free website hit counter

தமிழகத்தில் தொடரும் தளர்வுகளுடன் தொடரும் ஊரடங்கு - 19 ந் திகதிவரை நீட்டிப்பு !

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ்நாட்டில் 9வது முறையாக மேலும் ஒரு வார காலத்திற்கு பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. எதிர்வரும் 19ந் திகதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கும் இந்த உத்தரவு தொடர்பாக நேற்று அறிவிப்பு ஒன்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ளார்.

முதல்வரின் அறிவிப்பில்; 31-7-2021 வரை கொரோனா நோய்த்தொற்று பரவலை குறைக்க தேவையான கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமல்படுத்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில், 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, கொரோனா நோய்த்தொற்று நிலையை கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் 19-7-2021 காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.

நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இறுதிச்சடங்குகளில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். மேலும், ஏற்கனவே இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள் நாளை முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

இவை தவிர, மேலும், கூடுதல் செயற்பாடுகளாக, புதுச்சேரிக்கான பஸ் சேவை தொடங்கப்படுவதும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத்தேர்வுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த அனுமதியும் அளிக்கப்படுகிறது. இதுகுறித்த விவரங்களை தேர்வு நடத்தும் அமைப்புகள் முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டும்.

உணவகங்கள், டீக்கடைகள், அடுமனைகள் (பேக்கரி), நடைபாதை கடைகள், இனிப்பு, காரவகை பண்டங்கள் விற்பனை கடைகள் ஆகியவை வழக்கமான நிபந்தனைகளுக்குட்பட்டு 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில், கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்பநிலை பரிசோதனை கருவிகொண்டு பரிசோதனை செய்ய வேண்டும். கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முக கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

குளிர்சாதன வசதி பயன்படுத்தப்படும் இடங்களில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறக்கப்பட்டு போதுமான காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.

கடைகளின் நுழைவுவாயிலில் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும்போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகிய கோட்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.

கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்கு, நோய்த்தொற்று பாதிப்பிற்கு உள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.

வரையறுக்கப்பட்ட நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.

கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த, பொதுமக்கள் அவசியமின்றி வீட்டில் இருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளை நாடி மருத்துவ ஆலோசனை/ சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன்.

கொரோனா நோய் தொற்று மேலாண்மைக்கான விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவது கண்காணிக்கப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் நடவடிக்கைகள் தொடரும்.

மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு அளித்த ஒத்துழைப்பின் காரணமாகவே நோய்த்தொற்று குறைந்து வந்துள்ளது என்பதை மனதில் கொண்டு தொடர்ந்து அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula