இலங்கையின் புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சபையின் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் இந்த பிரேரணைக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக கலாநிதி விக்ரமரத்ன ஏகமனதாக வேறு பெயர்கள் எதுவும் முன்மொழியப்படாத நிலையில் நியமிக்கப்பட்டதாக பிரதி சபாநாயகர் கலாநிதி ரிஸ்வி சாலிஹ் சபைக்கு அறிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல தனது கல்வித் தகுதி தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில் டிசம்பர் 13 ஆம் திகதி பதவியிலிருந்து இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சபாநாயகர் பெயரையும் தாங்கள் முன்மொழியவுள்ளதாக எதிர்க்கட்சிகள் முன்னர் தெரிவித்திருந்த போதிலும் இன்று அவ்வாறான பிரேரணை எதுவும் முன்வைக்கப்படவில்லை.
கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன 2024 பொதுத் தேர்தலின் போது NPP ஐ பிரதிநிதித்துவப்படுத்தி பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். அவர் 51,391 விருப்பு வாக்குகளைப் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
1968 ஆம் ஆண்டு பிறந்த விக்கிரமரத்ன, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் MBBS பட்டமும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டதாரி டிப்ளோமா சுகாதாரத் தரம் மற்றும் நோயாளிகள் பாதுகாப்பு (PGDip HCQ&PS), கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதுகலை விஞ்ஞானம் (MSc) மற்றும் மருத்துவ நிர்வாகம் ஆகியவற்றை முடித்துள்ளார்.
இதுவே அவரது முதல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவமாகும்.