இலங்கையில் நாடாளவிய ரீதியில் வெள்ள அனர்த்தமும், அதனைத் தொடர்ந்து நீளும் உதவிக் கரங்களுமான பணிகள் தொடர்கின்றன. இருப்பவன், இல்லாதவன் என யாவரும் ஒருநிலையில் நின்று, உணவுக்கு ஏங்கும் நிலைகளை ஏற்படுத்தும் காரணிகள், இயற்கைப் பேரிடர், போர்ச்சூழல்.
இலங்கையில் போர்ச் சூழல் மாறி, மாற்றம் கண்டுவரும் நிலையில், இந்த இயற்கைப் பேரிடர், எல்லாவற்றையும் கலைத்துப்போட்டிருக்கிறது. இந்த நிலையில் அரசாங்க உதவிகளை மட்டும் எதிர்பாரத்திருக்காது, இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும், சமயப்பணியாளர்களும், களத்தில் ஒருங்கிணைந்து நிற்கும் காட்சிகள், நம்பிக்கைகளைத் தருகின்றன. பல ஆலயங்களும் சமய நிறுவனங்களும், பல கோடி ரூபாக்களை இந்த இடர்களையும் பணிக்கு உதவியிருப்பது நல்ல முன்மாதிரி.
பசித்திருப்பவனுக்கு உணவு கொடுப்பதைத் தவிர உயர்ந்த தானம் எதுவுமில்லை. அதனைச் செய்வோர் அழைத்தால், ஆண்டவன் என்ன இயற்கையின் சக்தியே இல்லம் தேடி வரும் எனும் வரலாற்றுச் சம்பவம் ஒன்று நிகழ்ந்த நாள் இன்றைய நாள்.
இன்று கார்த்திகை மாத அமாவாசை. முன்னூறு ஆண்டுகளுக்கு முன் கும்பகோணம் அருகேயுள்ள திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் எனும் அடியவர் ஒருவரது இல்லக் கிணற்றில், அவர் வேண்டியதற்காக, கங்கை பெருக்கெடுத்ததாக ஐதீகம். இன்றைக்கும் வருடந்தோறும் கார்த்திகை அமாவாசை தினத்தில் ஸ்ரீதர அய்யாவாள் இல்லக் கிணற்றில் கங்கை நீர் பொங்கி வருவதாகவும், அதில் புனித நீராடினால் கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்பதை மக்கள் நம்பிக்கையுடன் ஏற்று வருடந்தோறும், பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த ஊருக்கு வருகிறார்கள்.
திருஞானசம்பந்தர் தனது தேவாரத்தில் வியலூர் என்று வியந்து பாடிய திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் மீது பக்தி கொண்ட ஶ்ரீதர அய்யா சிவ-விஷ்ணு என வித்தியாசம் ஏதும் பாராட்டாமல் வழிபாடியற்றியவர். பகட்டையும் படாடோபத்தையும் விரும்பாது எளிமையாக வாழ்ந்தவர்.
ஒருமுறை, ஸ்ரீதர அய்யா அவரது தந்தையார் மறைந்த திதி நாளான கார்த்திகை அமாவாசை தினத்தில், பிராமணர்களுக்கு சிரார்த்த சமையல் தயார்செய்ய ஏற்பாடு செய்துவிட்டு, காவிரியில் நீராடச்சென்றார் . நீராடி வீடு திரும்பி வரும்போது, எதிரே வந்த வயதான ஏழை "சுவாமி, ரொம்ப பசிக்கிறது. ஏதாவது கொடுங்களேன்'' எனக் கேட்டார். அவர் மீது இரக்கம் கொண்ட ஸ்ரீதர அய்யாவாள் அவரைத் தன் வீட்டுக்கு அழைத்து வந்து, பசி மயக்கத்தில் இருந்த ஏழைக்கு சிரார்த்த சமையல் உணவைக்கொடுத்துப் பசியாற்றினார். சிராத்தம் செய்ய வந்த சாஸ்திரிகள் திதி கொடுக்கும் முன்பே சிரார்த்த உணவைப் பிறருக்கு அளித்து விட்ட பாவம் நீங்க கங்கையில் நீராடுவதுதான் பிராயச்சித்தமாகும். அதைச் செய்த பின்பே சிரார்த்தம் செய்யலாம் என்றார்கள்.
காசி சென்று வர பல மாதங்கள் ஆகுமே அதுவரை திதி கொடுக்காமல் இருக்க முடியாதே என மனம் வருந்திய, ஶ்ரீதர அய்யா சிவபெருமானை நினைந்துருகி, கங்காதேவியைப் பிரார்த்தனை செய்து "கங்காஷ்டகம்' எனும் ஸ்தோத்திரத்தைப் பாடினார். அவர் ஐந்தாவது பாடலைப் பாடுகையில், வீட்டுக் கிணற்றிலிருந்து கங்கை பிரவாகமாகப் பெருக்கெடுத்து, வீதியிலும் ஓடியது.
இந்த நிகழ்ச்சியை நினைவுகூரும் விதத்தில் ஆண்டுதோறும், கார்த்திகை மாதம் பத்து நாள் விழா நடக்கும். பத்தாம் நாள் கார்த்திகை அமாவாசையன்று காலை கிணற்றுக்குப் பூஜை செய்து பக்தர்கள் நீராடுவார்கள். அன்று முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் நீராடினாலும், கிணற்று நீர் குறையாமலேயே இருப்பது அதிசயம்.
இன்றைய கார்த்திகை அமாவாசை நாளில் பசித்திருப்பவர்களின் பசியாற வகை செய்து, இறையருள் பெறுவோம்.