சென்னை மயிலாப்பூர் மாட வீதியில் அமைந்துள்ள பயணியர் விடுதி ஒன்றில் தங்கியிருந்த போதுதான் அந்த அதிகாலை பஜனை எம் காதுகளை எட்டியது. விடுதி ஊழியர்களிடம் விசாரித்த போது,
மயிலையின் மார்கழிமாத வீதிப்பஜனை அது என்ற விபரம் அறிந்தோம். மறுநாள் காலையில் அந்தப் பஜனையை நேரில் காண்பதற்காக விடுதி வாசலில் காத்திருந்தோம்.
மயிலைக் கபாலீஸ்வரர் கோவில் முன்றலில் தொடங்கி, மாடவீதிகளின் வழியாக பஜனைப்பாடல்களைப்பாடிய வண்ணம் வலம் வரும் பஜனை சம்பிரதாயம். பல ஆண்டுகளாக மார்கழி மாதம் முழுவதும் நடைபெறும் திருப்பள்ளி எழுச்சிப் பஜனையில், சம்பிரதாய பஜனைப் பாடல்களைப் பலரும் பாடியபடி வலம் வருவார்கள். ஆங்காங்கே சில இடங்களில் தரித்து நின்று உருப்படிகளைப் பாடுகின்றார்கள்.
எந்தவிதமான எதிர்பார்ப்புக்களோ ஆர்ப்பாட்டங்களோ இன்றி, ஒரு தர்மகாரியமாக, அறத்தின்வழி நின்று இயங்கிவரும் இந்தப் பஜனார்த்திகள் பஜனைப்பாடுவதன் வழி இறையருள் கூட்டுகின்றார்கள். அந்தக் கூடுதலில்ல ஆனந்தம் காண்கின்றார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரும்பாலும், மூத்தவர்கள் பெரியவர்கள் அதிகமாயிருந்த இந்த பஜனை சம்பிரதாயத்தில், அன்மைக்காலமாக உல இளையவர்களும், புதியவர்களும் இணைந்திருப்பதைக் காணமுடிகிறது. இதற்குக் காரணம் சமூக ஊடகங்களின் வழி இந்த பஜனை சம்பிரதாயம் பகிரப்பட்டு வருவது, இளையவர்களின் வருகையை அதிகரித்திருக்கிறது என்றும் சொல்லாம்.
இதில் மற்றுமொரு சிறப்பான மாற்றமாக, இளையவர்கள், புதியவர்கள், என்பதன் தொடர்ச்சியாக பெண்கள் அதிகளவில் ஆற்றுகை செய்யத் தொடங்கியிருப்பதையும் காண முடிகிறது. இது ஒரு வீதிப்பஜனை என்பதனால் புறச்சூழல்கள், இரைச்சல்கள் , என்பவற்றுக்கு மத்தியில், ஆண்களே அதிகம் பஜனைப்பாடல்களை பாடுகின்றவர்களாக, வாத்தியக்கருவிகளை இசைப்பவர்களாக இருந்த நிலையில், இன்று பெண்கள் அதிகம் கலந்து கொள்ளுவதாக மாற்றம் கண்டுள்ளது.
கலைஞர் சிவஶ்ரீ ஸ்கந்தப் பிரசாத் சிலவருடங்களின் முன் இந்த மாடவீதி பஜனையில் பாடிய கானொளி, சமூகவலைத்தளங்களில் பிரபல்யமானதிலிருந்து, இளையவர்கள் மற்றும் பெண்கள் மத்தியில், பெரும் ஆர்வத்தினையும், மனமாற்றத்தினையும், இந்தப் பஜனை சம்பிரதாயம், ஏற்படுத்தியிக்கவேண்டும். இப்போது நாள் தோறும் புதியவர்களும், இளையவர்களும் இணைந்து கொள்கின்றார்கள்.
அதிகாலையில், வீதிகள் தோறும் நடைபெறும் மார்கழிமாத பஜனை சம்பிரதாயங்கள், ஆன்மாக்களுக்கு ஆனந்தத்தினையும், புத்துணர்ச்சியையும் தரும் ஒரு தொல் வழக்காகும். இளையவர்களும், புதியவர்களும், இத்தகைய தொன்மைச் சம்பிரதாயம் ஒன்றில் ஆர்வம் கொண்டிணைவது, அவர்களுக்கான அறிமுகம் மட்டுமன்றி, இச்சம்பிரதாயத்துக்குமான ஒரு பரப்புரை என்பதை தெளிவுற உணர்ந்துகொண்ட பெரியவர்கள், அவர்களை முன்னிறுத்தித் தொடர்வதில் ஆர்வமாக உள்ளார்கள். இது மயிலாப்பூர் மார்கழிப் பஜனைக்கு மட்டுமன்றி, விட்டுக்கொடுத்தல், இணைந்தாற்றல், என்பனவற்றைக் கற்றுக்கொள்ளவும், பெற்றுக்கொள்ளவும் உகந்ததான ஒரு கூட்டுவழிபாட்டின் நீட்சியும், பயனுமாகும். !
- 4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்
