இலங்கையிலிருந்து தமிழில் வெளிவரும், எனக்குத் தெரிந்து, முதல் புதுமுயற்சி இது.இரு திரைப்படங்களின் கதைகளும், மத இன வேறுபாடுகளாலும், ஜாதிய வன்முறைகளாலும் பிரிந்து கிடக்கும் சமூகத்தை சுட்டிக்காட்டி எழுதப்பட்டுள்ளன.
ஒன்று, மண்ணும், நிலமும் யாருக்கு சொந்தம் எனும் கேள்வி எழுப்பி, அம்மண்ணில் வாழும், வாழ்ந்து முடித்த மாந்தர்களின் ஞாபகத்திற்கே அவை சொந்தம் என பதில் சொல்லி முடிகையில் அக்கதையின், எழுத்தும், ஓவியமும், அதற்கேற்ற குரல் வடிவமைப்பும் மனதை இலகுவாக்கிச் செல்கின்றன. இரண்டாவது குறுந்திரைப்படம் பார்த்து முடிக்கையில், ஜாதிய வன்மங்களை கல்வியால் கூட களைய முடியாத சூழ்நிலை எனும் பரிதாபம் மேலிடுகிறது.
ஒவ்வொரு பத்து நிமிட குறுந்திரைப்படங்களின் வழியிலும், இவ்வளவு பெரிய கதைகளில், எம்மை ஒட்டி பயணிக்க வைக்கிறார் பவனீதா. அவரின் திரைக்கலை நுட்பத்திறனுக்கும் ஒரு பெரிய வாழ்த்து.
காட்சிகளில் காண்பவற்றை குரல் பதிவில் மீண்டும் சில இடங்களில் சொல்லி விளங்கப்படுத்துவது தேவையில்லை எனும் ஒரு விமர்சனத்தை தவிர்த்து வேறு எதுவும் சொல்வதற்கில்லை. இந்த இளவயதில் சமூகத்தின் மீதான தன் தனிப்பட்ட பார்வையை மிக கம்பீரமாக எடுத்து சொல்லும் பவனீதாவின் விழி வழி, சமூகப் பிரிவினைகள், இன, மத, ஜாதி வன்மங்கள் மட்டுமல்லாது, ஆணாதிக்க சிந்தனையின் அழுத்தங்களில் பெண்களின் பாதிப்பும், மிக உறுதியாக பேசப்படுகிறது.
அவரது படைப்புக்களை நிச்சயம் பார்த்தும், பகிர்ந்தும், மற்றவர்களை பார்க்கத் தூண்டியும், பெருமைப்படுத்த வேண்டிய தருணம் இது.
குறுந்திரைப்படங்களை பார்வையிட : இணைப்பு
- 4தமிழ்மீடியாவிற்காக ஸாரா