தமிழகத்தில் வெற்றி பெற்று, நேற்றைய தினம் தமிழக முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள் நிறைவு பெற்றதும், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வணக்கங்களைத் தெரிவித்துக்கொண்டார்.
தன் இடம் தேடிவந்த முதல்வரை வாசல் வரை வந்து, கட்டியணைத்து வரவேற்று, கை பிடித்து தன் அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றார் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவருடன் உடனிருந்த முன்னாள் துணை முதல்வரும், இன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான , உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வீட்டின் வாசல் வரை வந்து வரவேற்று அழைத்துச் சென்றார்.

பரஸ்பரம் இரு தலைவர்களும், தமது மரியாதைகளைத் தெரிவித்துக் கொண்டதன் பின், சுமார் பத்து நிமிடங்கள் வரையில் சுமுகமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின், தமிழக முதல்வர் விஜய் விடைபெறும் போது, மீண்டும் வாசல்வரை வந்து, மு.க.ஸ்டாலின் அவர்களும், உதயநிதி ஸ்டாலினும் அவரை வழியனுப்பி வைத்தார்கள்.
அங்கிருந்து புறப்பட்ட முதல்வர் விஜய், முதுபெரும் அரசியல்வாதியான மதிமுக தலைவர் வை. கோபால்சாமி அவர்களையும், அவரது இல்லத்தில் சந்திந்து வாழ்த்துப்பெற்றார். அங்கும் அவர்களிடம் சந்திப்பு நிறைவு பெற்றபின் வீட்டு வாசல் தாண்டி, வீதிவரைக்கும் வந்து, முதல்வரை வழியனுப்பி வைத்தார்கள், வைகோ அவர்களும், அவரது மகன் துரை.வை.கோ. அவர்களும்.

தொடர்ந்து பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களையும் அவரது இல்லத்தில் சந்தித்தார். அங்கே அன்புமணி ராமதாஸ் அவர்களும், அவரது மனைவி புதிய சட்டமன்ற உறுப்பினர் சௌம்யா அன்புமணி அவர்களும், வாசல் வரை வந்து வரவேற்று உபசரித்தார்கள். தேநீர் விருந்துபசாரத்துடன் நடைபெற்ற அந்தச் சந்திப்பு நிறைவு பெற்றது.

அங்கிருந்து புறப்பட்டு, நாம்தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களையும் சந்தித்தார். தேர்தலுக்கு முன் தவெகவின் மீதும், விஜய் அவர்கள் மீதும் கடுமையாக விமர்ச்சித்த சீமான் அவர்களையும் இன் முகத்துடன் சந்தித்துக் கொண்டார். பரஸ்பர மரியாதைகள் முடிந்த பின் சற்று நேரம் இருவரும் தனித்து உரையாடிய பின் விடைபெற்றுக் கொண்டதாகவும் தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து நாளையும் இவ்வாறான பல சந்திப்புக்கள் தொடரவிருப்பதாகவும் அறியவருகிறது.
முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட மறுநாளே இவ்வாறான நல்லெண்ணச் சந்திப்புக்களை மேற்கொண்டு வரும், தவெக தலைவரை பலரும் பாராட்டி வரும் அதேவேளை, அவருடனான சந்திப்புக்களுக்கு நேரம் ஒதுக்கி, உற்சாகமாக வரவேற்ற, அனைத்துத் தலைவர்களையும் கூட அனைவரும் பாராட்டி வருகின்றனர். இது தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்தையும், அரசியல் நாகரீகத்தையும், தோற்றுவிக்கும் எனவும், இதனைப் பார்க்கும் இளையவர்கள் மத்தியிலும் ஆரோக்கியமான எண்ணங்கள் உருவாகும் எனவும், இது சமூகத்திற்கான ஒரு நல்ல முன்னுதாரணம் எனவும் சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்தத் தெரிவித்து வருகின்றார்கள்.
