free website hit counter

உலகம் வலிமையானவர்களின் கூடாரமல்ல - டாவோஸ் எச்சரிக்கை !

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உலகப் பொருளாதார மன்றத்தின் 2026ம் ஆண்டுக் கூட்டத் தொடர் முடிந்துவிட்டது. ஆனால் அங்கே எழுந்த கேள்விகளுக்கும், குரல்களுகளுக்குமான பதில்களுக்கும், செயல்களுக்குமான காலம் இனி வரும் காலமே.  

இதுவரை காலமும், உலகின் பல்வேறு நாடுகள் மீதும் அமெரிக்கா செலுத்திய ஆதிக்கத்தினை, தங்கள் பொருளாதார, வர்த்தக, ஆயுத, நலன்களுக்காகக் கண்டு கொள்ளாதிருந்த ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா தங்கள் மடியில் கைவைக்கத் தொடங்கியதும், எதிர்க்குர்ல எழுப்பத் தொடங்கியிருக்கின்றன. இது எவ்வாறாகும் என்பதற்கான எந்த உத்திரவாதமும் இல்லாத போதும், உலக அரசியல் ஒழுங்கில் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் புதிய அரசியலுக்கான கட்டியம் போன்றுள்ளது டாவோஸில் ஐரோப்பிய அரசியலாளர்கள் நிகழ்த்திய உரைகள். அவை குறித்த சிறப்பான ஒரு பார்வையாக அமைகிறது பிரபல வானொலிச் செய்தியாசிரியர்  நடராஜா குருபரன் அவர்கள் எழுதியுள்ள பின்வரும் கட்டுரை. அவருக்கான நன்றிகளுடன் 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக அதனை இங்கு பதிவு செய்கின்றோம்.-4TamilmediaTeam 

“உலகம் வலிமையானவர்களின் கூடாரமல்ல!” – டாவோஸின் அரசியல் எச்சரிக்கையும், உருவாகிவரும் புதிய உலக  அரசியல் ஒழுங்கும் !

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் 2026 உலகப் பொருளாதார மன்றத்தின் மாநாட்டில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பயன்படுத்திய சொல்லாடல்கள், வழக்கமான அரசியல் உரையின் எல்லைகளைக் கடந்து, உலக ஒழுங்கின் அடித்தளத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளன.

“உலகம் வலிமையானவர்களின் கூடாரமல்ல” என்ற அவரது பிரகடனம், ஒரு தத்துவார்த்த மொழியாக  அல்லாமல்  ஒரு புவியியல் அரசியல் சார் எச்சரிக்கையாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. அந்த உரையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய வர்த்தக வரிகள், கிறீன்லாந்து குறித்த அச்சுறுத்தல்கள், சர்வதேச சட்டங்களை அலட்சியம் செய்யும் அணுகுமுறை உள்ளிட்ட முக்கிய விடயங்களை அவர் மறைமுகமாக  சாடியுள்ளார்.

“வலியவன் வகுத்ததே சட்டம்” என்ற நிலை உலக ஒழுங்காக மாறுவதை ஐரோப்பா அனுமதிக்காது என்ற  அவரது  தெளிவான அறிவிப்பு உலக அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்த அறிவிப்பு  ஒரு நியாயப்பாடமல்ல; இது புதிய காலனித்துவத்தின் (New Imperialism) மீதான அரசியல் எதிர்ப்பு மட்டமல்லாமல் ஐரோப்பாவின் ‘டிரேட் பசூக்கா’ (Trade bazooka)  பொருளாதாரம் ஒரு ஆயுதமாகும் தருணங்களை ஏற்படுத்தி உள்ளது.

மக்ரோனின் உரையின் மிக முக்கியமான பகுதி, ஐரோப்பிய ஒன்றியம் தனது இறையாண்மையைப் பாதுகாக்க “Trade Bazooka” எனும் பொருளாதார எதிர்ப்பு ஆயுதத்தைப் பயன்படுத்த தயங்காது என்ற எச்சரிக்கை அத்துடன்  இனி வர்த்தகம் ஒரு பரஸ்பர நன்மையை  ஏற்படுத்தும்  கருவி மட்டும் அல்ல, அதற்னையும் தண்டிய  அது ஒரு அரசியல் பாதுகாப்பு ஆயுதம் என்பதனை தெளிவுபடுத்தி உள்ளது.

அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக புதிய வர்த்தக வரிகளை அறிவித்த தருணத்தில், ஐரோப்பா அதை ஒரு சாதாரண பொருளாதார மோதலாகப் பார்க்கவில்லை. குறிப்பாக, டென்மார்க்கின் ஆளுமைக்குள் உள்ள கிறீன்லாந்து குறித்து அமெரிக்கா உரிமை கோரியபோது, “இது வர்த்தகமல்ல; இது அதிகார அரசியல்” என்ற உணர்வு ஐரோப்பிய தலைநகரங்களை உலுக்கியிருந்தது.

மக்ரோனின் இந்த உரையின் விளைவு, சர்வதேச அரசியலுக்கு அப்பால், பிரான்சின் உள்நாட்டு அரசியலிலும் ஒரு அபூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தியது. வழக்கமாக மக்ரோனை கடுமையாக விமர்சிக்கும் வலதுசாரி, இடதுசாரி கட்சிகள் கூட இம்முறை ஒரே குரலில் அவரைப் பாராட்டியுள்ளன. “பிரான்சின் கௌரவத்தையும், ஐரோப்பாவின் தனித்துவத்தையும் அமெரிக்காவிடம் அடகு வைக்காமல் பேசிய ஒரு ஜனாதிபதி” என்ற பாராட்டு, அரசியல் எல்லைகளைத் தகர்த்து  ஒலித்துக்கொண்டிருக்கிது. இது மக்ரோனின் தனிப்பட்ட வெற்றி அல்ல;
ஐரோப்பிய அரசியல் மனநிலையின் மாற்றத்தின் வெளிப்பாடு.

இதேவேளை டொனால்ட் டிரம்பின் “America First” என்ற அரசியல் கொட்பாடு, பாரம்பரிய கூட்டணிகளை மெதுவாக சிதைத்துக் கொண்டிருக்கிறது. வெனிசுலா மீது பொருளாதார தடைகள், கனடாவுடன் வர்த்தக முரண்பாடுகள், நேட்டோவின் எதிர்காலம் குறித்த ஐயங்கள், கிறீன்லாந்து போன்ற அதிர்ச்சி அறிவிப்புகள் – இவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்து  தோற்றுவிக்கும் அரசியல் நெருடலால்,     அமெரிக்க மைய அரசியல் கண்காணிப்பிலிருந்து  ஐரோப்பா  விலகத் தொடங்கியுள்ளது. இந்த மாற்றத்தின் மையத்தில் உள்ளது – நாணயமும் கடனும்.

குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவில் வைத்துள்ள அரசு பத்திரங்கள் மற்றும் முதலீடுகளின் பெறுமதி  சுமார் 10 டிரில்லியன் டொலர். இந்த சொத்துகளை படிப்படியாக விற்கலாம் என்ற தகவல், உலக நிதிச் சந்தைகளில் பெரும் கலக்கத்தை  ஏற்படுத்தியது. Bloomberg உள்ளிட்ட நிறுவனங்கள் இதனை “Silent Economic War” என வர்ணித்தன. ஏனெனில், ஐரோப்பா அமெரிக்காவின் முக்கிய கடன் வழங்குநர். அந்த உறவு முறிந்தால், அது துப்பாக்கிகளின்  சத்தமில்லாத, போர் முழக்கங்கள் இன்றிய பெரும்  தாக்குதலாக அமைந்துவிடும்.

இந்த நிலையில் ஐரோப்பாவும்,  சீனாவும் ஒரே நேரத்தில் அமெரிக்க பத்திரங்களிலிருந்து விலகத் தொடங்கினால், டொலரின் மதிப்பு வரலாற்றில் இல்லாத அழுத்தத்தை சந்திக்கலாம். ஏற்கனவே வோல் ஸ்ட்ரீட், S&P 500 போன்ற குறியீடுகள் கடும் சரிவுகளை சந்தித்து வரும் நிலையில், அமெரிக்கா தனது கடன்களுக்கு அதிக வட்டி வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறது. அதே நேரத்தில், தங்கத்தின் விலை புதிய உச்சங்களை எட்டுவது,
“டொலர் பாதுகாப்பானதா?” என்ற கேள்வியை முதலீட்டாளர்கள் எழுப்பத் தொடங்கியதை காட்டுகிறது.

இதேவேளை சீனாவின் அண்மைய நகர்வுகளை  பொருளாதாரம் அல்லாத  அரசியல் பாச்சலாகவே நோக்க முடிகிறது.
கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, சீனா அமெரிக்க கடன் பத்திரங்களை விற்று வருகிறது. $682.6 பில்லியன் – இது 2008க்குப் பிந்தைய குறைந்த நிலை. எனினும் 2025 தொடக்கத்தில்  மட்டும், 10%க்கும் மேலான குறைப்பை,   ஒரு நிதி முடிவாக அன்றி  ஒரு புவியியல் சார்  அரசியல் சைகையாகவே கருதமுடிகிறது. அதாவது  $38 டிரில்லியனைத் தாண்டிய அமெரிக்க கடன், டொலரை அரசியல் ஆயுதமாக்கும் போக்கு முடிவில்லா வர்த்தகப் போர்கள் என்பன டொலருக்கு மாற்றாக தங்கத்தை நோக்கி சீனா நகர்வதன் பின்னணியை தெளிவுபடுத்துகிறது.

இதனால் புதிய உலக ஒழுங்கு  புரட்சியாக வெடிக்காமல் மெதுவான நகர்வாக தொடர்கிறது. ஜப்பான், பிரிட்டன் போன்ற நாடுகள் இன்னும் அமெரிக்க பத்திரங்களில் முதலீடு தொடர்ந்தாலும், ஐரோப்பா + சீனா = பன்முகப்படுத்தல் (Diversification) என்ற சமன்பாடு, உலக பொருளாதாரத்தின் மையம் மெதுவாக நகர்வதை காட்டுகிறது. இது ஒரு திடீர் வீழ்ச்சி அல்ல. இது நீண்ட காலத்தின்  அமைதியான மாற்றம்.

டிரம்ப் கால அரசியல், அமெரிக்காவின் Hard Power-ஐ வலுப்படுத்திய போதிலும், அதன் Soft Power-ஐ சிதைத்துள்ளது. இனி வர்த்தகம் – நாணயம் –கடன்  என்பவை பொருளாதார கருவிகள் மட்டும் அல்ல. அவை அரசியல் ஆயுதங்கள். இந்த ஆயுதங்களை யார், எப்போது, எவ்வளவு தூரம் பயன்படுத்தப் போகிறார்கள் என்பதே, வரவிருக்கும் உலக ஒழுங்கின் வடிவத்தை தீர்மானிக்கும். விசேடமாக சொன்னால் -  நிதிச் சந்தைகளின் அலைவரிசைகளில், மௌனமான விற்பனைகளில், சத்தமில்லா அரசியல் முடிவுகளில் டொலரின் ஆதிக்கம் சிதறுகிறதா? அல்லது, புதிய சமநிலைக்குள் உலகம் நகருகிறதா? என்ற  கேள்விக்கான பதில்எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

      கட்டுரையாளர் : நன்றி - நடராஜா குருபரன்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula