free website hit counter

மானுடம் வெல்க .. !

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பகை நடுவினில் அன்புரு வான நம் பரமன் வாழ்கின்றான் - நன்னெஞ்சே பகைவனுக் கருள்வாய்  என்று பாடினான் தமிழ் மகாகவி பாரதி. இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம். பாரதியின் மான்பினை மனதினிற் கொள்வோம்.

ஒவ்வொரு தனி மனிதனும் தான் வாழ்வதற்கான உரிமையை பெறுவதும், மற்ற மனிதர்களை வாழ விடும் நெறிமுறையை உணர்த்துவதே மனித உரிமைப்பிரகடனத்தின் முக்கியக் கருத்தாகும். எல்லா மனிதர்களும் சுதந்திரமானவர்களாகவும், உரிமையிலும், கண்ணியத்திலும் ஒருவருக்கொருவர் சமமானவர்கள் என்பதை இப்பிரகடனம் வலியுறுத்துகிறது. 

இனம், நிறம், பாலினம், மொழி, மதம், அரசியல், நாடு, சமுதாய தோன்றல், சொத்து, பிறப்பு அல்லது சமூக உயர்வு போன்ற எந்த வித வேறுபாடுகளும் இன்றி ஒவ்வொரு மனிதனும் வாழ்வதன் அவசியத்தையும் உணர்த்தவே இந்நாள் கொண்டாடப்படுகிறது. 

சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 76 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 1948 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்திற்கு அமைய ஆண்டு தோறும் டிசம்பர் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஆனால் மனிதம் பேணப்படுகிறதா?

மனிதம் என்றால் என்ன ?

பிரபல மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர் தனது வாழ்க்கையில்  நடந்த ஒரு சம்பவம் பற்றி எழுதிய குறிப்பில் மனித உரிமை மதித்த ஒரு திருடனின் மான்பினைக் குறிப்பிட்டுள்ளார்.   நல்லவர்களெனச் சொல்லிக் கொள்ளும் பலரிடம் இல்லாத மனித உரிமைப் போற்றுதலை ஒரு திருடனிடம் கண்டு வியந்துள்ளார் வைக்கம் முகம்மது பஷீர்.

ஒருமுறை ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப் போயிருக்கிறார் பஷீர். சாப்பிட்டு முடித்து கை கழுவி விட்டு வந்து பில்லை கொடுக்க பர்ஸை தேடினால்... காணோம். பதறிப் போய் அங்கும் இங்கும் தேடுகிறார் பஷீர்.
"என்ன, பர்ஸை காணலியா?" கல்லாவில் இருந்த முதலாளி கர்ஜித்திருக்கிறார்.
பஷீர் பலஹீனமான குரலில், "ஆம். வரும்போது எடுத்துக் கொண்டுதான் வந்தேன்."

முதலாளி நக்கல் சிரிப்புடன், "எல்லோரும் இதையேதான் சொல்றாங்க. ம்ம்ம்.. நீ போட்டிருக்கற டிரஸ்ஸை கழட்டி கல்லா மேல வச்சுட்டு அம்மணமா போ. அப்போதான் புத்தி வரும்."
கூனிக் குறுகிப் போகிறார் பஷீர். வேறு வழியின்றி ஜிப்பாவை கழட்டி கல்லா மேஜையில் வைத்து விட்டு தலை குனிந்து நிற்க,
முதலாளி குரல் : "ம்...வேஷ்டியையும் கழட்டு."
நாணத்தால் நடுங்கிப் போகிறார் பஷீர். சுற்றிலும் பார்க்கிறார். எழுபது எண்பது பேர் அந்த ஹோட்டலில் அமர்ந்திருக்கிறார்கள்.
ஒருவரும் உதவத் தயாராக இல்லை. எல்லோர் கண்களும் ஒரு சக மனிதனின் ஆடையில்லா தோற்றத்தை காண ஆவலோடு காத்திருந்தன.
வேறு வழியின்றி பஷீர் தனது வேஷ்டியை அவிழ்க்க கை வைத்தபோது, ஹோட்டலுக்கு வெளியிலிருந்து ஒரு குரல் : "நிறுத்துய்யா."
பார்க்கிறார் பஷீர். 
ஒரு மனிதன் அழுக்கு லுங்கி பனியனுடன் நிற்கிறான். "வேஷ்டியை அவுக்காதே பெரியவரே, முதல்ல ஜிப்பாவை எடுத்து போடு. யோவ் முதலாளி, அவர் உனக்கு எவ்வளவு தரணும். எடுத்துக்கோ."
கல்லாவில் காசை விட்டெறிந்து விட்டு, பஷீரை வெளியே அழைத்து வருகிறான் அந்த மனிதன்.
நிம்மதி மூச்சோடு நிமிர்ந்து பார்த்த பஷீரிடம்,  "ஏன் பெரியவரே,பர்ஸை ஜாக்கிரதையா வச்சுக்க கூடாதா ? இந்தா , இதில் உன் பர்ஸ் இருக்கா பாரு." அவன் லுங்கி உள்ளே இருந்து பத்துக்கும் மேற்பட்ட பர்ஸ்களை எடுத்துப் போடுகிறான். அதில் அவரது பர்சும் இருக்கிறது.
பஷீர் அவன் முகத்தை பார்க்கிறார்.

"என்ன பெரியவரே அப்படி பாக்கிறே ? நான் திருடன்தான். ஆனால் மனிதாபிமானம் இல்லாதவன் அல்ல."

இந்த சம்பவத்தை வைத்து பஷீர் ஒரு கதையே எழுதி இருக்கிறாராம். அதில் "அவ்வளவு நேரம் அவனோடு நான் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால் அவன் பெயரை கேட்க மறந்து விட்டேன். அதனால் என்ன ? ஒன்று அறம் அல்லது கருணை. இந்த இரண்டில் ஒன்றுதான் அவன் பெயராக இருக்க முடியும்." எனக் குறிப்பிடுகின்றார். 

உலகெங்கும் போர்ச் சூழலும், போட்டி மிகு தொழில்நுட்ப விஞ்ஞான வர்த்தக வளர்ச்சியும் மெல்ல மெல்ல மனிதத்தை மௌனிக்கச் செய்து வரும் காலமிதில், அந்தக் கருணையும் அறமும் நிறைந்த மனிதம் வெல்வதே மான்புறு வாழ்வு தரும்.

 

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula