தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். அந்தத் தருணத்திலிருந்து, அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இயல்பாகவே அரசியல் மற்றும் ஊடகங்களின் தீவிர கவனத்திற்கு வந்தனர். அந்தப் பட்டியலில் அதிக எதிர்பார்ப்பைச் சுமப்பவர் ஜேசன் சஞ்சய். ஆனால், ஒரு சுவாரஸ்யமான முரண்பாடு இங்கே இருக்கிறது.
முதல்வரின் மகனாக இருப்பதற்கு முன்பே, ஜேசன் சஞ்சய் தனது அடையாளத்தை ஒரு திரைப்பட இயக்குநராக வடிவமைக்கத் தொடங்கிவிட்டார். அவரது முதல் திரைப்படமான 'சிக்மா' இன்னும் வெளியாகவில்லை. இருந்தாலும், அவர் அளித்திருக்கும் நேர்காணல்கள், திரைப்படம் குறித்துப் பேசிய விதம், தன்னை முன்வைத்த அணுகுமுறை ஆகியவை, "இவர் அரசியல் வாரிசா... அல்லது சினிமாவுக்குள் தனக்கென ஒரு மொழியைத் தேடும் இளம் படைப்பாளியா?" என்ற விவாதத்தை உருவாக்கியுள்ளன.
ஒரு விஷயம் கவனிக்கத்தக்கது. சமீப காலங்களில் பிரபலங்களின் வாரிசுகள் ஊடகங்களில் தோன்றும்போது, தங்களைச் சுற்றியிருக்கும் பரபரப்பையே மூலதனமாக்க முயல்கிறார்கள். ஆனால் ஜேசன் சஞ்சயின் உரையாடல்களில் அந்த அவசரம் பெரிதாகத் தெரியவில்லை. தனது குடும்பத்தைவிட தனது திரைப்படத்தைப் பற்றியே அதிகம் பேசுகிறார். "என் படம் வெளியான பிறகுதான் என்னைப் பற்றி பேசுங்கள்" என்ற பொருள்படும் அணுகுமுறை, செயற்கையாக உருவாக்கப்பட்ட பணிவாகத் தெரியாமல், இயல்பான தொழில்முறை மனநிலையாகவே வெளிப்படுகிறது. ஆனால், விமர்சனரீதியான பார்வையில் இந்தளவில் இதனை மட்டுறுத்திவிட முடிவதில்லை.
பண்பான பதில்கள் ஒரு நல்ல இயக்குநரை உருவாக்காது. அமைதியான பேச்சு ஒரு சிறந்த திரைப்படத்திற்கான உத்தரவாதமுமல்ல. ஒரு நேர்காணலில் தெரியும் முதிர்ச்சி, திரைப்படத்தின் திரைக்கதையிலும், காட்சிமொழியிலும், கதாபாத்திரங்களிலும் பிரதிபலிக்க வேண்டியிருக்கிறது. இல்லையெனில், அந்தப் பணிவு வெறும் பிம்ப மேலாண்மையாகவே மாறிவிடும்.
அதேபோல், அவருக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் குறித்த கேள்விகளும் தவிர்க்க முடியாதவை. இன்று அவர் ஒரு இயக்குநராக அறிமுகமாகும்போது, அவர் முதல்வரின் மகனும் ஆவார். அந்த அரசியல் மற்றும் சமூகச் செல்வாக்கு, அவரைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்புகளையும் விமர்சனங்களையும் அதிகரிப்பது இயல்பே. ஆனால் அந்தச் செல்வாக்கு ஒரு திரைப்படத்தை வெற்றிப்படமாக மாற்ற முடியாது. தமிழ்ச் சினிமா பார்வையாளர்கள் இறுதியில் திரையில் தெரியும் படைப்பைத்தான் மதிப்பிடுவார்கள்.
அதனால்தான், ஜேசன் சஞ்சயை இரண்டு முனைகளில் மதிப்பிடுவது தவறாகிவிடுகிறது. "முதல்வரின் மகன் என்பதால் வந்தவர்" என்று எளிதாக நிராகரிப்பதும் தவறு; "அவர் பேசும் விதமே பெரிய இயக்குநருக்குரியது" என்று முன்கூட்டியே கொண்டாடுவதும் தவறு.
உண்மையில், ஜேசன் சஞ்சய் தற்போது நிற்கும் இடம் மிகவும் சிக்கலானது. அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் சினிமாவால் மட்டுமல்ல; அரசியல் அடையாளத்தாலும் வாசிக்கப்படும். அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், அவர் இயக்கும் ஒவ்வொரு காட்சியும், அவரது குடும்பப் பின்னணியுடன் ஒப்பிடப்படும். இந்தச் சுமை பலருக்குக் கிடைக்காதது; அதேநேரத்தில் பலர் எதிர்கொள்ள வேண்டியதுமில்லை. இருப்பினும், இதுவரை அவர் வெளிப்படுத்தியிருக்கும் அணுகுமுறையில் ஒரு தெளிவு இருக்கிறது.
அவரது பேச்சு மொழியிலும், உடல் மொழியிலும், பாசாங்குத் தனம் இல்லாத பக்குவநிலை ஒன்று தெரிகிறது. அவர் விரும்புவது அரசியலை அல்ல, சினிமாவை மையப்படுத்த விரும்புகிறார் என்பது தெளிவாகிறது. குடும்பப் புகழை அல்ல, தனது படைப்பை முன்னிறுத்த முயல்கிறார். இது ஒரு நல்ல அறிகுறி. ஆனால் அது இன்னும் ஒரு அறிகுறி மட்டுமே; சாதனை அல்ல. ஒரு இயக்குநரை அவரது நேர்காணல்கள் அறிமுகப்படுத்தலாம்; ஆனால் அவரது திரைப்படம்தான் அவரை நிலைநிறுத்தும்.
'சிக்மா' வெளியாகும் நாளில், வெறும் ஒரு திரைப்படத்தின் வெற்றி அல்லது தோல்வி மட்டுமே தீர்மானிக்கப்படாது. "முதல்வரின் மகன்" என்ற அடையாளத்தைத் தாண்டி, "ஜேசன் சஞ்சய் என்ற இயக்குநர்" பிறக்கிறாரா என்ற கேள்விக்கும் அன்றுதான் முதல் பதில் கிடைக்கும். அந்தப் பதிலை எழுதுவது விமர்சகர்கள் அல்ல. வெள்ளித்திரையும், அதற்கு முன் அமர்ந்திருக்கும் பார்வையாளர்களும்தான்.
- 4தமிழ்மீடியாவிற்காக: மாதுமை.
