இலங்கைத் தலைநகர் கொழும்பில் நேற்றுக்காலை காலிமுகத்திடலில் அமைதியாக நடந்து வந்த ஆர்பாட்டக்காரர்களினை நோக்கி மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் பெரிதாகி நாடாளாவிய ரீதியில், அரசாங்க உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தலாகவும், அவர்களது சொத்துக்களுக்குச் சேதங்களையும் விளைவித்துள்ளது.
இந்தக் கலவரங்களின்போதும், இதன்போது நடந்த இருவேறு துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்களிலும், இதுவரை 8 பேர் பலியாகியுள்ளதாகத் தெரியவருகிறது. நிட்டம்புவவில் நேற்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமகீர்த்தி அத்துகோரள, இமதுவ பிரதேச சபையின் தவிசாளர் ஏ.வி. சரத் குமார, ஆகியோருடன் பாதுகாப்புப் படையை சேர்ந்த இருவரும், நான்கு பொதுமக்களும் உயிரிழந்துள்ளார்கள்.
இதேவேளை, காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகையில் இடம்பெற்ற மோதல்களில் காயமடைந்த 219 பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுவரை 40க்கும் அதிகமான பெருஞ்சொத்துக்கள் தாக்குதலுக்குள்ளானதுடன் தீக்கிரையாக்கப்பட்டும் உள்ளன என அறிய வருகிறது.
தாக்கப்பட்டுள்ள அரசாங்க உறுப்பினர்களின் வீடுகள், அலுவலகங்கள்,
1-சனத் நிஷாந்தவின் வீடு
2-திஸ்ஸ குட்டி ஆராச்சியின் வீடு
3-குருநாகல் மேயர் மாளிகை
4-ஜோன்ஸ்டன் வீடு மற்றும் அலுவலகம்
5-மொரட்டுவை மேயரின் வீடு
6-அனுஷா பாஸ்குவலின் வீடு
7-பிரசன்ன ரணதுங்கவின் வீடு
8-ரமேஷ் பத்திரனவின் வீடு
9-சாந்த பண்டாரவின் வீடு
10-ராஜபக்ஷ பெற்றோரின் கல்லறை
11- நீர்கொழும்பில் உள்ள அவன் கார்டன் ஹோட்டல்
12-அருந்திகவின் வீடு
13-கனக ஹேரத்தின் வீடு
14-காமினி லொகுகேவின் வீடு
15-காலியில் உள்ள ரமேஷ் பத்திரனவின் வீடு
16-மொரட்டுவை மேயர் சமன் லால் இல்லம்
17-லான்சாவின்-2 வீடுகள்
18-வென்னப்புவ நைனாமடம ட்ரெவின் பெர்னாண்டோ வீடு
19-அலி சப்ரியின் வீடு
20-பந்துல குணவர்தன வீடு
21. வீரகெட்டிய மெதமுலன வீடு
22.கேகாலை மஹிபால ஹேரத் ஹவுஸ்
23-கொட்டிகாவத்தை ரேணுகா பெரேரா இல்லம்
24-கம்பஹா நாலக கொடஹேவா இல்லம்
25- விமல் வீரவன்சவின் வீடு
26-அசோசியேட் சூப்பர் சென்டர் காலி
27- சிறிபால கம்லத் வீடு
28- கெஹலிய ரபுக்வெல்ல வீடு
29-ரோஹித அபேகுணவர்தன இல்லம்
30-நீர்கொழும்பு குரான கிராண்டீசா ஹோட்டல்
31-காஞ்சனா விஜேசேகர இல்லம்
32-துமிந்த திசாநாயக்க வீடு
33-ஞானாக்கா வீடு
இது இவ்வாறிருக்க, நாடாளவிய ரீதியில் பரவிய இந்தக் கலவரங்களின் தொடக்கப்பபுள்ளியாக இருந்தவர்கள், பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகைக்குள் இருந்து வந்தவர்களாலேயே ஆரம்பமானது என்பது ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வன்முறையில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் பதவியிலிருந்து விலகிய மஹிந்தராஜபக்ஷ, இன்று அதிகாலை அலரிமாளிகையில் இருந்து பாதுகாப்பாக வெளியேறினார் எனத்தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அனைத்து மக்களையும் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முப்படைகள் மற்றும் பொலிஸாருக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி, நாட்டில் அமைதியை ஏற்படுத்த உதவி செய்ய வேண்டுமென இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.