உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பை இலக்காகக் கொண்ட இலங்கை தேசிய ஜூனியர் தேர்வு சாம்பியன்ஷிப்பை இந்த மாதம் 27 ஆம் திகதி (ஜூலை 27) நடத்த தேசிய தடகள சங்கம் முடிவு செய்துள்ளது.
தடகள சங்கம் முன்னதாக ஜூலை 25 இல் போட்டியை நடத்த திட்டமிட்டிருந்தது, ஆனால் பின்னர் தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக அதை இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
தற்போது,கடுமையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளதால் மேற்படி தேர்வு குறிப்பிட்ட சில போட்டிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் இது உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பிற்கு இலங்கை வீரர்கள் தகுதி பெறுவதற்கான வாய்ப்பாக அமையும். உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் கென்யாவில் வரும் ஆகஸ்ட் 17 முதல் 22 வரை நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.