free website hit counter

கிறிஸ்மஸ் தாத்தா தோன்றிய சுவாரசிய வரலாறு.!

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கிறிஸ்மஸ் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது கிறிஸ்மஸ் தாத்தா எனப்படும் சாண்டா கிளாஸ் தான்.

அடர்ந்து வளர்ந்த வெள்ளை தாடி, வெள்ளை பார்டர் வைத்த சிகப்பு நிற வெல்வெட் அங்கி அணிந்த சிரித்த முகம், இவற்றோடு முதுமையைப் பிரதிபலிக்கும் வசீகரமான வரும் கிறிஸ்துமஸ் தாத்தாவை பற்றிய சுவாரசியமான தகவல்களை பார்க்கலாம்.!

ரோம் சாம்ராஜ்யத்தின் பதாரியா பகுதியில் லைசியா துறைமுகத்தில் பிறந்தவர் நிகோலாஸ். இளம் வயதில் பாலஸ்தீனத்துக்கும் எகிப்துக்கும் பயணம் மேற்கொண்டார். மீண்டும் லைசியா திரும்பிய நிகோலாஸ், கிறிஸ்தவ பிஷப் பதவியை ஏற்றார்.

ரோம் நகர பேரரசன் டயோக்ளீஸ் காலத்தில் கிறிஸ்தவர்கள் வேட்டையாடப்பட்டபோது, பிஷப் நிக்கோலாஸும் சிறையில் தள்ளப்பட்டார். ஆனால், கால மாற்றத்தால் பேரரசர் கான்ஸ்டான்டின் காலத்தில் விடுதலை செய்யப்பட்டார். அவர் இறந்த பின்னர் அவரது சடலம் மைரா என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

மக்களிடம் அவர் காட்டிய கருணை, அன்பின் காரணமாகவும் அவரது தயாள குணம் காரணமாகவும் அவரது கல்லறைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர். ஆறாம் நூற்றாண்டுக்குள் மக்களிடம் அவரது கல்லறை மிகவும் பிரபலமாகிவிட்டது.

மைரா பகுதிக்கு வந்த இத்தாலிய மாலுமிகள், நிகோலாஸின் கல்லறையிலிருந்து அவரது நினைவுப் பொருட்களை இத்தாலியின் பாரி நகருக்கு எடுத்து சென்றுவிட்டனர். அதனால், ஜரோப்பா முழுவதிலும் அவரது புகழ் பரவியது.
டச்சு யாத்திரிகள் மூலமாக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கும் அவரது புகழ் பரவியது. செயின்ட் நிகோலாஸ் என்பது டச்சு மொழியில் சின்டர்க்ளாஸ் என்று மருவியது.

பின்னர் ஆங்கிலம் பேசும் மக்கள் அவரை சான்டா கிளாஸ் என அன்புடன் அழைத்தனர். 1822ல் கிளமென்ட் மூர் என்பவர் கிறிஸ்துமஸுக்கு முந்தைய இரவு என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதினார். அதில் கிறிஸ்துமஸ் தாத்தாவைப் பற்றி வர்ணித்திருந்தார். அது பத்திரிகைகளில் வெளியாக மிகவும் பிரபலமடைந்தது.

மூர் எழுதிய ஜிங்கிள் பெல் ஜிங்கிள் பெல் என ஆரம்பிக்கும் தன் கவிதையில் நிக்கொலஸ் -ஐ கதாநாயகனாக வடிவமைத்தமையே நிக்கொலஸின் புகழ் அமெரிக்கா எங்கும் பரவ மூல காரணமாயிற்று. சாண்டா கிளாஸின் உருவம் ஒரு வேலையாளை மாதிரியாகக் கொண்டு வரையப்பட்டதாம்.

அந்த வேலையாளின் அழகிய சிவந்த கன்னங்கள், பழுப்பு நிறத் தாடி, சிறிய வாய், பெருத்த தொப்பை, சிவப்பு நிற அழகிய மேலாடை( இந்த சிகப்பு நிறம் பிற்சேர்க்கையானது என்னும் கருத்துக்களும், கோக்ககோலா வின் வணிக யுக்தி எனும் விமர்சனங்களும் உண்டு ) பனிக்கால தொப்பி, தோளிலே ஒரு மூட்டை - இவையெல்லாம் ஒன்று திரண்ட உருவம் தான் நாம் பார்த்து மகிழும் சாண்டா கிளாஸ்.

புனிதர் நிகோலாஸ் காலத்தில் பிஷப்புகள் அணிந்திருந்த அங்கியே கிறிஸ்துமஸ் தாத்தாவின் உடையாகிவிட்டது.
அப்போது முதல் உலகம் முழுவதும் அன்பின் திருவுருவமாக கிறிஸ்துமஸ் தாத்தா உலா வருகிறார்.

4தமிழ்மீடியாவிற்காக: மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula