இந்த வருடத்தின் தொடக்கத்தில் எழுத நினைத்திருந்த எண்ணங்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டது, சுவிற்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானா பகுதியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது நடந்த பெரும் தீவிபத்து.
சரியாகப் பத்து வருடங்களின் முன்னதாக 2016ல் , கிரான்ஸ் மொன்டானா மலையேறறத்திற்குச் சென்றிருந்த போதே, அந்தச் சூழலின் அழகு, மீண்டும் ஒரு தடவை எனும் எண்ணத்தை ஏற்படுத்தியருந்தது. இதுவரை அந்தச் சந்தர்ப்பம் அமையவில்லை. இனிவருங்காலங்களில் அமைந்தால், 2026 ன் முதல் நாளில் நடந்த அந்தப் பெருந்துயரின் நினைவுகள் வந்து அலைக்கழிக்குமே எனக் கலங்குகின்றது மனது.
புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது 40 பேர் வரையில் பலியாகி,சுமார் 115 பேர்வரையில் காயங்களுக்கு உள்ளாக்கிய அந்தப் பெருந்துயரம் முடிந்து நாட்கள் சில நகர்ந்துவிட்டன. இறந்தவர்களில் அடையாளங்காணப்படாமலிருந்தவர்கள் அனைவரும் அடையாளங் காணப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணமற்போனவர்களைத் தேடி அலைந்த உறவுகளுக்கு, இது பெரும் ஆறுதல் தரும் விடயம். காணமல் போன உறவினைத் தேடி அலையும் மனவலி மிகக் கொடுமையானது.

சுவிற்சர்லாந்தில் பெருந்துயரம்
உயிரிழந்தவர்களில் பத்துப்பேர் வரையில் 14 - 16 வயதுச் சிறுவர்கள் என்பதும், அவர்களில் பலரும் கிரான்ஸ் மொன்டான பகுதியின் இயற்கைச் சூழலில் இருந்து புத்தாண்டினைக் கொண்டாடி மகிழச் சென்ற சுற்றுலாப் பயணிகள் என்பது மிகு சோகம்.
தீ விபத்து நிகழ்ந்த உணவக உரிமையாளகள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கிரான்ஸ் மொன்தானாவின் நகரசபை முழுமையும், விசாரணைகளுக்காகத் தம்மை ஒப்படைத்துள்ளார்கள். இவை இன்னுமொரு தவறு எதிர்காலத்தில் நடந்துவிடக் கூடாது என்பதற்கான முன் நடவடிக்கைளே. முன்னெச்சரிக்கை நடவக்கைகளில் மிகக் கூடுதலான கவனம் செலுத்தும் சுவிஸ் நாட்டில் நிகழ்ந்த இந்தப் பெரும் அனர்த்தம், உள்நாட்டிலும், அயலகங்களிலும் ஏற்படுத்திருக்கும் அதிர்ச்சி அலைகள் அமைதியுற வெகு காலம் செல்லும்.
பாதிக்கப்பட்ட கும்பங்களுக்கு உதவியாகவும், அனுசரணையாகவும், அனுதாபத்துடனும், எல்லைகள் கடந்து இணையும், உதவும் மக்களின் மனித மாண்பே, எரியும் தீக்காயத்திற்கு இடப்படும் களிம்பு போல இதமாயிருக்கிறது. இந்தப் பெருவலி, இளையவர்கள் , பெரியவர்கள் எனப் பலரிடமும் வலுவான கவனம் பெற்றிருக்கிறது. அது எதிர்காலத்தின் அவதானமான செயற்பாடுகளாக உருப்பெறுவதே உயிரிழந்தவர்களுக்கான உயரிய அஞ்சலியாகும்.

இந்த வருடத்தின் முதல் ஐந்து நாட்களை துக்கதினங்களாக அறிவித்திருந்த சுவிஸ் அரசு, வரும் 9ந் திகதி வெள்ளிக்கிழமையை தேசிய துக்கதினமாக அறிவிதுள்ளதுடன், அன்று பிற்பகல் 2.00 மணிக்கு, அணைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பிற இடங்களிலும், பகல் 2.00 மணிக்கு, உயிரிழந்தவர்களுக்கான ஆத்மசாந்திக்கும், திப்புற்வர்களுக்கான உள, உடல் நலங்கள் வேண்டியும், பிரார்த்தனை செய்யவும் கோரியுள்ளது. பிரார்த்திப்போம்..!
- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்
