இஸ்ரேல் பாலத்தீனத்துக்கு இடையேயான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், 3 ஆவது தடவையாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுடன் அமெரிக்க அதிபர் பைடென் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார்.
இதன் போது அதிபர் பைடென் சண்டை நிறுத்தத்தை வலியுறுத்திய போதும், இஸ்ரேலின் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு தனது உறுதியான ஆதரவை அளித்திருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஆனால் அமெரிக்க அதிபரின் இந்த யுத்த நிறுத்த அழைப்புக்கு மத்தியிலும் இஸ்ரேல் பாலத்தீன பகுதியில் ராக்கெட்டு தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. மறுபுறம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் இரு தரப்பும் விரைவில் யுத்த நிறுத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை ஐ.நா பாதுகாப்பு சபையில் அண்மையில் இடம்பெற்ற இஸ்ரேல் - பாலத்தீன விவகாரம் தொடர்பான கூட்டத்தில் இந்தியா சார்பாக பிரநிதி திருமூர்த்தி என்பவர், பாலத்தீனத்தின் நியாயமான கோரிக்கைகளுக்கு இந்தியா எப்போதும் வலுவான ஆதரவைத் தரும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதுதவிர இஸ்ரேல் மீது அதன் மோதல் போக்குக்கு எதிராக சர்வதேசத்தின் பொருளாதாரத் தடைகளுக்கு ஆதரவளிக்க வலியுறுத்துமாறு போப் பிரான்சிஸ் இடம் துருக்கி அதிபர் எர்டோகன் கோரிக்கை வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.