இந்தியாவில் குறைந்து வந்த கொரோனாத் தொற்றுக்கள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 42 ஆயிரத்து 766 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தாக்குதலுக்கு 1,206 பேர் உயிரழந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
கொரோனா உயிரிழப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியிருப்பது மக்கள் மத்தியில் பெருங் கலக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் போதிய தடுப்பூசிகள் இன்றி பணிகள் பாதிப்படைந்து உள்ளதாகவும், தமிழ்நாட்டிலும் கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவி வருவதாகவும் உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மையங்களில் நேற்று தடுப்பூசி மருந்து பற்றாக்குறை காரணமாக, தடுப்பூசி முகாம்கள் ரத்து செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று இரண்டாவது நாளாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.