புதன்கிழமை சீனாவும் ரஷ்யாவும் இணைந்து தமது மிகப்பெரும் அணுமின்சக்தி செயற்திட்டம் தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளன.
சீனாவின் இரு முக்கிய நகரங்களில் ரஷ்யா, சீனாவுடன் இணைந்து 4 அணுசக்தி மின்னுலைகளை அமைக்கவிருப்பது தொடர்பாக இப்பேச்சுவார்த்தையில் முக்கியமாகப் பேசப்படவுள்ளது.
காணொளி வாயிலாக பீஜிங்கில் நடைபெறவுள்ள இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் கலந்து கொள்ளவிருப்பதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சர் ஷாஹோ லிஜியான் செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையானது 2018 ஆமாண்டு இவ்விரு நாடுகளும் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டது ஆகும். முன்னதாக 2018 ஆமாண்டு இவை இணைந்து தியான்வான் அணு உலையின் 7 ஆவது 8 ஆவது யூனிட்டுக்களையும், சுடாப்பு அணு உலையின் 3 ஆவது 4 ஆவது யூனிட்டுக்களையும் அமைப்பது என முடிவெடுத்தன.
இதுவே சீனா மற்றும் ரஷ்யா இதுவரை இணைந்து உருவாக்கிய மிகப் பெரும் அணுசக்தி கூட்டு செயற்திட்டமாகும். மேலும் அணுசக்தியானது கார்பன் வாயுவை வெளியேற்றாத காரணத்தினால் இந்தப் புதிய 4 யூனிட்டுக்களது கட்டுமானம் முற்றுப் பெற்ற பிறகும் பூமியின் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் ஷாஹோ தெரிவித்துள்ளார். ஆனால் அணுக்கழிவானது பாதுகாப்பாக சேமிக்கப் படாது விட்டால் இயற்கை அனர்த்தங்களான பூகம்பம் அல்லது சுனாமி போன்றவற்றால் மிகப் பெரும் சேதம் உயிரினங்களுக்கு ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.