவும் ஒன்றாகும். பிரான்சின் கான் திரைப்பட விழாவும் இதே காலகட்டத்தில் உருவான நிலையில், லோகார்னோ தனது தனித்துவமான கலைப் பார்வையால் வேறுபட்ட அடையாளத்தை உருவாக்கியது.
தொடக்க ஆண்டுகளில் பெரும்பாலும் ஐரோப்பிய திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும், பின்னர் ஆசியா, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் திரைப்படங்களும் இவ்விழாவில் முக்கிய இடம் பெறத் தொடங்கின. இதன் மூலம் உலக சினிமாவின் பல்வகைமையையும், புதிய குரல்களையும் அறிமுகப்படுத்தும் மேடையாக லோகார்னோ வளர்ச்சி பெற்றது.
கலைநோக்கமும் தனித்துவமும்
பெரும் வர்த்தக திரைப்படங்களை விட, கலைநயம் மிக்க, சோதனை முயற்சிகள் நிறைந்த, புதிய இயக்குநர்களின் படைப்புகளுக்கு முன்னுரிமை வழங்குவது லோகார்னோ விழாவின் முக்கிய சிறப்பம்சமாகும்.
உலகம் முழுவதிலுமிருந்து முதல் அல்லது இரண்டாவது திரைப்படத்தை உருவாக்கிய இயக்குநர்கள் தங்கள் படைப்புகளை இவ்விழாவில் திரையிடுவதன் மூலம் சர்வதேச கவனத்தைப் பெறுகின்றனர். பின்னாளில் உலகப் புகழ் பெற்ற பல திரைப்பட இயக்குநர்கள் தங்கள் ஆரம்பகால படைப்புகளை லோகார்னோவில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
பியாச்சா கிராண்டே – திறந்தவெளி திரையரங்கின் அற்புத அனுபவம்
லோகார்னோ திரைப்பட விழாவின் மிகவும் பிரபலமான அம்சம் Piazza Grande எனப்படும் திறந்தவெளி திரையிடல் அரங்காகும். நகரின் மையச் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் திறந்த வானத்தின் கீழ் திரைப்படங்களை ரசிக்கும் அனுபவம், உலக திரைப்பட விழாக்களில் அரிதாகக் காணப்படும் ஒன்றாகும்.
இந்த நிகழ்வு திரைப்படத்தை வெறும் பொழுதுபோக்காக அல்லாமல், மக்களை ஒன்றிணைக்கும் கலாச்சார அனுபவமாக மாற்றுகிறது.
“Golden Leopard” – உயரிய விருது
லோகார்னோ திரைப்பட விழாவின் உயரிய விருது Golden Leopard (Pardo d'Oro) ஆகும். சிறந்த திரைப்படத்திற்கு வழங்கப்படும் இந்த விருது, உலகத் திரைப்படத் துறையில் பெருமைக்குரிய அங்கீகாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இதற்கு மேலாக சிறந்த இயக்குநர், நடிகர், நடிகை, முதல் திரைப்படம், குறும்படம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்படுகின்றன.
உலகச் சினிமாவுக்கு அளிக்கும் பங்களிப்பு
லோகார்னோ திரைப்பட விழா புதிய திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்பட மாணவர்களுக்கு ஒரு கல்வி மற்றும் தொழில்முறை சந்திப்பு மேடையாகவும் விளங்குகிறது.
திரைப்படத் திரையிடல்களுடன் இணைந்து நடைபெறும் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், தயாரிப்பு சந்தைகள் மற்றும் தொழில்முறை பயிற்சித் திட்டங்கள் மூலம் உலக திரைப்படத் துறையில் புதிய ஒத்துழைப்புகள் உருவாகின்றன.
சுவிற்சர்லாந்தின் பண்பாட்டு அடையாளம்
பெரிய பொருளாதார மையமாக மட்டுமல்லாமல், உலகளாவிய கலாச்சார உரையாடலுக்கான தளமாகவும் சுவிற்சர்லாந்தை அறிமுகப்படுத்துவதில் லோகார்னோ திரைப்பட விழா முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான திரைப்பட ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், விமர்சகர்கள் மற்றும் திரைப்படத் துறை நிபுணர்கள் லோகார்னோவிற்கு வருகை தருகின்றனர். இதனால் நகரின் சுற்றுலா, விருந்தோம்பல் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்திற்கும் கணிசமான ஊக்கம் கிடைக்கிறது.
எதிர்வரும் ஆண்டில் 80வது ஆண்டினைக் கொண்டாடும், பாரம்பரியத்தைத் தாங்கி நிற்கும் லோகார்னோ சர்வதேச திரைப்பட விழா, திரைப்படங்களைப் போட்டியிடச் செய்வதற்கான நிகழ்வாக மட்டும் அல்லாமல், உலக மக்களின் அனுபவங்கள், கலாச்சாரங்கள் மற்றும் சிந்தனைகளை இணைக்கும் ஒரு கலைப் பாலமாக விளங்குகிறது.
புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் அதன் உறுதியான நோக்கம், சோதனை முயற்சிகளை ஊக்குவிக்கும் கலைச் சுதந்திரம், மற்றும் உலகச் சினிமாவின் பல்வகைமையை கொண்டாடும் அதன் பாரம்பரியம் ஆகியவை, லோகார்னோ திரைப்பட விழாவை உலகின் மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் ஒன்றாக நிலைநிறுத்தியுள்ளன. திரைப்படக் கலை தொடர்ந்து புதிய பரிமாணங்களை நோக்கிப் பயணிக்கும் வரையில், லோகார்னோவும் உலகச் சினிமாவின் முக்கியமான சந்திப்புத் தளமாகத் தொடர்ந்து விளங்கும்.
லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 79 வது பதிப்பு, உலகெங்கிலுமிருந்து சமர்ப்பிக்கப்பட்ட 7,759 சமர்ப்பிப்புகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 233 திரைப்படங்களுடன், நாளை 05.08.2026 புதன்கிழமை குதுகலமாக ஆரம்பமாகிறது. சிறப்பான திரைப்படங்களின் பார்வைகளுடனும், செய்திகளுடனும், லோகார்னோவில் இருந்து சந்திக்கலாம்.
- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்
