காலமும், வெளியும் நிரந்தரமானவை (Time and Space are absolute)என நியூட்டனும், காலமும், வெளியும் ஒன்றையொன்று சார்ந்தவை (Time and Space relative) என ஐன்ஸ்டீனும், ஒளியானது எப்போதும் ஒரே வேகத்தில்தான் பயணிக்கக் கூடியது என மாக்ஸ்வெல்லும் கூறுகின்றனர். இதில் எது உண்மையானது?
நியூட்டன் ஒருபோதும் காலமும், வெளியும் நிரந்தரமானவை என்று பிரகடனப் படுத்தவில்லை. அவர் உண்மையில் அப்படியாக இருக்கலாம் என்று மறைமுகமாகக் கருதினார். ஐன்ஸ்டீன் வந்து ஒரு புதிய விளக்கத்தை அல்லது பார்வையைத் தரும் வரை அனைவரும் அவ்வாறு தான் கருதிக் கொண்டிருந்தார்கள். நவீன வானவியல் கல்வியிலும் (Astronomy), அண்டவியலிலும் (Cosmology) இன்று தவிர்க்க முடியாத கொள்கையாகக் கருதப் படும் பொது மற்றும் சிறப்பு சார்புக் கொள்கைகளை (Relativity) இனை வெளிப்படுத்திய 20 ஆம் நூற்றாண்டின் முக்கிய விஞ்ஞானியான அல்பேர்ட் ஐன்ஸ்டீன் தான் பிரபஞ்சத்தில் உள்ள கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் மற்றும் கருந்துளை போன்ற பல கூறுகளின் இயக்கங்களை கணித ரீதியாக திருத்தமாக வகுக்க வழி வகுத்தவர் ஆவார்.
இவரது கூற்றுப் படி காலமும், வெளியும் ஒன்றை இன்னொன்று சார்ந்தவை ஆகும். இதனைக் காலவெளி (Space-time) என்றும் கூறலாம். மறுபுறம் குவாண்டம் இயற்பியல் கோட்பாடுகளை வகுக்க உதவிய இன்னொரு மிக முக்கிய விஞ்ஞானி ஆன மாக்ஸ்வெல் வெற்றிடத்தில் ஒளியின் வேகம் எப்போதும் மாறிலி என்று கண்டுபிடித்ததுடன் ஐன்ஸ்டீனின் சார்புக் கொள்கைப் படி இது பார்ப்பவரை (Observer) சார்ந்தது அல்ல என்றும் கூட நிரூபணமானது. எனவே ஒளியின் வேகத்தைப் பொறுத்த வரை ஐன்ஸ்டீனும், மாக்ஸ்வெல்லும் ஒன்று படுகின்றனர்.
ஒளியின் இந்த மிகவும் தனித்துவமான இயல்பினால் தான் நாம் எப்போதும் தூரங்களை வரையறுக்க திருத்தமான அலகாக வெற்றிடத்தில் ஒளியின் வேகத்தை எடுத்துக் கொள்கின்றோம். எனவே ஐன்ஸ்டீனுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே கோள்களின் இயக்கங்களுக்கான ஈர்ப்புக் கொள்கைகளை வகுத்த நியூட்டனும் தவறாக எதையும் கூறிவிடவில்லை என்பதுடன், நியூட்டனது ஈர்ப்பு மற்றும் இயக்க விதிகள் ஒளியை விட மிகவும் குறைவான வேகங்களுக்கு இன்றும் பொருந்தி வருவதும், உபயோகப் படுவதும் கூடக் குறிப்பிடத்தக்கது.
- 4தமிழ்மீடியாவுக்காக நவன்