free website hit counter

வானில் அதிசயம், உள்ளத்தில் விழிப்பு !

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

2026 ஆகஸ்ட் 12 பூரண சூரிய கிரகணம் ஒன்று நிகழவிருக்கிறது. வானில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் மனித மனதில் வியப்பையும், சிந்தனையையும், சில சமயங்களில் அச்சத்தையும் தோற்றுவித்திருக்கிறது. அவற்றில் மிகவும் வியப்பூட்டும் நிகழ்வாக விளங்குவது சூரிய கிரகணம். பகலின் மத்தியில் சூரியன் மங்குவது, ஒளி இருளாக மாறுவது, இயற்கை சில நிமிடங்கள் அமைதியில் ஆழ்வது, இவை அனைத்தும் மனிதனை ஆயிரமாண்டுகளாகக் கவர்ந்துள்ளன.

"ஆதித்யோ ஜகதோ சக்ஷுஃ" எனும் யஜுர் வேதம் சூரியன் உலகத்தின் கண் என்கிறது. ஆன்மீகம் இதனை அக ஒளியைத் தேடும் தருணமாகக் காண்கிறது. ஆனால் விஞ்ஞானம் இதனை விண்மீன் இயக்கத்தின் துல்லியமான விளைவாக விளக்குகிறது. இவ்விரண்டையும் எதிர்மறைகளாக அன்றி, ஒரே உண்மையின் இரு முகங்களாக இந்து  ஞான மரபு அணுகுகிறது.

2026 ஆகஸ்ட் 12 அன்று நிகழவிருக்கும் முழுச் சூரிய கிரகணம், இந்த இரு நோக்குகளையும் மீண்டும் நினைவூட்டும் அரிய வானியல் நிகழ்வாக அமைகிறது. சூரியன் ஒளியின் மட்டுமல்ல, ஞானத்தின் சின்னமும் ஆகும். வேதங்களில் சூரியன் ஒரு விண்கோளாக மட்டும் போற்றப்படவில்லை. உயிரின் ஆதாரம், தர்மத்தின் சாட்சி, அறிவின் ஒளி என்று உயர்ந்த சூரியன் பகவானாக இடம் பெற்றுள்ளார்.

இருக்வேதம் சூரியனை, "தத் ஸவிதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோ நஃ ப்ரசோதயாத்" என்று காயத்ரி மந்திரத்தின் மூலம் தியானிக்கிறது. இம்மந்திரத்தின் பொருள் "எமது புத்தியை ஒளியூட்டுகின்ற அந்த தெய்வீகத்தின் பரம ஒளியை நாம் தியானிக்கின்றோம்; அவர் எமது அறிவை நல்வழிப்படுத்துவாராக.". இதனால், சூரிய வழிபாடு என்பது வெறும் வெளி ஒளிக்கான வணக்கம் அல்ல; உள்ளொளி விழிப்பிற்கான பிரார்த்தனையாகும்.

சூரிய கிரகணம் – வானியல் விளக்கம்

சந்திரன், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வந்து சூரியனை மறைக்கும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இவ்வாறு நிகழும் சூரிய கிரகணம், முழுச் சூரிய கிரகணம், பகுதிச் சூரிய கிரகணம், வளையச் சூரிய கிரகணம், என மூன்று வகைகள் உள்ளன.

2026 ஆகஸ்ட் 12 அன்று நிகழவிருப்பது முழுச் சூரிய கிரகணம்.

இந்த நிகழ்வின் முழுப் பாதை வட அட்லாண்டிக் பெருங்கடல், கிரீன்லாந்து அருகிலுள்ள பகுதிகள், ஐஸ்லாந்து மற்றும் வட ஸ்பெயின் வழியாகச் செல்லும். ஐரோப்பாவின் பல நாடுகளில் இது பகுதிக் கிரகணமாகக் காணப்படும். ஆனால் இந்தியாவிலும் இலங்கையிலும் அந்நாடுகளில் சூரிய அஸ்தமனத்தின் பின்னராக அமைவதால், ஆசிய நாடுகளில் இந்தக் கிரகணம் தெரியாது. எனவே அந்நாடுகளில் இதற்கான கிரகண தரிசனமோ, உள்ளூர் கிரகண நேரங்களோ இல்லை.

புராணங்களில் கிரகணத்தின் விளக்கம்

ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணு புராணம், மகாபாரதம் போன்ற நூல்களில் ராகு–கேது பற்றிய வரலாறு விவரிக்கப்படுகிறது.

பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த அமிர்தத்தை தேவர்களுக்கே வழங்க மகாவிஷ்ணு மோகினி வடிவம் எடுத்தார். அப்போது ஸ்வர்பானு என்ற அசுரன் தேவராக வேடமிட்டு அமிர்தம் அருந்தினான். இதனை சூரியனும் சந்திரனும் அடையாளம் காட்டினர். உடனே மகாவிஷ்ணு சுதர்சன சக்கரத்தால் அவனது தலையைக் கொய்தார். அமிர்தம் அருந்தியிருந்ததால் அவன் இறக்கவில்லை. அதனால் தலை ராகு ஆனது.
உடல் கேது ஆனது. அதன் பின்னர் சூரியனையும் சந்திரனையும் ராகு விழுங்கும் போது நிகழ்வது சூரிய சங்திர கிரகணங்கள்  என்பது புராண உருவகம். இது வானியல் விளக்கம் அல்ல; அநீதியின் மீது நீதியின் வெற்றி, அகந்தையின் விளைவு, கர்ம நியதி ஆகியவற்றை எடுத்துரைக்கும் தத்துவக் கதை என்று அறிஞர்கள் விளக்குகின்றனர்.

கிரகண காலத்தின் ஆன்மீகப் பொருள்

இந்து சமயத்தில் கிரகணம் ஒரு "புண்யகாலம்" என்றும் கருதப்படுகிறது. பல தர்ம நூல்களில், "கிரஹணே ஜபஹோமாதி கோடி குணபலப்ரதம்" என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது, "கிரகண காலத்தில் செய்யப்படும் ஜபம், ஹோமம், தியானம் ஆகியவற்றிற்கு பல மடங்கு பலன் உண்டு" என்ற பக்தி மரபு நம்பிக்கை நிலவுகிறது. இதனை, மனம் இயற்கையாக அமைதியடையும் தருணத்தை ஆன்மீகப் பயிற்சிக்குப் பயன்படுத்தும் ஒரு மரபாகவும் புரிந்துகொள்ளலாம்.

கிரகண காலத்தில் கடைப்பிடிக்கப்படும் வழக்கங்கள்

நாட்டுக்கு நாடு, பிராந்தியத்திற்கு பிராந்தியம் வழக்கங்களில் வேறுபாடு இருந்தாலும், பொதுவாக பின்வரும் அனுஷ்டானங்கள் காணப்படுகின்றன. காயத்ரி மந்திர ஜபம், "ஓம் நமஃ சிவாய" அல்லது "ஓம் நமோ நாராயணாய" ஜபம், விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம், ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம், மகாமிருத்யுஞ்ஜய மந்திரம், பகவத் கீதை வாசித்தல், தியானம், அன்னதானம், ஏழைகளுக்கு உதவி, கிரகணம் முடிந்த பின் நீராடுதல், இல்லத் தூய்மை மற்றும் பூஜை என்பனவாம். இவ்வாறான அனுஷ்டானங்கள் மன ஒருமைப்பாடு, தன்னடக்கம், இறைநினைவு ஆகியவற்றை வளர்க்கும் ஆன்மீக ஒழுக்கங்களாகக் கருதப்படுகின்றன.

இந்தியா மற்றும் இலங்கையில் இந்தக் கிரகணம்

2026 ஆகஸ்ட் 12 சூரிய கிரகணம் இந்தியாவிலும் இலங்கையிலும் தெரியாது. இதனால் சூதக காலம் பொருந்தாது. ஆலயங்களை மூட வேண்டிய அவசியமில்லை. நித்திய பூஜைகள் இயல்பாக நடைபெறலாம். உபவாசம் கட்டாயமல்ல. பல சமய அறிஞர்களும் பஞ்சாங்க மரபுகளும், காணப்படாத கிரகணத்திற்காக கட்டாய அனுஷ்டானம் தேவையில்லை என்று விளக்குகின்றன. ஆனால், பக்தர்கள் விருப்பப்பட்டால் அந்த நாளில் ஜபம், தியானம், வேத பாராயணம், இறை வழிபாடு போன்றவற்றில் ஈடுபடுவதில் எந்தத் தடையும் இல்லை.

அறிவியல் மற்றும் நம்பிக்கை மோதலா? அல்லது இணக்கமா?

இன்றைய காலத்தில் சிலர் அறிவியலையும், சமய மரபுகளையும் ஒன்றுக்கொன்று எதிரானவையாகக் காண்கிறார்கள். ஆனால் இந்து ஞான மரபு அவ்வாறு பார்க்கவில்லை. வானியல் கிரகணம் எப்படி நிகழ்கிறது என்பதை விளக்குகிறது. ஆன்மீகம் அந்த நிகழ்வை நாம் எவ்வாறு உள்ளார்ந்த வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம் என்பதை எடுத்துரைக்கிறது.

ஒன்று வெளி உலகை ஆராய்கிறது. மற்றொன்று அக உலகை ஆராய்கிறது. இதனால் இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. கிரகணம் ஒரு தத்துவப் பாடம் . சூரியன் மறைந்தது போல் தோன்றினாலும், உண்மையில் சூரியன் மறைவதில்லை. சில நிமிடங்கள் கழித்து மீண்டும் முழு ஒளியுடன் வெளிப்படுகிறார்.

அதுபோலவே நம் வாழ்க்கையிலும், துன்பங்கள் வருகின்றன. இருள் சூழ்கிறது.நம்பிக்கை மங்குகிறது. ஆனால் அவை நிரந்தரமல்ல. இறையருளும், ஞானமும், பொறுமையும் இருந்தால் ஒளி மீண்டும் பிறக்கிறது. இதுவே கிரகணம் நமக்குக் கற்பிக்கும் ஆழமான வாழ்க்கைப் பாடமாகும்.

நிறைவாக..

2026 ஆகஸ்ட் 12 சூரிய கிரகணம் இந்தியாவிலும் இலங்கையிலும் தெரியாதபோதிலும், அது நமக்கு ஒரு ஆழமான நினைவூட்டலை அளிக்கிறது. விண்ணில் நிகழும் ஒவ்வொரு அற்புதமும், இறைவன் படைத்த இயற்கையின் ஒழுங்கையும், பிரபஞ்சத்தின் துல்லியத்தையும் உணர்த்துகிறது.

கிரகணத்தை அச்சத்தின் நாளாக அல்ல, அறிவை வளர்க்கும் நாளாகவும், அகத்தை ஒளிரச் செய்யும் ஆன்மீக வாய்ப்பாகவும் நாம் அணுகினால், அதுவே வேதங்கள் சுட்டிக்காட்டும் உண்மையான பார்வையாகும். "எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லவே எண்ணல் வேண்டும்." என்ற வரிகள் போல, ஒவ்வொரு வானியல் நிகழ்வும் நம்மை உயர்ந்த சிந்தனைக்கே அழைக்கிறது.

சூரியன் சில நொடிகள் மறையலாம்; ஆனால் ஒளி மறைவதில்லை.

அதேபோல், மனித வாழ்வில் சோதனைகள் வரலாம்; ஆனால் ஞானமும் இறையருளும் நிலைத்தவை. "தமஸோ மா ஜ்யோதிர்கமய" "இருளிலிருந்து ஒளிக்கே எங்களை நடத்துவாயாக." என்கிறது பிருஹதாரண்யக உபநிஷத். இதுவே சூரிய கிரகணம் நமக்குச் சொல்லும் நித்திய ஆன்மீகச் செய்தியாகும்.

- 4தமிழ்மீடியாவிற்காக : யாத்ரா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula