எங்கு போனாலும் ஆதார் அட்டையை தூக்கி கொண்டு போனவர்கள் இனிமேல் கையை வீசிக்கொண்டு செல்லலாம்.ஆதார் அட்டையை கையில் வைத்து கொண்டு அலைவதற்கு மாற்று வழியாக செயலி ஒன்றை இந்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
முற்றிலும் தனிநபர் பாதுகாப்பை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது ஆதார் செயலி. வங்கி கணக்கு, பாஸ்போர்ட் விண்ணப்பம் போன்ற எந்த வகையான அரசு சேவைகளாக இருந்தாலும் அவற்றை பெற ஆதார் அவசியமாகி உள்ளது.
திடீர் பயணம் வெளியூர்களில் ஓட்டல்களில் தங்குவதற்கு கூட ஆதார் கட்டாயமாக தேவைப்படுவதால் மக்கள் செல்லும் இடங்களில் எங்கும் ஆதாரை எடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.இது போன்ற சூழல்களில் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டு தவறாக பயன்படுத்தபடுகிறது. இப்பிரச்னைகளுக்கு முடிவு கட்டுவதற்காக ஒன்றிய அரசு
யு.ஐ.டி.ஏ.ஐ உதவியுடன் ஆதார் செயலி ஒன்றை சோதனை அடிப்படையில் அறிமுகம்
செய்துள்ளது.
பார்ப்பதற்கு டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கான செயலி போல் காட்சியளிக்கும் இதனை கியூ ஆர் கோர்டு மற்றும் முக அடையாளம் ஏ.ஐ தொழில் நுட்பம் மூலம் தனிநபர் பயன்படுத்தி கொள்ள முடியும்.100 சதவீதம் தரவு பாதுகாப்புக்கான ஆதார் செயலியை பயனாளர்கள் எப்படி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்ற தகவலையும் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி கூகுள் பிளே அல்லது ஆப்பிள் ஸ்டோரில் mAadhar என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அச்செயலியை திறந்து 12 இலக்க ஆதார் எண் மற்றும் அதனுடன் பதிவு செய்த செல்போன் எண்ணை உள்ளீடு செய்து ஒடிபி மூலம் சரிபார்ப்பது அவசியம். அதனை தொடர்ந்து இ ஆதார் அட்டையை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
ஆதார் அட்டை செயலி வடிவில் வருவதால் இந்தியாவில் பலரும் அப்பாடா என பெருமூச்சு விடுகின்றனர்