மார்ச் 8 உலகளவில் சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 2026 ஆம் ஆண்டின் மகளிர் தினம் “சமத்துவத்திற்கான செயல்” என்ற கருத்தை மையமாகக் கொண்டு உலகளவில் பல்வேறு நிகழ்வுகளுடன் கொண்டாடப்படுகிறது.
பெண்களின் உரிமைகள், சமத்துவம், மற்றும் சுதந்திரம் குறித்து உலகம் முழுவதும் விவாதங்கள் நடைபெறும் இந்த நாளில், “பெண்களின் சுதந்திரம்” என்ற கருத்து உண்மையில் எவ்வாறு உருவாகியுள்ளது என்பதை விமர்சனமாகப் பார்ப்பது அவசியமாகிறது.
மேற்கத்திய உலகில் பெண்களின் அரசியல் முன்னேற்றம் கடந்த சில தசாப்தங்களில் மட்டுமே வலுவாகத் தொடங்கியது எனப் பொதுவாகச் சொல்லப்படுகிறது. ஆனால் தெற்காசியாவின் சிறிய தீவு நாடான இலங்கை இந்த வரலாற்றை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காட்டுகிறது. 1960 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க உலகின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றபோது, பல ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் அரசியல் அதிகாரத்தின் உச்ச நிலைகளை மட்டுமல்ல சில நாடுகளில் வாக்களிக்கும் உரிமையே கிடைத்திருக்கவில்லை.
இலங்கை அரசியலில் பெண்களின் தலைமை அங்கேயே முடிவடையவில்லை. பின்னர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் பதவி வகித்தார். அதேபோல் சிறிமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா குமாரதுங்க, சிறிமாவோவின் மகளான சந்திரிகா காலத்திலுள்ள பெண் தலைமை, மேலும் சமீப காலங்களில் ஹரிணி அமரசூரிய போன்ற பெண்கள் உயர்ந்த அரசியல் பதவிகளில் இருந்தது, பெண்கள் அரசியல் தலைமைக்கு ஏற்கனவே வந்துவிட்டனர் என்பதை காட்டுகிறது. இவ்வாறு ஒரு சிறிய நாடு பல பெண் தலைவர்களை உருவாக்கியிருப்பது உலக அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
அதேவேளை இலங்கையின் பெண்கள் அரசியலில் மட்டும் அல்லாமல், வேறொரு கடுமையான வரலாற்றிலும் தங்கள் தடத்தை விட்டுள்ளனர். உள்நாட்டுப் போரின் காலத்தில் பல போராட்ட இயக்கங்களில் பெண்கள் நேரடியாகச் சேர்ந்தனர். ஆயுதப் பயிற்சி பெற்றும், போர்க்களத்தில் செயல்பட்டும் இருந்தனர். குறிப்பாக தமிழர் ஆயுத இயக்கங்களில் பெண்கள் போராளிகளாக இருந்தது உலகின் பல ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தியது.
இந்த நிகழ்வு பெண்களின் சுதந்திரம் குறித்து ஒரு சிக்கலான கேள்வியை எழுப்புகிறது. ஆயுதம் ஏந்தி போராடும் திறன் பெண்களுக்கு கிடைத்தது உண்மையில் ஒரு விடுதலையா? அல்லது அது வேறு விதமான அரசியல் சூழ்நிலைகளின் விளைவா?
ஒரு பக்கம், இது பெண்கள் பாரம்பரியமாக வழங்கப்பட்ட “பலவீனமானவர்” என்ற சமூக கற்பனையை உடைத்தது. போராட்ட இயக்கங்களில் பெண்கள் கட்டுப்பாடு, ஒழுக்கம், தலைமைத் திறன், தியாகம் ஆகியவற்றைக் காட்டினர். இதனால் பெண்கள் சமூகவியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் புதிய அடையாளத்தைப் பெற்றனர்.
மற்றொரு பக்கம், இந்த அனுபவம் பெண்களின் வாழ்க்கையை விடுதலை செய்ததா என்ற கேள்வி இன்னும் திறந்த நிலையில் உள்ளது. போருக்குப் பிறகு பல பெண்கள் சமூகத்தில் மீண்டும் தங்கள் இடத்தை உருவாக்கப் போராட வேண்டிய சூழல் உருவானது. ஆயுதப் பயிற்சி பெற்ற போராளியிலிருந்து சமூக வாழ்க்கைக்குத் திரும்புவது எளிதான மாற்றமல்ல. இதனால் இலங்கை பெண்களின் அனுபவம் உலகளாவிய பெண்கள் உரிமை உரையாடல்களுக்கு ஒரு தனித்துவமான பார்வையை வழங்குகிறது.
மேற்கத்திய சமூகங்களில் பெண்களின் சுதந்திரம் பெரும்பாலும் வேலை வாய்ப்பு, சம்பள சமத்துவம், அல்லது அரசியல் பிரதிநிதித்துவம் போன்ற கோணங்களில் விவாதிக்கப்படுகிறது. ஆனால் இலங்கையில் பெண்களின் அனுபவம் அரசியல் தலைமை, போர், சமூக மாற்றம், மற்றும் தேசிய அடையாளம் ஆகியவற்றோடு இணைந்த ஒரு சிக்கலான வரலாற்றைக் கொண்டுள்ளது.
இதிலிருந்து ஒரு முக்கியமான உண்மை வெளிப்படுகிறது: பெண்களின் சுதந்திரம் என்பது ஒரே மாதிரியான உலக அனுபவம் அல்ல. ஒவ்வொரு சமூகத்திலும் அது வேறுபட்ட வரலாறு, அரசியல், மற்றும் கலாச்சார சூழ்நிலைகளில் உருவாகிறது.
அதனால் சர்வதேச மகளிர் தினம் பெண்களின் சாதனைகளை கொண்டாடும் நாளாக மட்டுமல்லாமல், பெண்களின் அனுபவங்கள் எவ்வளவு பல்வேறு மற்றும் சிக்கலானவை என்பதை நினைவூட்டும் நாளாகவும் இருக்க வேண்டும். இலங்கையின் அனுபவம் இந்த உண்மையை மிகவும் தெளிவாகச் சொல்கிறது: பெண்களின் சுதந்திரம் என்பது ஒரு கோஷமல்ல; அது வரலாறு, அரசியல், போராட்டம், மற்றும் மாற்றங்களின் சங்கமமாக உருவாகும் ஒரு நீண்ட பயணம்.
அனைத்துப் பெண்களுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் !
- 4தமிழ்மீடியாவிற்காக : யாத்ரா
